ஆன்மிகம்

குலதெய்வத்தை விரதம் இருந்து வழிபட மறக்காதீர்கள்

Published On 2019-03-28 07:24 GMT   |   Update On 2019-03-28 07:24 GMT
யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது.
உலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை விரதம் இருந்து மனதார வழிபடுவார்கள்.

சமீப காலமாக விரதம் இருந்து சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச் சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி உள்ளது. அது போல பரிகாரத்தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.

இறை வழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குலதெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குலதெய்வம்தான்.

குலதெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குலதெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு தடவையாவது குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.

குலதெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குலதெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும். பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குலதெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.

அப்படிப்பட்டவர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ‘‘குலதெய்வ வழிபாடு’’ செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் 9-ந்தேதி (ஞாயிறு) வருகிறது.

அன்று குலதெய்வம் இருக்கும் ஆலயத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடாவிட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குலதெய்வத்தை அவசியம் வழிபடுங்கள்.

யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.

Tags:    

Similar News