ஆன்மிகம்

கணபதி மடியில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணர் கோவில் - கேரளா

Published On 2019-06-08 01:36 GMT   |   Update On 2019-06-08 01:36 GMT
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், விநாயகரின் மடியில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் அமர்ந்திருக்கும் அற்புதக் காட்சியை கண்டு தரிசிக்கலாம்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், விநாயகரின் மடியில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் அமர்ந்திருக்கும் அற்புதக் காட்சியை கண்டு தரிசிக்கலாம். இந்த தரிசனம் வேறு எந்த ஆலயத்திலும் கிடைக்காத சிறப்பு கொண்டதாக உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை இங்கே பார்ப்போம்...

தல வரலாறு :

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர், கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை, வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில், அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட, அவர் களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும், அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.

அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர், குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து வேத வியாசரின் கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில், அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து, கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார்.

அதன் பின்னர், அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். கோவில் புதுப்பிக்கப்பட்டு, அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பெற்றது என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு :

இந்தக் கோவில் கருவறையில் அமர்ந்த நிலையில் இருக்கும் கணபதியின் மடியில், குழந்தை வடிவிலான கிருஷ்ணர் அமர்ந்திருக்கிறார். ஆலய வளாகத்தில் சாஸ்தா, பகவதி, அந்திமகாகாலன், பிரம்ம ராட்சசன், ஆயயட்சி ஆகியோருக்கான சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆலயத்தில் கணபதி மற்றும் கிருஷ்ணர் ஆகியோருக்கான சிறப்பு நாட்களில் எல்லாம் வழிபாடுகளும், அபிஷேக, ஆராதனைகளும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.

நோயில் இருந்து விடுபட விரும்புபவர் களுக்கு ‘தடி நைவேத்தியம்’ எனப்படும் பச்சரிசி மாவு படைத்து வழிபடுதல், குழந்தைப் பேற்றுக்காகப் பால் பாயசம் படைத்து வழிபடுதல், முன்னோர் வழிபாட்டுக்கு (பித்ரு கடன்) ‘சதுர்த்தியூட்டு’ எனப்படும் சோறு, காய்கறி படைத்து வழிபடுதல், திருமணத்தடை நீங்குவதற்காக செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் பழமாலை வழிபாடு போன்ற சிறப்பு வழிபாடுகளும் இந்த ஆலயத்தில் நடத்தப்பெறுகின்றன.

இந்தச் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு முன் பதிவு செய்திட வேண்டும். மேலும், வழிபாட்டுப் பொருட்கள் அனைத்தையும் கோவிலில் பணம் செலுத்தியே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களைக் கோவில் வழிபாட்டிற்கு அனுமதிப்பதில்லை.

இந்தத் திருத்தலத்தில் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி தை முதல் நாள் வரையிலான ஐயப்பனுக்குரிய மண்டல வழிபாட்டு நாட்களில் விளக்கேற்றுதல், புஷ்பாஞ்சலி மற்றும் மாலை வழங்குதல் போன்ற நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றன.

தை மாதம் மூலம் நட்சத்திர நாளில் பாகவத சப்தக யஜ்னம் எனும் சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் எட்டு நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா, சித்திரை முதல் நாள் வரும் விசுத் திருவிழா நாளில் வண்ணமயமான ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது.

மேலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பாகவத பிரபாசனம், அகண்ட நாம ஜெபம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பெற்று வருகின்றன.

இந்தக் கோவிலில் ஐயப்பனுக்கான மண்டல வழிபாட்டு நாட்களில், ‘கணேச சங்கீத உத் சவம்’ எனும் பெயரிலான இசைத் திருவிழா நடைபெறுகிறது. இந்த இசைத் திருவிழாவில் இந்தியா முழுவதும் இருந்து பிரபலப் பாடகர்கள், பாடல்களைப் பாடி இறைவனுக்குத் தங்களது இசையைச் சமர்ப்பிக்கின்றனர். புதிய பாடகர்கள், இசை கற்பவர்கள் போன்றோர் இவ்விழாவில் பாடியும், இசை நிகழ்ச்சியை நடத்தியும் இறைவனின் அருளைப் பெறுகின்றனர். இங்கு இசை நிகழ்ச்சி நடத்தவும், பாடல்களைப் பாடவும் கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றிட வேண்டும்.

முக்குற்றி புஷ்பாஞ்சலி:

இந்த ஆலய வழிபாட்டில் ‘முக்குற்றி புஷ்பாஞ்சலி’ எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக, முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன் பறித்து வந்து, வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து விடுகின்றனர். பின்னர் அதனை எடுத்து, விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட தோஷங்கள் இருந்தாலும், அந்தத் தோஷம் விலகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை மட்டுமே நடத்தப்படுவதால், இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், கோவிலில் முன் பதிவு செய்து கலந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருப்பந்தரா என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது மள்ளியூர் திருத்தலம். இத்தலத்திற்குக் கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய இரு நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கோட்டயம் எர்ணாகுளம் சாலையில் கோட்டயம் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலும், எர்ணாகுளம் நகரில் இருந்து 56 கிலோமீட்டர் தொலை விலும் இருக்கும் குருப்பந்தரா சந்திப்பு என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மள்ளியூர் செல்லலாம்.

- தேனி மு.சுப்பிரமணி
Tags:    

Similar News