ஆன்மிகம்

முருக வழிபாடும்...நோன்பும்...

Published On 2019-01-23 08:17 GMT   |   Update On 2019-01-23 08:17 GMT
ஒருநாள் வசிஷ்ட முனிவர், தன்னிடம் வந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு முருகனுக்குரிய நோன்புகளை பற்றிக் கூறினார். இந்த நோன்பு குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒருநாள் வசிஷ்ட முனிவர், தன்னிடம் வந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு முருகனுக்குரிய நோன்புகளை பற்றிக் கூறினார். வாரத்தின் 7 நாட்களில் வெள்ளிக்கிழமை செய்யப்படும் நோன்பு சிறப்பானது. இது முருக கடவுளுக்கு உரிய நோன்பாகும். இந்நோன்பை நோற்றுப் பகீரதன் தன் அரசை மீண்டும் பெற்றான்.

ஒரு காலத்தில் நாரதமுனிவர் விநாயகரிடம் வந்தார். ஏழு முனிவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராக தான் ஆவதற்கு என்ன செய்யவேண்டுமென கேட்டார். அதற்கு விநாயகர், முருகனுக்குரிய கார்த்திகை நோன்பினை நோற்கும்படி சொல்லியருளினார். அந்நோன்பை இயற்றுபவர் பரணிநாள் பகலில் நீராடவேண்டும். ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும். வெள்ளை ஆடை அணிய வேண்டும். கார்த்திகை நாள் காலையில் நீராட வேண்டும். நாணல் புல்லில் இரவில் படுக்க வேண்டும். முருகன் திருவடிகளையே உறக்கமின்றி நினைத்திருக்க வேண்டும்.

இந்த முறைப்படியே நாரதமுனிவர் நோன்பிருந்தார். ரோகிணி நாள் அன்று முனிவர்களோடு சேர்ந்து உணவு உண்டார். இவ்வாறு பன்னிரெண்டு ஆண்டுகள் நோன்பிருந்தார். முருகன் அருளால் ஏழு முனிவர்களை காட்டிலும் உயர்ந்தவர் ஆனார்.

இதுபோல கார்த்திகை நோன்பு இருந்தவர்கள் பலர். அவர்கள் முருகனின் அருளால் மேன்மைகள் பலவற்றை அடைந்தனர். முருகனுக்குரிய நோன்புகளுள் சஷ்டியும் ஒன்று. ஐப்பசி மாதம் சுக்லபட்சப் பிரதமை நாள் முதலாக 6 நாட்கள் முறையாக நீராட வேண்டும். உண்ணாதிருக்க வேண்டும். மோதகம் செய்து படைத்து முருகனை வழிபட வேண்டும். இதுவே சஷ்டி நோன்பு ஆகும்.
Tags:    

Similar News