ஆன்மிகம்

திருமண வரம் தரும் பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில்

Published On 2019-02-06 01:20 GMT   |   Update On 2019-02-06 01:20 GMT
காவிரி வடகரைத் தலங்களில் மிகவும் பெரிய கோவிலாகத் திகழ்வது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சோழநாட்டு தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் மிகவும் பெரிய கோவிலாகத் திகழ்வது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். திருக்குளமும், எதிரே நந்தி மண்டபமும், ஐந்து நிலை ராஜகோபுரமும் ஆலயத்தை அழகு செய்கின்றன. ‘பந்தணை நல்லுர் நின்ற எம் பசுபதியாரே’ என்று திருஞானசம்பந்தரும், ‘பந்தணை நல்லுராரே’ என்றும், ‘எம்மை ஆளும் பசுபதியே’ என்றும் திருநாவுக்கரசரும் உருகிப் பாடிய திருத்தலம் இது.

பழமையான மண்டபங்கள் உள்ளடக்கியது மட்டுமின்றி திருநாவுக்கரசர் வாசல், மவுன குருவாசல், ராமலிங்கர் வாசல், அருணகிரி வாசல், ஞான சம்பந்தர் வாசல் என்று கோவிலுக்குள்ளேயே, இத்தலம் வந்து பாடிய அடிகளார்களின் பெயர்களில் நுழைவு வாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. ஆலயத்திற்குள் மூலவர் பசுபதீஸ்வரர், சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். புற்று வடிவான சிவலிங்கம் மீது பசுவின் குளம்படி பட்ட வடுவும், பந்து மோதிய வடுவும் தெரிகிறது. குவளை சாத்தி தான் மூலவருக்கு அபிஷேகம் செய் கிறார்கள்.

இறைவி, மூங்கில் தோள் அம்மையாக, ‘காம்பனைய தோளி’ என்ற தனித்தமிழ்ப் பெயருடன் தனிச் சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னை தனது வலது கையில் சக்கரமும், இடது கையில் கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள். பெரும்பாலான கோவில்களில் தெற்கு பார்த்தும், சில கோவில்களில் கிழக்கு அல்லது மேற்கு பார்த்தும் இருக்கும் அம்பாள், இந்த ஆலயத்தில் வடக்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்புக்குரியது.

புராண வரலாறு :

திருக்கயிலையில் ஒரு நாள், பார்வதி தேவி, நான்கு வேதங்களையும் பந்து களாக்கி தனது தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அன்னையின் அந்த அற்புத விளையாட்டை, சூரியனும் கூட மறைவதை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பெரும் பகல் பொழுதால், உயிர்கள் அனைத்தும் சோர்வுற்றன. பார்வதியின் தவறை உணர்த்தச் சென்ற நாரத முனிவரையும், சிவபெருமானையும் கண்டுகொள்ளாமல் பார்வதி விளையாட்டில் மும்முரமாக இருந்தாள். இதனால் கோபம் கொண்ட ஈசன், அந்த பந்தை காலால் உதைக்க, அது மண்ணுலகில் கொன்றைக் காட்டில் வந்து விழுந்தது. அந்த இடமே ‘பந்தணை நல்லூர்’ என்றானது.

சிவனின் கோபத்தால் பராசக்தி, பசுவாக மாறினாள். தனக்கு சுய உருவம் கிடைக்க இத்தலம் வந்து கொன்றை காட்டில் புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து வழிபட்டாள். அவளுக்கு காவலாக திருமால், மாடு மேய்க்கும் ஆயனாகி வந்தார். அவர்கள் இருவரும் அங்கிருந்த கன்வ முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். ஒரு நாள் பசுவின் காலடி பட்டு, புற்றுக்குள் இருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது. அதன்பின்னர் பார்வதியும், திருமாலும் சுய உருவம் பெற்றனர். அன்னை வடக்கு பார்த்து தவம் இருந்து ஈசனை மணந்து கொண்டாள் என்கிறது தல புராணம். அன்னை பார்வதி தேவி ஈசனை நோக்கி தவம் இருந்த போது, அவளுக்கு இடையூறு வராத படி, அஷ்டபுஜ பத்ரகாளியும், அய்யனாரும், முனீஸ்வரரும் காவல் இருந்தனர்.

ஆலயத்தின் கோபுர வாசலில் வட புறம் இருக்கும் ‘முனீஸ்வரர்’, இன்றும் மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். இவரை நம்பிக்கையுடன் வழிபடுவோரின் மனசஞ்சலங்களை அகற்றுகிறார். இங்கு எலுமிச்சம்பழம், முடிகயிறு போன்றவை ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படுகிறது. திரளான மக்கள் வினைதீர முனீஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

சுவாமி சன்னிதிக்கு நுழையும் முன்பாக, வலதுபுறத்தில் தென் திசை நோக்கி தனி விமானத்தின் கீழ் கல்யாண சுந்தரேஸ்வரர் அருள்பாலிக் கிறார். இறைவனுடன் அம்பிகையும் வீற்றிருக்கிறார். இந்த ஆலயம் திருமண வரம் அருளும் தலம் என்பதால், இங்கு சிறப்பு வாய்ந்த மூர்த்தியே, கல்யாண சுந்தரேஸ்வரர் தான். இவரை அமாவாசை தினங்களில் அபிஷேக ஆராதனை செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, 11 முறை வலம் வந்து வழிபட வேண்டும். தவிர மாசிமகப் பெருவிழாவின் 7-ம் நாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் பெரும் பலன் கிடைக்கும். இந்த நிகழ்வின் போது பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

காம்பிலி நாட்டு மன்னன் பூபதி சூடாமணி. இவனது மகன் பிறக்கும்போதே கண்பார்வையை இழந்தவன். அவன் இத்தலம் வந்து மண்ணியாற்றில் நீராடி பசுபதீஸ்ரவரை வணங்கி கண் பார்வை பெற்றான். இதனால் இத்தலம் கண்ணொளி வழங்கும் ஆலயமாகவும் திகழ்கிறது. இத்தல இறைவனுக்கு திங்கட் கிழமையில் வில்வ அர்ச்சனையும், 5 நைவேத்தியங்கள் படைத்தும் வழிபட்டால் பித்ரு தோஷம் விலகும் என்கிறார்கள்.

ஆலயத்தில் வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமான் வீற்றிருக்கிறார். இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன. கோஷ்டத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் அற்புதங்கள் நிறைந்தவள். ஆலயத்தின் தல விருட்சம், சரக்கொன்றை மரம் ஆகும்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரி சனத்திற்காக திறந்திருக்கும்.

அமைவிடம் :

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்ப கோணத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பந்தணைநல்லூர் உள்ளது. குடந்தை அணைக்கரை சாலையில், தத்துவாஞ்சேரியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், மணல் மேட்டில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது. குடந்தை, மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
Tags:    

Similar News