ஆன்மிகம்

வரங்கள் அருளும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்

Published On 2019-04-23 03:58 GMT   |   Update On 2019-04-23 03:58 GMT
வராக மூர்த்தியானவர், பூவராகப் பெருமாளாக தன் பரிவாரங்களுடன் தங்கிய திவ்ய தேசமே ஸ்ரீமுஷ்ணம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது, வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கடலுக்குள் ஒளித்துவைக்க, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, அசுரனை வதம் செய்து பூமியை மீட்டார். வராக அவதாரம் பற்றி பல்வேறு புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சமயம், மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய நான்கு மகரிஷிகள் வந்தனர். அவர்களை வாயில் காப்பாளர்களான ஜெயன், விஜயன் இருவரும் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த ரிஷிகள், “நீங்கள் பூலோகத்தில் அசுரர்களாக பிறப்பீர்கள்” என்று சாபமிட்டனர்.

அதன்படி அவர்கள் இருவரும், காசியப முனிவருக்கு பிள்ளைகளாக பூலோகத்தில் பிறந்தனர். இரண்யகசிபு, இரண்யாட்சன் என்ற பெயர் களைக் கொண்ட அவர்கள், பல யாகங்களையும், தவங்களையும் செய்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றார்கள். அந்த வரங்களைக் கொண்டு, பூலோக மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்தத் தொடங்கினர். அவர்கள் கொடுமை எல்லை தாண்டியது. கொடிய அசுரர்களான அவர்கள் இருவருக்கும் பயந்து, தேவர்கள் மறைந்து வாழத் தொடங்கினர்.

இரண்யகசிபு, பிரம்மாவை நோக்கி கடும் தவம் இயற்றி, மூன்று உலகங்களையும் ஆளும் வரத்தைப் பெற்றான். இதனால் அவனது சகோதரன் இரண்யாட்சனுக்கு ஆணவம் அதிகரித்தது. அவன் வருண பகவானை பிடித்து துன்புறுத்த நினைத்தான். அப்போது வருணன், “நீ என்னிடம் மோதுவதை விட, வராக அவதாரம் எடுக்கப் போகும் திருமாலிடம் மோதுவதுதான் சிறப்பானது. அவரை வெற்றி கொண்டால், நீ அனைத்தையும் வெற்றி கொண்ட வனாவாய்” என்றார்.

அதன்பிறகு வராக மூர்த்தியைத் தேடுவதே, இரண்யாட்சனின் முழுநேர வேலையாகிப் போனது. ஆனால் எங்கு தேடியும் வராகரைக் காணவில்லை. எனவே பூமியைக் கவர்ந்து சென்று, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். இதனால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. பிரம்மதேவர், பூமியை காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தில் இருந்து கட்டை விரல் அளவு கொண்ட வராகம் தோன்றியது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பிரமாண்டமாக வளர்ந்து நின்றது. மகாவிஷ்ணுவே, வராகமூர்த்தியாக அவதரித்திருந்தார்.

மகாவிஷ்ணு வராகமூர்த்தியாய் வந்துள்ள செய்தியை, நாரதர் மூலம் அறிந்த இரண்யாட்சன் விரைந்து வந்தான். அதற்குள் வராகர், பூமி மறைத்து வைக்கப்பட்டிருந்த கடலுக்குள் நுழைந்து விட்டார். அங்கு வந்த இரண்யாட்சன், வராகரை தடுத்து போரிட்டான். முடிவில் அவனை அழித்த வராகர், தனது இரண்டு கோரை பற்களுக்கு இடையே பூமியை வைத்து கொண்டு கடலுக்குள் இருந்து மேலே வந்தார். அப்படி கடலுக்குள் இருந்து மேல்மட்டத்திற்கு வரும் வழியில், பூமாதேவி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், வராகர் பதிலளித்துக் கொண்டே வந்தார். பின்னர் பூமியை அதன் இடத்தில் நிலை நிறுத்தினார்.

அப்போது அவர் உடலில் இருந்து பெருகிய வியர்வைத் துளிகளால் நித்யபுஷ்கரணி தீர்த்தம் உருவானது. அந்த தீர்த்தத்தின் அருகில் வராகர் ஓய்வெடுத்தார். பின்னர் கண்விழித்து பார்த்தார். அப்போது ஒரு விழிப் பார்வையில் இருந்து அரச மரமும், மறு விழிப் பார்வையில் இருந்து துளசிச் செடியும் உருவானது. தேவர்கள் அனைவரும் வராக மூர்த்தியாக இருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டனர். பின்னர் மகாவிஷ்ணு அங்கிருந்து வைகுண்டம் புறப்படத் தயாரானார். ஆனால் அவரிடம் பூமாதேவி, வராக திருக்கோலத்திலேயே தன்னுடன் சில காலம் தங்கியிருந்து அருள் பாலிக்கும்படி வேண்டியதன் பேரில், பூவராகப் பெருமாளாக அங்கேயே அருள்பாலிக்கத் தொடங்கினார்.

