ஆன்மிகம்

ஆண்களே பொங்கல் வைத்து வழிபடும் ‘அஞ்சலான் குட்டை முனியப்பன்’ கோவில்

Published On 2019-02-17 04:28 GMT   |   Update On 2019-02-17 04:28 GMT
அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று அடுப்பூதி பொங்கல் வைக்கின்றனர். நேர்த்திகடன் தீர்க்க ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு, கறி சமைத்து சுவாமிக்கு படையல் வைத்து வழிபடுகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 3 கி.மீ., தூரத்தில், கொட்டிப்பள்ளம் நீரோடை அருகே சிங்கிபுரம் ஊராட்சி பழனியாபுரம் காலனி எல்லையில், மிரட்டும் கண்கள், முறுக்கு மீசை, கையில் அரிவாள் சகிதமாக கம்பீரமாக காட்சியளிக்கும் பழமையான முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. ‘அஞ்சலான் குட்டை’ அருகே அமைந்ததால், இக்கோவில் ‘அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயில்’ என பெயர் பெற்றது.

இரு நூற்றாண்டுக்கு முன், சிங்கிபுரம் காலனி மலைக் குன்றுக்கு அருகில் ஒரு கிராமம் இருந்துள்ளது. தனியாக இருந்த அக்கிராமத்திற்கு அடிக்கடி கொள்ளையர்கள் சென்று, மக்களை தாக்கி பொருட்களை பறித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களின் அட்டகாசத்தால், அங்கு வசித்த மக்கள் வேறு பகுதியில் குடியேறியுள்ளனர். அதனால், அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவில் ஆள் நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பகுதியில் தனிமையானது.

வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பெண்கள் சென்றால் ‘முனி’ தாக்குவதாகவும், இரவில் குறி சொல்லும் குடுகுடுப்பை வேட்டுவர்கள் கோவிலில் தங்கி சக்தி திரட்டுவதாகவும் கருதி, பெண்கள் சென்றால் தெய்வக்குற்றம் ஏற்படுமெனக் கூறி, பெண்கள் செல்லவும் வழிபடவும் முன்னோர்கள் தடை விதித்துள்ளனர். அதனால், இரு நூற்றாண்டுகள் கடந்தும் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை.

ஆண்கள் மட்டுமே சென்று அடுப்பூதி பொங்கல் வைக்கின்றனர். நேர்த்திகடன் தீர்க்க ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு, கறி சமைத்து சுவாமிக்கு படையல் வைத்து வழிபடுகின்றனர். சுவாமிக்கு வைத்த பொங்கல் மட்டுமின்றி, சமைத்த கறியையும் பெண்கள் சாப்பிடுவதில்லை. சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக கருதப்படும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் விபூதியை கூட, பெண்கள் வைத்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கற்சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ள மூலவருக்கு வட திசையில், சடாமுனி, வாயுமுனி, செம்முனி ஆகிய ராட்சத உருவம் கொண்ட மூன்று முனியப்பன் சுவாமி சிலைகள் நூற்றாண்டு கடந்து காணப்படுகிறது. அந்த சுவாமி சிலைகளுக்கு பக்தர்கள் அவ்வப்போது வர்ணம் தீட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

ஆண்களே பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலிகொடுத்து கறி சமைத்து உண்டு மகிழ்ந்து வழிபடும் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு, வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமின்றி, சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் வாரந்தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் குவிந்து வருவது குறிப்பிடதக்கதாகும்.

நல்ல மனைவி அமைய நண்பர்களுக்கு கிடா விருந்து

நல்ல மனைவி அமையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், வீடு, மனை, தொழில் வளம் சேரவும், நோய் நீங்கி நலம் பெறவும் வரம் கேட்கும் ஆண் பக்தர்கள், சுவாமி அருளால் நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறினால், கேட்ட வரம் கொடுத்த முனியப்ப சுவாமிக்கு நேர்த்திகடன் தீர்க்க ‘கிடா’ வெட்டி , நண்பர்களுக்கு விருந்து வைப்பது அக்கோவிலின் சிறப்பாகும்.

நேர்த்தி கடனுக்காக குதிரை, மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடை சிற்பங்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் சிற்பங்களையும் கோவில் வளாகத்தில் செய்து வைப்பதும், அந்த சிற்பங்களுக்கும் படையல் வைத்து பூஜை செய்து வழிபடுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News