ஆன்மிகம்

திதியும் விதியும் மாறிய திருக்கடையூர் திருத்தலம்

Published On 2019-01-31 03:14 GMT   |   Update On 2019-01-31 03:14 GMT
விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம்.இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தன்னை தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததோடு, 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை, என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் அமிர்தகடேஸ்வரர். அதுபோல தம் பக்தனின் வாக்கை மெய்ப்பிப்பதற்காக, அமாவாசை திதியையே பவுர்ணமி திதியாக மாற்றிக் காட்டியவள் இத்தல அபிராமி அன்னை. இப்படி விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம்.

இதில் அபிராமி அன்னையின் திருவிளையாடல் சிறப்புக்குரியதாகும். திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர், அமிர்தலிங்கம். இவரது தவப்புதல்வன் சுப்பிரமணியன். இவர் இயல்பாகவே அன்னை அபிராமியிடம் தனியொரு ஈர்ப்பு பெற்றவர். அதன் காரணமாகவே பின்னாளில் அபிராமி ஆலயத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் பணியை சிறப்பாக செய்து வந்தார். திருமணமாகியும் இல்லறத்தில் பற்றற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். இதனால் மக்கள் பலரும் இவரை பித்தன், கிறுக்கன் என்று பரிகசித்து வந்தனர்.

அந்த காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு, இரண்டாம் சரபோஜிராவ் போன்ஸ்லே எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். ஒரு தை அமாவாசை நாளில் அவர் திருக்கடையூர் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் அபிராமி சன்னிதியில் இருந்த சுப்பிரமணியன், தன்னை மறந்து அபிராமியை நினைத்து யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அதனால் மன்னரின் வருகையை அவர் கவனிக்கவில்லை.

சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம்,‘தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பாருங்கள். இவர் ஒரு பித்தன். இங்கு தினமும் பஞ்சாங்கம் வாசிப்பார்” என்று புகார் கூறினர். சரபோஜி மன்னர், அந்த புகாரை உடனடியாக நம்பிவிடவில்லை.

மாறாக சுப்பிரமணியம் நிஷ்டையில் இருந்து விழித்ததும், “இன்று என்ன திதி?” என்று கேட்டார். அதற்கு சுப்பிரமணியம், தன் மனதில் அபிராமியின் முழு மதி போன்ற திருமுகம் நிரம்பியிருந்ததால், “பவுர்ணமி” என்று கூறிவிட்டார்.

ஏதோ ஒரு நினைவில் சொல்கிறார் என்று நினைத்த மன்னன், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் சுப்பிரமணியத்திடம் இருந்து “பவுர்ணமி” என்ற பதிலே வந்தது. ஆனால் அன்றைய தினமோ தை அமாவாசை நன்னாள் ஆகும்.

இரு முறை கேட்டும் எதிர்மறையான பதிலைச் சொன்னதால், கோபம் கொண்ட மன்னன், “அப்படியானால் இன்று இரவு வானில் முழு நிலவைக் காட்ட வேண்டும். இரவு முழு நிலவு தோன்றாவிட்டால், உம்மை அக்னிக் குண்டத்தில் ஏற்றிவிடுவேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்.

மன்னர் அங்கிருந்து அகன்ற பிறகுதான், சுப்பிரமணியத்திற்கு அன்னையின் முழுமதி முகத்தில் மதி மயங்கி, தான் திதியை மாற்றிச் சொன்னது புரிந்தது. அன்னையின் காரணமாக தான் சொன்ன தவறை, அந்த அபிராமி அன்னையே சரி செய்வாள் என்று சுப்பிரமணியன் நம்பினார்.

அமாவாசை அன்று முழுநிலவு தோன்றாது என்பதால், சுப்பிரமணியத்தை அக்னிக்குண்டத்தில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அக்கால மரபுப்படி, அரிகண்டம் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, அபிராமி அம்மன் சன்னிதி எதிரில் ஆழக்குழியில் எரியும் நெருப்பின் மேல் விட்டம் ஒன்று வைத்து, அதில் நூறு கயிறுகளால் ஆன உறியினை கட்டி சுப்பிரமணியனை ஏற்றிவிடுவர். அபிராமி அம்மன் மேல் அந்தாதி பாடுவார், சுப்பிர மணியன். அந்தாதியின் ஒவ்வொரு பாடலின் நிறைவின் போதும் ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டு நூறு பாடல்களைப் பாடி முடிக்கும் தருவாயில் அவர் அக்னி குண்டத்தில் விழுந்து உயிர் இழப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

எரியும் நெருப்பின்மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணியன் ஏற்றப்பட்டார். மன்னரும், பக்தர்களும், ஊர்மக்களும் சூழ்ந்திருக்க, அன்னை அபிராமியை நினைத்து அந்தாதி பாடத் தொடங்கினார். 78 பாடல்கள் முடிந்து விட்டது. 78 கயிறுகள் அறுபட்டு விட்டன. 79-வது பாடலை சுப்பிரமணியன் தொடங்கும் போது, அன்னை அபிராமி வானில் காட்சி தந்து, தனது இடது காதில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாள். அது பலகோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் உமிழ்ந்தது. அமாவாசை இருள் நீங்கி, வானில் பூரண பவுர்ணமி நிலவு தோன்றியது.

உறியின் கீழே மூட்டப்பட்டிருந்த நெருப்பு முழுவதும் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. அப்போது அபிராமி அம்மன் “அன்பனே! வாய் தவறி மன்னனிடம் கூறிய நின் சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடி நிறைவு செய்க' என்று கூறியதும், எஞ்சிய 21 பாடல்களையும் சுப்பிரமணியன் பாடினார்.

மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமியின் அருளையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். சுப்பிரமணியத்திற்கு ‘அபிராமி பட்டர்’ என்ற பட்டத்தை மன்னன் சூட்டினான். அபிராமிபட்டர் மறுத்தாலும், அவரது சந்ததியினருக்காக நிலபுலன்களும் அளித்தான். அதற்கான உரிமைச் செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறதாம்.

சிவத்திருப்பணிகள் பல செய்து, பின்னாளில் ஒரு ரேவதி நட்சத்திர தினத்தில் அன்னை அபிராமியுடன் ஒன்றினார் அபிராமி பட்டர்.

தை அமாவாசை தினத்தன்று, ஆண்டு தோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னிதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படும்.

அமைவிடம்

திருக்கடையூர் திருத்தலம் சீர்காழியில் இருந்து கருவி (கருவிழுந்த நாதபுரம்), ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து செம்பொனார்கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் செல்லலாம்.

Tags:    

Similar News