அப்பொழுது, அவருடைய பரிவாரங்களும் பூமியிலேயே தங்கின. திருமால் தன் கைகளில் இருக்கும் சங்குக்கு சங்கு தீர்த்தத்திலும், சக்கரத்திற்கு சக்கர தீர்த்தத்திலும், பிரம்மாவுக்கு பிரம்ம தீர்த்தத்திலும், கருடனுக்கு பார்க்கவ தீர்த்தத்திலும், வாயுவுக்கு கோபுரத்திலும், ஆதிசேஷனுக்கு பலிபீடத்திலும், விஷ்வக்சேனருக்கு வாசலிலும் இடமளித்து அருளினார். அதோடு இங்கு வந்து தன்னை வழிபடுபவர்களை எமதூதர்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும் பணியை ஆதிசேஷனுக்கும், வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை பிரம்மாவுக்கும் வழங்கினார்.

இப்படி வராக மூர்த்தியானவர், பூவராகப் பெருமாளாக தன் பரிவாரங்களுடன் தங்கிய திவ்ய தேசமே ஸ்ரீமுஷ்ணம். வராகப் பெருமாள் அவதரித்து, பூமியை மீட்ட தினம் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியாகும். அன்றைய தினம் வராக ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

மூலவர் ஸ்ரீ பூவராகப் பெருமாள் என்றும், தாயார் அம்புஜவல்லி என்னும் பெயர் பெற்றுள்ளனர். உற்சவரின் திருநாமம் ஸ்ரீதேவி- பூதேவி சமேத யக்ஞவராகர் என்பதாகும். தல விருட்சம் அரச மரம். தல தீர்த்தம் நித்ய புஷ்கரணி. இந்தத் திருத்தலத்தை பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆண்டாள் ஆகியோர் பாடல்கள் மூலம் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில், பிரம்மா பூஜைகள் செய்ய, சரஸ்வதி பூஜைக்கான கானம் இசைப்பார் என்பது ஐதீகமாக இருக்கிறது.

மேற்கு நோக்கிய இந்த ஆலயம், ஏழுநிலைக் கோபுரத்துடன் ஒன்பது கலசங்களைத் தாங்கியபடி நிற்கிறது. ஆலயத்திற்குள் நுழைந்ததும் கலை நயமிக்க தூண்களைக் கொண்ட புருஷசூக்த மண்டபம் உள்ளது. அதில் கருடாழ்வாரும், கருவறையின் முன்பாக காவல்புரியும் ஜெய, விஜயர்களும் துவாரபாலகர்களாக இருக்கிறார்கள்.

கருவறையில் பூவராகப் பெருமாள் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இரு கரங்களுடன் இடுப்பில் கைவைத்த கோலத்தில், இரண்டு தேவியரோடு காட்சியருள்கிறார். இவரது தோற்றம் மேற்கு நோக்கியதாக இருந்தாலும், முகம் தெற்கு நோக்கி இருக்கிறது. இவரது திருமேனி சாளகிராமத்தால் ஆனது. விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில், சிற்ப வேலைப்பாடு நிறைந்த கோவிலாகும்.

ஆலய பிரகாரத்தில் ஆண்டாள் சன்னிதி, பரமபத வாசல் கோபுரம், சப்தமாதர்கள் சன்னிதி, உடையவர் சன்னிதி, சேனை முதலியர் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதிகள் இடம் பெற்றுள்ளன. சப்தமாதர்களை வேண்டிக் கொண்டு அங்குள்ள வேப்பமரத்தடியில் குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழி படுகின்றனர். தெற்குப் பக்கம் தனி சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அருள்பாலிக்கிறாள். வளையமாதேவி என்ற ஊரில் கார்த்தியாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தல பெருமாளைத் திருமணம் செய்துக் கொண்டவர் அம்புஜவல்லித் தாயார்.

ஆலயத்தின் பின்புறத்தில் தல தீர்த்தமான நித்யபுஷ்கரணி தீர்த்தமும், தலவிருட்சமான அரசமரமும் இருக்கின்றன. நித்யபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி அரசமரத்தைச் சுற்றிவந்து பெருமாளையும் தாயாரையும் உள்ளம் உருக வழிபட்டால், குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. வராகப் பெருமாளை வணங்குவோர் நீண்ட புகழ், நிலைத்த செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் பெறுவர் என்பது புராணங்கள் சொல்லும் தகவல்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம் :

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். சென்னை, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திருச்சி, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து இவ்வாலயத்திற்கு நேரடி பேருந்து வசதி உள்ளன.
Tags:    

Similar News