பழனி வைகாசி விசாக திருவிழா நிறைவுநாளையொட்டி, முருகனிடம் கோபித்துக்கொண்டு சென்ற தெய்வானையை ஊடல் பாடல் பாடி சேர்த்து வைத்து தீபாராதனை நடைபெற்றது.
7-ம் திருநாள் தேரோட்டம் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்று சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சுவாமி 4 ரத வீதிகளில் உலா வந்தார்.
அப்போது வைகாசி விசாக திருநாளில் வள்ளியை, முருகன் திருமணம் செய்ததால் மன வருத்தம் அடைந்த தெய்வானை முருகனிடம் கோபித்து கொண்டு தனியாக பல்லக்கில் எழுந்தருளி கோவில் கதவை அடைத்து கொள்ளும் நிகழ்ச்சியும், பின்னர் முருகனின் தூதுவர்கள் ஊடல் பாடல்களை 3 முறை தெய்வானையிடம் பாடி அவரை சமாதானம் செய்து முருகனிடம் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி ஊடல் பாடல்களை ஓதுவார் நாகராஜன் பாடினார்.
அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமியுடன், வள்ளி- தெய்வானை இணைந்து சப்பரத்தில் எழுந்தருளி முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை நிகழ்ச்சிகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் குருக்கள் மற்றும் குருக்கள்கள் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர்.