ஆன்மிகம்

மன ஆறுதலை அளிக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

Published On 2019-02-18 02:11 GMT   |   Update On 2019-02-18 02:11 GMT
பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு.
மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுபவர் பரசுராமர். இவர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம் இன்றைய கேரளா. இப்படி இறைவனின் ஆட்சியும் இயற்கையின் ஆட்சியும் நடப்பதால் தான், கேரளாவிற்கு ‘கடவுளின் தேசம்’ என்றும் பெயர் வந்தது. கேரளாவில் உள்ள அம்மன் கோவில்களுக்கென்று தனியாக பெயர்கள் இல்லை. அனைத்து அம்மனுமே ஊரின் பெயரோடு இணைத்து ‘பகவதி அம்மன்’ என்றே அறியப்படுகிறார்கள்.

பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பொங்கல் திருவிழா, இந்த ஆலயத்தின் சிறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு, திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், தெருக்கள் என்று பல இடங்களிலும் பெண்கள் கூடி பொங்கல் வைப்பார்கள்.

இந்த விழாவானது, பல லட்சம் பேர் அதுவும் பெண்களால் மட்டுமே வைக்கப்படும் பொங்கல் விழாவாகும். அதோடு இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்ததாக, இந்த கோவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. அதே போல் 2009-ம் ஆண்டு 30 லட்சம் பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தது, முந்தைய சாதனையை முறியடித்தது. இப்படி ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

மதுரையை எரித்த பிறகு, கண்ணகி கேரள தேசம் சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு சென்ற கண்ணகி தேவியை, மன அமைதி அடையச் செய்வதற்காக பெண்கள் பலரும் அவளுக்கு பொங்கல் வைத்து நைவேத்தியம் படைப்பதாக ஐதீகம். மகிஷாசுரனை வதம் செய்த அம்பாள், பக்தர்களின் முன்பாக காட்சி தந்தாள். அவளை வரவேற்கும் விதமாக, பெண்கள் பலரும் பொங்கல் வைத்தனர். அதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது என்று மற்றொரு ஐதீகமும் சொல்லப்படுகிறது.

ஆலய வரலாறு :

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் தோன்றியதற்கான ஆதி கதையை தெரிந்து கொள்வோம். சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகி தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல என்பதை, பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கு இரையாக்கினாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில், ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே இங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

தவிர ஆற்றுக்கால் பகவதி அம்மன் தோன்றியதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய அழகுச் சிறுமி ஒருத்தி வந்தாள். அந்த சிறுமியைக் கண்ட பக்தர், அம்மனே சிறுமியின் உருவில் வந்திருப்பதாக எண்ணினார்.

அதே நேரம் பக்தரைப் பார்த்து அந்த சிறுமி, “ஐயா! என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா?” என்று கேட்டாள்.

ஆனால் அன்னையின் உருவமாக அந்த சிறுமியைக் கண்ட பக்தருக்கு அவளை பிரிய மனம் வரவில்லை. எனவே அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க நினைத்தார். அதை அந்த சிறுமியிடம் அவர் சொல்ல முற்பட்டபோது, சிறுமி மறைந்தாள். சிறுமி வடிவில் வந்தது அம்பாள் தான் என்பதை எண்ணி, பக்தர் மனம் மகிழ்ந்தார்.

அன்று இரவு பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, “தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்” என்றாள்.

மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். தொடர்ந்து அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அம்மனை வழிபட்டார். அதுவே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயமாக எழுச்சியுற்றதாக கோவில் வரலாறு சொல்கிறது.

கோவில் அமைப்பு:

ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் இருக்கும் ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

ஆலய நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. அம்மனின் கருவறை ‘ஸ்ரீகோவில்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலய வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.

சிறுமிகளின் ஊர்வலம்:

இந்த ஆலயத்தின் பொங்கல் விழா நடைபெறும் அன்று காலையில், சிறுமிகள் பலர் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதானத்திற்கு, குடும்பத்துடன் வந்து அம்மனை வழிபட்டு திரும்புவார்கள். இதை ‘தாலிப்பொலி’ என்று கூறுகிறார்கள். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனுக்குரிய பூஜை பொருட்களை வைத்து, தீபத்தையும் ஏற்றி வைத்து கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பெற்றோர், உறவினர்கள் வருவார்கள். இந்த வழிபாட்டால், சிறுமிகளுக்கு நோய் நொடி வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சிறுவர்களின் குத்தியோட்டம் :

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில், சிறுவர்களின் குத்தியோட்டமும் சிறப்புமிக்கதாகும். அதாவது 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டை நடத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் மகிஷாசுரமர்த்தினியுடன் ேபாரில் கலந்துெகாண்டு காயமடைந்த படைவீரர்களாக கருதப்படுகிறார்கள். திருவிழா தொடங்கிய மூன்றாம் நாள் சிறுவர்கள் தலைமை அர்ச்சகரிடம் பிரசாதம் பெற்று, கோவிலில் தனி இடத்தில் 7 நாட்கள் தங்கியிருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். அந்த 7 நாட்களில் தினமும் நீராடி அம்மனுக்கு சன்னிதியில் ஈர உடையுடன் நின்றபடி 1008 நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். இந்த விரதத்தை மேற்கொள்வதால், சிறுவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
 
அமைவிடம் :

திருவனந்தபுரத்தில் இருந்து கிழக்கு கோட்டை சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றுக்கால் திருத்தலம் அமைந்துள்ளது. 
Tags:    

Similar News