ஆன்மிகம்
ஆனித்திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2018-06-18 06:16 GMT   |   Update On 2018-06-18 06:16 GMT
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆனித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனித்திருவிழா தேரோட்டத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் நெல்லைக்கு வருவார்கள்.

இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து விழா தொடங்குகிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு உயரமான பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோவில் வளாகத்தில் அலங்கரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேசுவரர் தேர்களை சுற்றி பாதுகாப்புக்கு பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் மற்றும் கண்ணாடி கூரைகள் பிரித்து அகற்றப்பட்டன. தேரை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. தேர் செல்லும் வேகத்தை குறைக்க புளியமரத்தடிகள் சீராக வெட்டி தயார் செய்யப்பட்டு வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லைப்பர் கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News