ஆன்மிகம்

இன்று ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உகந்த வசந்த பஞ்சமி விரதம்

Published On 2019-02-10 06:02 GMT   |   Update On 2019-02-10 06:02 GMT
ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உகந்த வசந்த பஞ்சமி தினமான இன்று விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.
இன்று வசந்த பஞ்சமி தினம். இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீபஞ்சமி என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றது. மானிடர்கள் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானமே அதை அருளும் சரஸ்வதி தேவி அவதரித்த தினமாதலால் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வங்காளத்தில் இது சரஸ்வதி பூஜை தினமாகவே கொண்டாடாப்படுகிறது.

ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் லௌகிக உலசில் அறிவு சார் கலைகளில் முன்னேற்றம் கிடைப்பது மட்டுமல்லாது ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை.

ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தில் ஐந்தாவது இடம் நுண்ணறிவுக்கான இடமாக குறிக்கப்படுகின்றது. பஞ்சமி திதியன்று செய்யப்படும் இறைவழிபாடுகள், நுண்ணறிவை சரியான பாதையில் செலுத்த வல்லவை.

இந்தியாவில் தென் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில் வசந்த பஞ்சமி தினம் புதுவருடத்துவக்கமாகவே கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் வசந்த பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பூஜைகள் செய்வது மிகக்சிறப்பு. அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்வந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது. எந்த வகையான செயலாக இருந்தாலும் வெற்றிகரமாக முடிய இன்று தொடங்கலாம். ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான்.

இந்த விரத பூஜை கொஞ்சம் வித்தியாசமானது. பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 முதல் 11 வரை. இது பூர்வாஹன காலம் என்று அழைக்கப்படுகிறது.

முதலில் தூய்மையான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு கிழக்கு பார்த்து பூஜைமேடையை அமைக்க வேண்டும். கோலங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கவும். பூஜை துவங்கும் முன்பாக தூபங்கள் கமழச்செய்யும். தீபங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏற்றி வைத்தல் சிறப்பு.

பரிபூர்ணத்தை குறிக்கும் கலச ஸ்தாபனம் விநாயகர் பூஜை முதலியவற்றை முதலில் செய்ய வேண்டும். அதன் பின் ஸ்ரீவிஷ்ணுவையும் சிவனாரையும் விக்ரகங்கள் அல்லது படங்களில் ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்ய வேண்டும்.

அம்பினை சத்வ குண ஸ்வரூபிணி...அம்பிகையின் வெண்பட்டு வஸ்திரம், ஸ்படிக மாலை முதலிய சத்வ குணத்தையும் தூய்மையையும் குறிக்கின்றன. ஆகவே தத்வகுண ஸ்வரூபனான திருமாலி பூஜை செய்யப்படுகின்றார். சில புராணங்களின் படி, சரஸ்பதி தேவி, சிவனாரின் சகோதரியாக கருதப்படுகின்றாள். ஆகவே சிவனாரும் பூஜையில் இடம் பெறுகின்றார்.

சிவ, விஷ்ணு பூஜைகளுக்கு பின் சரஸ்பதி தேவியின் படத்திற்கு பூஜைசெய்ய வேண்டும். வெண்ணிற பட்டு வஸ்திரம் அல்லது மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லிகை மலர்களால் மாலைகள் சூட்டி, அலங்கரித்து, மல்லிகை, தாமரை, செண்பக மலர்களால் அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும். அம்பிகையின் பன்னிரு திருநாமங்களை  கூறி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

பூஜை தினத்தன்று மாலையிலோ அல்லது மறுநாள் காலையிலோ இயன்றதை நிவேதனமாக செய்து புனர் பூஜை செய்து அம்பிகையையும் மற்ற தேவதைகளையும் யதாஸ்தானம் செய்யவும்.

விருப்பமிருப்பவர்கள் மேற்கூறிய பூஜை முறைகளின் படி பூஜை செய்யலாம். சரஸ்வதி பூஜைக்கென சாரதா நவராத்திரியில் செய்யும் பூஜைமுறைகளையும் பின்பற்றலாம்.

விஸ்தாரமான  பூஜைகள் செய்ய  இயலாதோரும், ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது பிரதிமையை அலங்கரித்து வைத்து தெரிந்த சரஸ்வதி துதிகளை பாராயணம் செய்து இயன்ற நிவேதனங்கள் படைத்து வழிபாடு செய்யலாம்.

ஸ்ரீசரஸ்வதி தேவியை போற்றும் ஸ்ரீசரஸ்வதி அந்தாதி துதியை இன்றைய தினம் சொல்லி வழிபாடு செய்யலாம்.

Tags:    

Similar News