ஆன்மிகம்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2018-11-01 09:18 GMT   |   Update On 2018-11-01 09:18 GMT
கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 24­-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருநாளான இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் ரதரோகணம் நடைபெற்றது. பின்னர் வணிக வைசிய சங்கத்தினர் மண்டகப்படிதாரர்கள் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று இரவு 7.30 மணிக்கு வணிக வைசிய சங்கம் சார்பில் மெயின் ரோட்டில் உள்ள 9-ம் நாள் திருநாள் மண்டபத்தில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார மற்றும் தீபாராதனைகள் நடைபெறும் பின்பு அங்கு இருந்து அன்னவாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

10-ம் நாள் திருநாளான நாளை (2-ந் தேதி) காலை அம்மன் பல்லக்கில் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

11-ம் நாள் திருநாளான 3-ந் தேதி மதியம் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமி ரி‌ஷப வாகனத்தில் பூவன நாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். 12-ம் நாளான 4-ந் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதிஉலா நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெறும்.

Tags:    

Similar News