ஆன்மிகம்

வளமான வாழ்வு தரும் வைகாசி விசாக விரதம்

Published On 2019-05-18 04:12 GMT   |   Update On 2019-05-18 04:12 GMT
வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் அன்று, முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து நாம் கொண்டாடுகின்றோம். நட்சத்திர அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசிமகம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் அன்று, முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். வருங்காலம் நலமாகும். அந்த இனிய நாள் வருகிற 18-5-2019 (சனிக்கிழமை) அன்று வருகிறது. வைகாசி விசாகத்தன்று பவுர்ணமியும் வருவதால் சிறப்பு அதிகம் உண்டு. அன்றைய தினம் மலை வலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாளாகும். விநாயகப் பெருமானை வழிபட்டு, அவரது தம்பி முருகப்பெருமான் மீதும் கவனம் செலுத்தி, அவர்களது தாய் தந்தையான உமா - மகேஸ்வரர் வழிபாட்டையும் செய்தால் நலன்கள் யாவும் வந்து சேரும்.

‘முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே, ஈசன் மகனே! ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய திருவடியை எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்’ என்று கூறி வழிபடுங்கள். உங்களின் நம்பிக்கை வீண் போகாதபடி முருகப்பெருமான் அருள்புரிவார்.

விசாக நட்சத்திரம் அன்று, முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால், துன்பங்கள் விலகி, வாழ்வில் இன்பங்கள் வந்து சேரும். ஆயுள் விருத்தியாகும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால், கடன் சுமை தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியமும் வெற்றியாக முடியும். சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்தால் இனிய சந்ததிகள் பிறக்கும். எலுமிச்சைப் பழத்தால் அபிஷேகம் செய்தால் எம பயம் நீங்கும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வ நிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்தால் திக்கெட்டும் புகழ் பரவும். அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் அரசு வழி ஆதரவு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் சரும நோய் அனைத்தும் நீங்கும். பன்னீர் அபிஷேகம், பார்போற்றும் செல்வாக்கை பெற்றுத் தரும். தேன் அபிஷேகம், சகல பாக்கியமும் தந்தருளும்.

வைகாசி விசாக தினத்தில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், பகை விலகும். பாசம் பெருகும். முருகனின் திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்பது முன்னோர் வாக்கு.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களைக் கொண்டாடும் பொழுதுதான், அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமையும். எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பன்னிரண்டு கொண்ட வேலவனை, நேருக்கு நேராக நின்று கை குவித்து வணங்கினால், போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும்.

விசாகம் அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். பின்னர் இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமானின் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கு ஏற்றி ஐந்து விதமான எண்ணெய் ஊற்றி, ஐந்து விதமான புஷ்பம் சாத்தி, ஐந்து வகைப் பழங்களை படைக்க வேண்டும். மேலும் கந்தனுக்குப் பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் நைவேத்தியமாக வைத்து சண்முக கவசம் பாராயணம் செய்ய வேண்டும். ‘ஐந்துமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்’ என்பதற்கேற்ப, மயிலில் பறந்து வந்து முருகப்பெருமான் வரம் தருவார்.

உங்களால் முடிந்தால், அருகில் இருக்கும் ஆறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று வழிபட்டு வரலாம். அல்லது சிவாலயத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னிதியில் வழிபாடு செய்யலாம்.

அருணகிரிநாதர், முருகப்பெருமானை வர்ணித்துப் பாடும் போது, அவரது ஆறுமுகத்திற்கு அழகாக விளக்கம் சொல்கின்றார். மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் பேசி உறவாடும் முகம் ஒன்று. அடியவர்களின் குறைகேட்டு அகற்றும் முகம் ஒன்று. குன்றத்தில் வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று. அசுரனை வதைப்பதற்காக எடுத்த முகம் ஒன்று. வள்ளியம்மை மணம் காண வந்த முகம் ஒன்று என்று விளக்கம் அளிப்பார்.

அப்படிப்பட்ட ஆறுமுகம் பெற்ற ஈசனையும், அழகன் முருகனையும் விரதம் இருந்து நாம் கொண்டாட வேண்டிய திருநாள் வைகாசி விசாகம் ஆகும்.

“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்
Tags:    

Similar News