ஆன்மிகம்

எல்லோரும் கொண்டாடுவோம்

Published On 2019-06-05 04:05 GMT   |   Update On 2019-06-05 04:05 GMT
ரமலான் பெருநாளை நாமும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். ஏழை எளியோரையும் சந்தோஷமாகக் கொண்டாடிட உதவுவோம். மனித நேயத்தைக் காப்போம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நபி மூஸா (அலை) அல்லாஹ்விடம், “என்னிறைவா, உன்னுடன் உரையாடுவதன் முலம் என்னைக் கண்ணியப்படுத்தினாய். இது போன்ற அந்தஸ்தினைவேறு யாருக்கேனும் நீ வழங்குவாயா?” என்று கேட்டார்கள்.

உடனே அல்லாஹ் விடமிருந்து வஹீ என்னும் தேவதூதின் மூலம் பதில் கிடைத்தது.

“ஆம். மூஸாவே, இறுதி காலத்தில் உலகத்தில் தோன்றிடும் முஹம்மது நபியின் சமூகத்தாருக்கு இதைவிடச் சிறந்த அந்தஸ்தை வழங்குவேன். அவர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, அதன் காரணமாய் அவர்களின் உதடுகளெல்லாம் வெளுத்து, அவர்களது உடல்கள் மஞ்சனித்துப் போய்விடும். அந்நாளில் அவர்கள் நோன்பு திறந்திடும் போது அவர்களுக்கும் எனக்கும் மத்தியிலுள்ள திரையினை அகற்றுவேன். நானும், நீங்களும் உரையாடும் போது நம் இருவருக்கும் இடையே எழுபதினாயிரம் திரைகள் இருக்கின்றன. ஆனால், நோன்பு நோற்ற முஹம்மது நபியின் சமூகத்தாரிடம் திரையின்றி பேசுவேன் என்று அருளினான்.

மேலும் நோன்பாளியின் நித்திரை வணக்கமாகும். நோன்பாளியின் மூச்சு இறைத்துதியாகும். நோன்பாளியின் துஆ (பிரார்த்தனை) இறைவனால் அங்கீகரிக்கப்படும்.

நோன்பாளியின் பாபங்கள் மன்னிக்கப்படும். நோன்பாளியின் நற்கிரியைகளுக்கு நன்மைப் பயன்கள் இரட்டிப்பாக்கப்படும். நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹூத்தஆலாவிடம் கஸ்தூரி வாடையினும் மிகவும் சுகந்த மணமாக இருக்கிறது. அதாவது, மறுமை நாளில் அவர்களது வாய்களிலிருந்து வரும் வாடை, கஸ்தூரி வாடையை போல் இருக்கும்.

ஆயுள் முழுவதும் நோன்பு நோற்பதை விட ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நோன்பும் மிகவும் சிறப்புள்ளதாக உள்ளன.

நோன்பும், குர்ஆனும் அதைப் பேணுவதன் காரணத்தால் நமக்கு மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மன்றாடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளார்கள்.

எனவே ரமலான் மாதம் முழுவதும் நாம் நோன்பு நோற்று மேலான பதவியை ஈருலகிலும் அடைய வேண்டும் என்பதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பகல் காலங்களில் உண்ணாமல் பசித்திருந்தோம். நீர் கூட அருந்தாமல் தாகித்திருந் தோம். இவையொல்லாம் எதற்காக? இறையருளைப் பெற வேண்டும் அதற்காக!

இறையருளால் முப்பது நோன்புகளை நிறைவேற்றி நாம், நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, இறைவனைத் திருப்திபடுத்த ஏழைகளுக்கு தானதர்மங்கள் செய்து, நம்மிலும், எழைகளின் சிரிப்பிலும் இறைவனைத் தரிசிப்பதே இன்றைய பெருநாளின் முக்கிய நோக்கமாகும்.

இவ்வாறு நம்மை நன்மைகளின்பால் ஈடுபடுத்திய இறைவனுக்கு நன்றி செலுத்திட சிறப்புத் தொழுகையையும் இன்று நிறைவேற்றுகிறோம்.

ஆக ரமலான் பெருநாளை நாமும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். ஏழை எளியோரையும் சந்தோஷமாகக் கொண்டாடிட உதவுவோம். எல்லோரும் கொண்டாடுவோம். மனித நேயத்தைக் காப்போம்.

ஹாஜி. எஸ்.எஸ்.ஜியாவுத்தீன்
Tags:    

Similar News