ஆன்மிகம்

செல்வ வளம் தரும் சிவலிங்க விரத வழிபாடு

Published On 2019-01-28 08:00 GMT   |   Update On 2019-01-28 08:00 GMT
சிவலிங்க விரத வழிபாட்டை, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் தவறாமல் செய்வது மிகவும் நல்லது. தொடர்ந்து வழிபடுவது நற்பலனைத் தரும்.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஆவார். சிவபெருமானை நாம் ஆலயங்களில் சென்று வழிபடும் பொழுது லிங்க வடிவமாகத் தான் வழிபடுகின்றோம். பொதுவாக சிவலிங்க விரத வழிபாட்டை, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் தவறாமல் செய்வது மிகவும் நல்லது. திருவாதிரை நட்சத்திரம் அன்றும் தொடர்ந்து வழிபடுவது நற்பலனைத் தரும். அவ்வாறு வழிபட சிவன் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது, முதலில் கணபதியை வழிபட வேண்டும். பிறகு அறுபத்து மூவரை வழிபட்டு, அடுத்ததாக நந்தியை தரிசித்த பிறகே, சிவலிங்க வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி வழிபட்டால் தான் உரிய விதத்தில் பலன் உடனடியாகக் கிடைக்கும்.

சிவலிங்கத்தை பீடம், லிங்கம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தரையில் இருந்து மேலே எழும்பி லிங்கத்தை தாங்கி நிற்கும் பகுதி ‘பீடம்’ ஆகும். இது எல்லா வடிவங்களிலும் இருக்கும். பாணம் அல்லது லிங்கம் என்பது உருளை வடிவத்தில் இருக்கும். பீடத்தில் இருந்து நீர் விழும் பகுதி ‘நாளம்’ எனப்படும். பொதுவாக லிங்கத்தின் தன்மையைப் பொறுத்து, அசையும் லிங்கம், அசையா லிங்கம் என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.

மொத்தத்தில் சிவலிங்க விரத வழிபாடு என்பது சிறப்பான வழிபாடு. ஒரே சிவலிங்கத்தில், 1008 லிங்கங்கள் அமையப் பெற்றதை ‘சகஸ்ர லிங்கம்’ என்று அழைப்பார்கள். இது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ளது. 108 சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்தது தஞ்சை அருகில் உள்ள பாபநாசத்தில் உள்ளது. தினமும் சிவாயநம, ஓம் நமசிவாய, சிவசிவ என்று எத்தனை முறை சொல்லி வழிபடுகின்றோமோ, இந்த அளவிற்கு செல்வாக்கு விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். திங்கட்கிழமை வழிபட்டால் மங்கலங்கள் உருவாகும்; சந்ததி தழைக்கும்; சந்தோஷம் பிறக்கும்; எண்ணியது நடக்கும்.

சிவனை வழிபடும் பொழுது இரு கரங்களையும் மேல்நோக்கி தலைக்குமேல் உயர்த்தி “சிவாயநம” அல்லது “ஓம் நமசிவாய” என்று சொல்லி சிவலிங்கத்தை வழிபட்டால் மன அமைதியோடு வாழ இயலும். சிவ தரிசனத்தையும், இறை ஆராதனைகளையும் முடித்த பிறகுதான் ஆலயத்தை வலம் வர வேண்டும். ஆலயத்தை 1, 3, 5 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வலம் வரவேண்டும். பிரகாரத்தைச் சுற்றி வந்து முடிக்கும் பொழுது, கொடிமரத்தின் முன்பாக அனைத்து தெய்வங்களையும் மனதில் நினைத்துக் கொண்டு நமது வேண்டுதலைச் சொல்லி வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

சிவலிங்கத்திற்கு வில்வ அர்ச்சனை மிகவும் உகந்தது. வில்வத்தால் அர்ச்சித்தால் பாவங்கள் தீரும். பணவரவு கூடும். வீட்டில் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்பவர்கள் புறத் தூய்மையோடு, அகத்தூய்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

அசையும் லிங்கம் என்பவை மண், உலோகம், ரத்தினம், மரம், கல், மாவு, மஞ்சள் போன்றவற்றால் செய்யப்படும். சுயம்புலிங்கம் என்பது தானே தோன்றியது. இவை நிலையாக இருக்கக் கூடியவை. இவை தவிர அரிசி, சாதம், களிமண், பசுஞ்சாணி, வெண்ணெய், ருத்ராட்சம், சந்தனம், தர்ப்பம், பூ போன்றவற்றால் ஆன லிங்கங்கள். இவை வழிபாடு முடிந்ததும் அந்தந்த பொருட்களுடன் சேர்க்கப்படும். அசையா லிங்கங்கள் என்பவை கோவில்களில் நிலையாக இருக்கும் கற்சிற்பங்கள்.

எந்தெந்தப் பொருட்களால் ஆன லிங்கங்கள் என்னென்ன பலன் கொடுக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். மன உறுதி, உடல் உறுதி பெற மாவால் செய்த லிங்கத்தையும், நல்ல உணவு கிடைத்து பசிப்பிணி அகல சாதத்தால் செய்த லிங்கத்தையும், ஞானம் பெருக ருத்ராட்ச லிங்கத்தையும், நீண்ட ஆயுள் கிடைக்க பூவால் ஆன லிங்கத்தையும் வழிபாடு செய்யலாம். இன்னும் எத்தனை, எத்தனையோ லி ங்கங்கள் இருக்கின்றன. மரகத லிங்கத்தை மனதார வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும்.

இத்தனை வகை லிங்கங்களில் நமக்கு ஏற்ற லிங்கத்தைத் தேர்ந் தெடுத்து, பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ஆயுள் நீடிக்கும். நோய் நீங்க கரும்புச் சாறு அபிஷேகமும், பயம் நீங்க பழச்சாறு அபிஷேகமும், இனிய குரல் வளம் கிடைக்க தேன் அபிஷேகமும், லட்சுமி கடாட்சம் ஏற்பட சந்தன அபிஷேகமும், நினைத்தது நிறைவேற சுத்தமான தண்ணீர் அபிஷேகமும், வசீகரம் பெற மஞ்சள் தூள் அபிஷேகமும், ராஜ யோக வாழ்வு அமைய அன்னாபிஷேகமும் செய்து வழிபட்டால் நல்லது.
Tags:    

Similar News