ஆன்மிகம்

இன்பத்தை கொடுக்கும் பெருநாள்

Published On 2019-06-05 04:24 GMT   |   Update On 2019-06-05 04:24 GMT
உலக முஸ்லிம்கள் ஆண்டுக்கு இரு நாட்களை பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். ஒன்று ஈகை திருநாளாக திகழும் நோன்பு பெருநாள்.
உலக முஸ்லிம்கள் ஆண்டுக்கு இரு நாட்களை பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். ஒன்று ஈகை திருநாளாக திகழும் நோன்பு பெருநாள். இரண்டாவது தியாகத் திருநாளாக இருக்கும் பக்ரீத் பெருநாள். இந்த இரு பெரு நாட்களின் பின்னணியாக நோக்கமாக பல்வேறு அம்சங்கள் இருக்கின்றது. அவற்றில் ஒரு சிறந்த நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தார்கள் மீது அன்பும், கருணையும் கொண்டு தன் செல்வத்தை செலவு செய்வது போன்று, பிற முஸ்லிம்களின் மீது கருணை கொண்டு, அவர்களின் துன்பத்தை நீக்கவும், இன்பத்தை பெருக்கவும், தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்.

இந்த பிரதான நோக்கத்தை தான் ‘பித்ரா’ என்ற பெயரால் ஈகை திருநாள் அன்று ஏழைக்கு வழங்கப் படும் அன்பளிப்பும், குர்பானி என்ற பெயரால் தியாகத் திருநாளிள் அவர்களுக்கு செய்யப்படும் உபகாரமும் உணர்த்துகிறது

நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் கொடையாளி அல்லாஹ்விற்கும், சுவனத்திற்கும்,மக்களுக்கும் நெருக்கமானவனாக இருக்கின்றான். கருமித்தனம் செய்கிற வணக்கசாளியை விடவும் கொடையாளியான ஒரு முட்டாள் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவன் (நூல் : திர்மிதி).

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் மக்களுக்கு விருந்து அளிப்பவர்களாக இருந்தார்கள். ஒருநாள் விருந்து சாப்பிடுவதற்காக ஒரு மனிதர் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே வீட்டுக்கு திரும்பினார்கள். அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார் அவரிடம் நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் என் வீட்டில் என் அனுமதி இல்லாமல் உம்மை உள்ளே நுழைய விட்டது யார்? என்று கேட்டார்கள்.

அப்போது அந்த மனிதர் நான் வீட்டு எஜமானின் அனுமதி பெற்றுதான் உள்ளே வந்தேன் என்று கூறினார் உடனே நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் நீங்கள் யார்? என்று கேட்டார்கள் அவர் சொன்னார் நான் வேறு யாருமல்ல மலக்குல் மவுத்து தான் அல்லாஹ் ஒருவரை நண்பராக தேர்வு செய்துள்ளான். அந்த சுபச்செய்தியை அந்த அடியாருக்கு சொல்வதற்காக என்னை அனுப்பி வைத்தான் என்றார். அப்போது நபி இபுறாகீம் (அலை) மலக்கிடம்அந்த அடியாரை எனக்கு காட்டுங்கள் அவர் ஊரின் கடைசியில் வாழ்ந்தாலும் கூட நான் அவரை சந்தித்து மரணம் எங்களை பிரிக்கப்போகும் வரை நான் அவருடைய அண்டை வீட்டாராக வாழப் போகின்றேன் என்றார்.

அப்போது ‘மலக்‘ சொன்னார் நீங்கள் தான் அந்த அடியார். ஆச்சரியத்துடன் நபி இபுறாகீம் (அலை) அவர்கள் மலக்கிடம் அல்லாஹ் எந்த அம்சத்தை கொண்டு என்னை தனது நண்பனாக தேர்வு செய்தான் என்று கேட்ட போது ‘மலக்‘ சொன்னார் நீங்கள் எல்லா மக்களுக்கும் உதவி செய்து வாழ்கின்றீர்கள் நீங்கள் யாரிடமிருந்தும் எதையும் கேட்டு பெறுவதில்லை இது தான் காரணம் என்றார்கள் ( நூல் : தப்சீர் இப்னு அபீ ஹாதம்)

ஹாஜி. கே.எம்.எஸ். ஹக்கீம்
Tags:    

Similar News