ஆன்மிகம்
அச்சனம்பட்டியில் கன்னிமார் தெய்வமாக வழிபாடு நடத்தப்பட்ட 7 சிறுமிகள், ஐயப்ப பக்தர்களை படத்தில் காணலாம்.

7 சிறுமிகளை கன்னிமார் தெய்வமாக பாவித்து வினோத வழிபாடு

Published On 2018-12-10 05:45 GMT   |   Update On 2018-12-10 05:45 GMT
வேடசந்தூர் அருகே 7 சிறுமிகளை கன்னிமார் தெய்வமாக பாவித்து வினோத வழிபாடு நடத்திய ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
வேடசந்தூர் அருகேயுள்ள அச்சனம்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆழி பூஜை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் ஆழி பூஜை நடந்தது. இதற்காக கடந்த 7 நாட்களுக்கு முன்பு, அந்த ஊரை சேர்ந்த 7 முதல் 10 வயதுக்கு உட்பட்ட 7 சிறுமிகளை தேர்வு செய்தனர். பின்னர் அந்த சிறுமிகளுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் 7 சிறுமிகளுக்கும் மஞ்சள் ஆடை அணிவித்து, கையில் காப்பு கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து 7 சிறுமிகளை சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டது. இதற்காக அந்த சிறுமிகள் கோவிலில் தங்க வைத்து, தெய்வத்துக்கு நடத்துவது போன்று பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் காலை, மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் 7-வது நாளான நேற்று முன்தினம் இரவு காலை, ஆழி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது ஊர் எல்லையில் இருந்து 7 சிறுமிகளும் சப்த கன்னிமார்களாக நெய்விளக்கு ஏந்தி ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு பூக்குழி (ஆழி) வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு 7 சிறுமிகளுக்கு சப்த கன்னிமார் பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி பூஜை செய்தனர். இதைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் 200-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கியது, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, நத்தம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து ஐயப்ப பக்தர்களின் குருசாமியான அழகர்சாமி கூறுகையில், சப்த கன்னிமார் என்பது கிராமத்தை காவல் காக்கும் தெய்வமாகும். அந்த தெய்வங்களாக நினைத்து 7 சிறுமிகளை அழைத்து 7 நாட்கள் கோவிலில் தங்கி விரதம் இருப்போம். பூக்குழி இறங்கும் போது பக்தர்களை காக்கவேண்டும் என்பதற்காக, 7 கன்னிமார்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். கன்னிமார்கள் முன்னிலையிலேயே பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். இதனால் ஐயப்ப பக்தர்கள், பொதுமக்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை ஆகும், என்றார். 
Tags:    

Similar News