ஆன்மிகம்

வேண்டிய வரம் தரும் குலதெய்வ விரத வழிபாடு

Published On 2019-05-10 02:28 GMT   |   Update On 2019-05-10 02:28 GMT
தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்று சான்றோர்கள் குறிப்பிடு கின்றனர்.
ஆன்மிக ரீதியில் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது, அவரது குலதெய்வம் மட்டுமே. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக அது போற்றப்படுகிறது.

தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்று சான்றோர்கள் குறிப்பிடு கின்றனர். ‘நாள் செய்யாததை கோள் செய்யும்’ என்றும், ‘கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்றும் சொல்வார்கள்.

ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை. குல தெய்வங்கள் தெரியாதவர்கள், எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டுக் கொள்ளலாம். ஆனால் அதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்குதான் நிவர்த்தி செய்ய முடியும். அதுவே குலதெய்வ வழிபாடு என்றால், நம்முடைய கர்மாக்கள் முற்றிலும் நிவர்த்தியாகிவிடும் என்பதுதான் அதன் சிறப்பு அம்சம்.

பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக விரதம் இருந்து வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
Tags:    

Similar News