ஆன்மிகம்

தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

Published On 2019-04-03 02:21 GMT   |   Update On 2019-04-03 02:21 GMT
திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தை பற்றியும், அங்கு வீற்றிருக்கும் இறைவனைப் பற்றியும் சில செய்திகளை இங்கே பார்ப்போம்.
மனித வாழ்வில் பல சோதனைகள், வேதனைகள் இருக்கத்தான் செய்யும். அது அவரவர் செய்த கர்ம வினைகளின் பலன் ஆகும். தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்? ஆனால் அப்படிப்பட்ட தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த ஆலயங்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தை பற்றியும், அங்கு வீற்றிருக்கும் இறைவனைப் பற்றியும் சில செய்திகளை இங்கே பார்ப்போம்.

நம்மைப் படைத்த பிரம்மனுக்கு தனி சன்னிதிகளோ, ஆலயங்களோ அதிகம் கிடையாது. காரணம் பிரம்மனின் அகந்தை. சிவனுக்கு நிகராக ஐந்து தலைகளைப் பெற்ற கர்வத்தில் ஆணவமாகப் பேசிய பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார் சிவ பெருமான். அதோடு அவரது படைப்புத் தொழிலுக்கு தடை விதித்தார். தன் தவறை உணர்ந்த பிரம்மன், சிவனைப் பணிந்து அனுதினமும் பல தலங்களில் சிவலிங்கங்கள் உருவாக்கி பூஜைகள் செய்ததன் பலனாக இழந்தவைகளை மீண்டும் பெற்றார். பிரம்மனின் சாபத்தை, சிவபெருமான் போக்கி அருளிய இடமே திருப்பட்டூர். இங்கு பிரம்மனுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

இத்தலத்தில் சிவனை அபிஷேகிப்பதற்காக, பிரம்மன் உருவாக்கிய தீர்த்தக்கிணறு ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. வழிபாட்டுக்காக பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்கள், இங்கே 12 சிறிய சன்னிதிகளில் பக்தர்களால் வணங்கப்படுகிறது. பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்களுடன், இங்குள்ள பிரம்ம புரீஸ்வரரையும் வணங்கும்போது, சிவபெருமானின் 13 திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

பாதாள ஈஸ்வரர், சுத்த ரத்தினேஸ்வரர், தாயுமானவர், கயிலாசநாதர், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர், லால்குடி சப்தரிஷிஸ்வரர், திருஅண்ணாமலையார், பழமலைநாதர், பிரம்ம புரீஸ்வரர், காளத்திநாதர், ஏகாம்பரரேஸ்வரர், மண்டூகநாதர் ஆகிய சிறப்பான சிவத்தலங் களின் லிங்கங்களே பிரம்மாவால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆதிகோவிலாக அறியப்படும் கயிலாசநாதர் சன்னிதியில் நம்பிக்கையான வழிபாடுகள் அதற்குரிய பலனைத் தரும்.

இங்கு அருள்பாலிக்கும் பிரம்மதேவனே, குரு பகவானாக வணங்கப்படுகிறார். எனவே அவருக்கு மஞ்சள் காப்பு செய்து ஆராதனை நடைபெறுகிறது. குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளிலும், சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமைகளிலும், ராஜகிரகமான சூரியனின் ஆதிக்கம் உள்ள ஞாயிற்றுக்கிழமையிலும் இத்தலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.

வருடந்தோறும் பங்குனி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சூரியன், தன் கதிர்களால் சிவபெருமானை வழிபடும் காட்சி அற்புதமானது. அந்த நாட்களில் காலை ஆறு மணிக்கு சென்றால் இந்த அற்புதக் காட்சியை கண்டு ரசிக்கலாம். சூரியன் ஈசனை வழிபடும் தினத்தில் இங்கு வந்து, பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மனையும் வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.



இங்குள்ள கயிலாசநாதர் கோவில் புகழ்பெற்ற பல்லவர் காலக் கட்டுமானச் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதைக் காணலாம். ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இதன் தேர் வடிவிலான கோவில் அமைப்பும், எந்நேரமும் மேலிருந்து விழும் அபிஷேகத்தில் குளிர்ந்தவராக அருளும் பதினாறு பட்டைகள் கொண்ட தாராலிங்கமாக இங்கே ஈசன் அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்தை ‘சந்திரகலா லிங்கம்’ என்கின்றனர். இந்த சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தி, நிஜ உருவத்தைப் போன்று அமைந்து வியக்க வைக்கிறது.

ஈஸ்வரருக்கு 64 மூர்த்தங்கள் உண்டு. அதில் தத்புருஷ மூர்த்தங்கள் 25 வகை என்கின்றன சைவ நூல்கள். அவற்றுள் காலபைரவரும் ஒருவர். நம் பாவபுண்ணியக் கணக்குகளை கணித்து நமக்கு நன்மைகளை வழங்குவதில் காலபைரவர் நிகரற்றவர். பொதுவாக வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி உள்ள காலபைரவரையே தரிசித்திருப்போம். ஆனால் திருப்பட்டூர் தலத்தில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கால பைரவர். இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதும் கூடுதல் சிறப்பு.

இந்த ஆலயத்தில் 36 தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன் களைத் தரும் என்பது நம்பிக்கை. நம்மை ஆட்சி செய்யும் 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் வகையில் 36 தீபங்களை ஏற்றி, ஒன்பது முறை பிர காரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்யும்போது, நமது துன்பங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷங்கள் நீங்கும் என் கிறார்கள். ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திர நாளிலும் இங்கு வந்து இந்தப் பிரார்த்தனையைச் செய்வது நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

பிரம்மாவின் தலையைக் கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபடுவதற்காக, மகாவிஷ்ணுவை சிவபெருமானை வழிபட்டார். இதனால் மகிழ்ந்த விஷ்ணு, ஈசனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியருளினார் என்பது புராண வரலாறு. அதன்படி மகாவிஷ்ணுவுக்கும் இங்கு தனிக் கோவில் இருக்கிறது. பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தின் மேற்குப்பகுதியில் அது அமைந்துள்ளது. இந்த வரதராஜப் பெருமாள் திருக்கோவில், எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகும்.

இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று பிரதோஷ வேளை. இத்தலத்தில் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் போது, அங்கிருந்தபடி ஒரு துணில் இருக்கும் நரசிம்மரையும் தரிசிக்க முடியும். ஒரு பிரதோஷ நாளில்தான் மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தார். ஆகவே பிரதோஷ நேரத்தில் நந்தியோடு, நரசிம்மரையும் வழிபட்டால் நம் இன்னல்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தில் நுழைந்து, ஐந்தெழுத்து நாயகனான சிவனாரை தரிசித்தால் வாழ்வின் ஐந்து நிலைகளிலும் நம்மைக் காத்து ரட்சிப்பார் இத்தல இறைவன். அதே போல் கோபுர வாசலில் இருந்து ஏழு நிலைகளை கடந்துதான் இறைவனை தரிசிக்க முடியும். சூரிய பகவானே தன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன், ஏழு நிலைகளைக் கடந்தே சிவனாரை தரிசிக்கிறார் என்பது ஐதீகம். ஆகவே இங்கு வந்து தரிசிப்பவர்களின் ஏழேழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்கிறார்கள்.
Tags:    

Similar News