ஆன்மிகம்

நவக்கிரகங்களின் அருளை பெற்றுத் தரும் விரதம்

Published On 2019-03-02 05:09 GMT   |   Update On 2019-03-02 05:09 GMT
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடித்தால் சிவபெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன், மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் தருவதாக ஐதீகம்.
4-3-2019 மகா சிவராத்திரி

சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானவையாக எட்டு விரதங்கள் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. அவை சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம், ரிஷப விரதம், கேதார விரதம் ஆகியவையாகும். அவற்றுள் சிறப்பான விரதமாக மகா சிவராத்திரி உள்ளது. சிவ விரதங்கள் நிறைய இருந்தாலும் முக்கியமான சிவராத்திரி விரதம், முக்திப்பேறு அடைய உற்ற துணையாக விளங்குகிறது. செம்மையான மங்களம் தருபவன் என்ற அர்த்தம் கொண்ட சிவபெருமானை நினைத்து, மனமுருகி, உணவு தவிர்த்து, நாமம் சொல்லும் புண்ணிய தினம் சிவராத்திரி என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.

ராத்திரி என்றால் இருள் காலம் என்பது பொருள். உண்மையான இருள் காலம் என்பது இறைவன், உலகம் முழுவதையும் ஒடுக்கியுள்ள காலமாகும். இதனை ‘பிரளய காலம்’ என்றும், ‘ஊழிக்காலம்’ என்றும் சொல்வார்கள். பொதுவாக, இரவு நேரத்தில், ஒளி இல்லாமல், உயிர்களின் நடமாட்டமும் இல்லாமல் அமைதி நிலவும். உடலின் பஞ்ச பூத இயக்கங்கள் குறைந்து, உயிர்கள் செயலற்று இருப்பதால் ஏற்படும் அமைதியான பெரும் இருளில் தனித்து நிற்பவர் சிவபெருமான். அதனால், அது சிவராத்திரி என்று சொல்லப்படும். உலகத்தின் ஒடுக்க நிலையான இரவுக்காலம் சிவனுக்கே உரியது என்ற நிலையிலும், இரவை சிவராத்திரி என்று குறிப்பிடுவார்கள். குறிப்பாக, ராத்திரி என்ற சொல் ‘பூஜை செய்தல்’ என்ற பொருளையும் தருகிறது. அதன் அடிப்படையில் சிவனை வழிபட தகுந்த இரவை சிவராத்திரி என்றும் ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொதுவாக, சிவராத்திரி என்பது நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி என ஐந்து வகையாக உள்ளது. இதில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரியை, வருஷ சிவராத்திரி என்றும் சொல்வார்கள்.

சிவராத்திரி விரதம் இருப்பதற்கான விதிமுறைகள் அனைவரும் மேற்கொள்ளும் விதமாகவே உள்ளன. சிவபெருமான் மீது அன்பு கொண்ட பக்தியுடன் எவரும் சிவராத்திரி விரதம் இருந்து பலன் பெறலாம் என்பதை ஆன்றோர் பெருமக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின்போது காலையில் வீட்டில் பூஜையை செய்து முடிக்க வேண்டும். பின்னர், கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். நண்பகலில் ஓய்வெடுத்து விட்டு, மாலையில் கோவிலுக்கு சென்று, வழிபட்டு விட்டு கோவிலை வலம் வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது நலம். பின்னர், மீண்டும் வீட்டில் சிவபூஜை செய்யலாம். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் வில்வ இலைகளால் அர்ச்சனை மற்றும் பூஜை செய்வது நல்லது. கலச பூஜையுடன் சிறிய அளவில் லிங்கம் வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடித்தால் சிவபெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன், மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் தருவதாக ஐதீகம். சிவ சிந்தனை இல்லாமல் கண் விழித்தால் மட்டும் போதும் என்று நினைத்துக் கொண்டு, உலக விஷயங்களை பேசிக்கொண்டிருப்பதால் எவ்விதமான பலனும் கிடைக்காது என்றும் ஆன்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

முறைப்படி இருபத்து நான்கு ஆண்டுகள் சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் சிவகதியை எளிதாக அடைவார்கள். அத்துடன் அவர்களது 21 தலைமுறைகளும் நற்கதி பெற்று, முக்தியையும் அடைவது சத்தியம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. சிவராத்திரி அன்று நியம முறைப்படி விரதம் மேற்கொள்பவர்களுக்கு வாக்கு பலிதமும், மந்திர சித்தியும் கைகூடும் என்பது சித்தர்கள் வாக்கு ஆகும். கவுதம மகரிஷி, வசிஷ்டர், அகஸ்தியர் போன்ற சப்தரிஷிகளும், சூரியன், சந்திரன், அக்னி, குபேரன், மன்மதன் ஆகியோரும் சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றதாக ஐதீகம்.
Tags:    

Similar News