ஆன்மிகம்

ராமநவமி விரதம் வழிமுறை

Published On 2019-04-13 06:02 GMT   |   Update On 2019-04-13 06:02 GMT
ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.
ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.

இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.

இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.

ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும். 
Tags:    

Similar News