ஆன்மிகம்

பித்ரு தோஷம் நீக்கும் குணசீலம் தார்மீக நாதர் ஆலயம்

Published On 2019-03-12 06:27 GMT   |   Update On 2019-03-12 06:27 GMT
500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது குணசீலத்தில் உள்ள தார்மீக நாதர் ஆலயம். இது ஒரு பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சூறைக்காற்று, பேய் மழை, ஊரெங்கும் வெள்ளம். காவிரியில் நொங்கும் நுரையுமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரளயம் ஏற்பட்டு விட்டதோ என மக்கள் மனதில் அச்சம் பரவத் தொடங்கியது.

வெள்ளத்தில் உருக்குலைந்த எந்த ஆலயத்திலிருந்தோ சிவபெருமானின் திருமேனி ஒன்று காவேரி வெள்ளத்தில் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டு வந்தது. வந்த வேகத்தில் அந்த திருமேனி இரண்டாகப் பிளந்தது. அதன் ஒரு பகுதி காவிரியின் வடகரையிலும் இன்னொரு பகுதி தென்கரையிலும் ஒதுங்கியது.

வடகரையில் ஒதுங்கிய திருமேனி சித்தர் ஒருவரின் பார்வையில் பட்டது. அவர் அந்தத் திருமேனியை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து சிறிய ஆலயம் அமைத்தார். காலப்போக்கில் அந்த ஆலயம் படிப்படியாக திருப்பணி நடந்து பல மன்னர்களில் கருணைப் பார்வையால் அழகான ஒரு ஆலயமாக உருவெடுத்தது. அந்த ஆலயமே குணசீலத்தில் உள்ள தார்மீக நாதர் ஆலயம். இது செவி வழி வரலாறு

இங்கு அருள்பாலிக்கும் இறைவன் தார்மீக நாதர். இறைவியின் பெயர் ஹேமவர்ணேஸ்வரி. ஆலயம் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

கிழக்கு திசை நோக்கி ஆலயம் அமைந்திருந்தாலும் தென் புறத்திலும் சாலையை ஓட்டி அழகிய முகப்புடன் நுழைவு வாசல் உள்ளது. உள்ளே நுழைந்ததும் அகன்ற பிரகாரம். நடுவே நந்தியும், பலிபீடமும் உள்ளது.

பொதுவாக சித்தர்கள் நடமாடிய ஆலயத்திலோ அவர்கள் ஆலய அமைப்பிற்கு உதவி இருந்தாலோ நந்தியின் அமைப்பு மாற்றத்துடன் காணப்படும். இது போன்ற ஆலயங்களில் நந்தி பகவான் தனது இரண்டு கால்களையும் மடித்தப்படி படுத்திருப்பார். இங்கும் அப்படித்தான் காட்சி தருகிறார். பிற ஆலயங்களில் நந்தி பகவான் ஒரு காலை சற்றே மடக்கியும் இன்னொரு காலை மடித்தபடியும் காட்சி தருவார்.

இந்த ஆலயத்தில் சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். அடுத்து உள்ள மகா மண்டபத்தில் வலது புறம் அன்னை ஹேமவர்ணேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை இங்கு நின்ற திருக்கோலத்தில் தென்திசை நோக்கி புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இரண்டு கரங்கள் அவை அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகின்றன.

அடுத்து மகா மண்டபத்தில் கருவறை நுழைவுவாயிலின் இடது புறம் கற்பக விநாயகரும், வலது புறம் சண்முகர் என்ற திருநாமத்துடன் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர். இங்கு முருகப்பெருமானின் வாகனமான மயிலின் தலைப் பகுதி முருகனின் இடதுபுறம் இருப்பது அபூர்வ அமைப்பாக சொல்லப்படுகிறது. பொதுவாக மயிலின் தலைப்பகுதி முருகனின் வலது புறம் இருப்பது தான் வழக்கம்.

கருவறையில் இறைவன் தார்மீகநாதர் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் பிளவுபட்ட திருமேனியின் பகுதி பின்புறம் உள்ளதால் தரிசனம் செய்யும் போது நமக்கு எந்த வேறுபாடும் தெரியாது.

இங்கு அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்தால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தார்மீகநாதர், ஹேமவர்ணேஸ்வரி

இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும் சிவ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் வடக்கில் சண்டிகேஸ்வரரும் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் கிழக்கில் காலபைரவரும் அருள்பாலிக்கின்றனர். ஆலய தல விருட்சம் வில்வம் கிழக்கு பிரகாரத்தில் தழைத் தோங்கி நிற்கிறது.

துர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்திலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும் காலபை வரருக்கு தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னை விதம் விதமான அலங்காரத்தில் காட்சி தருவாள். 10-ம் நாள் இறைவன் இறைவி அம்பு போடும் வைபமும் நடைபெறும். அன்று இறைவன் - இறைவி ரிஷப வாகனத்தில் வீதியுலா வருவார்கள்.

முருகப்பெருமானுக்கு மாத கார்த்திகை மற்றும் சஷ்டி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. கார்த்திகை மாத கார்த்திகை அன்று ஆலயத்தின் முன் சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபமும் நடைபெறும்.

இங்கு முருகப்பெருமானின் பின்புறம் உள்ள திருவாசி கல்லில் வடிவமைக்கப்பட்டு இறைவனுடன் இணைந்தே காணப்படுவது சிறப்பான அம்சமே. கார்த்திகை மாத சோம வாரங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

பத்ம பீடத்தில் அருள்பாலிக்கும் இறை வனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் பல நூறு பக்தர்கள் சூழ வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

இது ஒரு பித்ரு தோஷ நிவர்த்தி தலம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் முதல் நாள் இரவு இந்த ஊரில் வந்து தங்குகின்றனர். அவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து ஆலயம் வருகின்றனர். பூமாலை அர்ச்சனை பொருட்களுடன் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய தட்டை அர்ச்சகரிடம் தருகின்றனர். அர்ச்சகர் அவர்களைப் பற்றிய விவரங்களை கேட்டபின் இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறார். அர்ச்சனை முடிந்ததும் தோஷம் உள்ளவருக்கு கழுத்தில் ஒரு மாலையை சூட்டி, அர்ச்சனை செய்த தட்டை அவரிடம் தருகிறார். பின் இறைவியின் சன்னிதிக்கு செல்கிறார். அங்கும் அர்ச்சனை செய்தபின் அர்ச்சகர் அன்னையின் கரத்திலிருக்கும் ஒரு ரட்சையை (முடிகயிறு) கொண்டு வந்து தோஷ பாதிப்பு உள்ளவர் கரத்தில் கட்டுகிறார்.

பின்னர் அந்த நபர், இறைவன் - இறைவி ஆலயத்தை 12 முறை வலம் வர வேண்டும். தொடர்ந்து சன்னிதி முன்பாக அமைந்து, குறைந்தது 15 நிமிடங்கள் தியானத்தில் மூழ்கினால், அவர்களின் தோஷம் அறவே நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை மட்டுமே இந்த பித்ரு தோஷ நிவர்த்தி அர்ச்சனை நடைபெறுகிறது. அன்று ஆலயம் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட பக்தர்களால் நிரம்பி வழியும்.

காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

திருச்சி - முசிறி பேருந்து சாலையில் திருச்சியில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், முசிறியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ள குணசீலத்தில் உள்ளது இந்த ஆலயம்.
Tags:    

Similar News