ஆன்மிகம்

இறைவனுக்கு அஞ்சுங்கள்

Published On 2019-06-03 04:50 GMT   |   Update On 2019-06-03 04:50 GMT
மறுமையில் 3 இடங்களில் நாம் நமக்கு பிரியமானவர்களை நினைக்க முடியாது. அவர்கள் எவ்வளவு தான் பிரியமானவராக இருந்தாலும் அவர் நினைவுக்கு வரமாட்டார்கள். அந்த மூன்று இடங்கள்:
ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினார்கள். மறுமையில் தனக்கு பிரியாமானவர்களை நாம் நினைக்க முடியுமா?. இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதில் வருமாறு:

மறுமையில் 3 இடங்களில் நாம் நமக்கு பிரியமானவர்களை நினைக்க முடியாது. அவர்கள் எவ்வளவு தான் பிரியமானவராக இருந்தாலும் அவர் நினைவுக்கு வரமாட்டார்கள். அந்த மூன்று இடங்கள்:

1. மனிதனின் நன்மைகள் - தீமைகளை எடைபோட்டு பார்க்கும் தராசுக்கு அருகில் நிற்கும் போது.

2. ஒரு மனிதன் செய்த நன்மை- தீமைகளுக்கு ஏற்ப அவனது செயல்கள் எழுதப்பட்ட பட்டோலை வலது கரத்தில் கொடுக்கப்பட்டால் அவன் சொர்க்கவாதி, இடது கரத்தில் கொடுக்கப்பட்டால் அவன் நரகவாதி. அது போன்ற நிலையில் தனது பட்டோலை எந்தக்கரத்தில் கொடுக்கப்படும் என்று தெரியாமல் நிற்கும் போது.

3. நரகத்தில் கழுத்து நீண்ட ஒரு மிருகம் உள்ளது. அந்த மிருகம் மூன்று பிரிவினரை பிடித்துக்கொள்ளும். அல்லாஹ்வுக்கு இணை வைத்தவன், பெருமையுடனும் தற்பெருமையுடன் வாழ்ந்தவன், மறுமைநாளில் இறைவனின் கேள்வி கணக்குகள் கேட்கப்படும் என்பதை மறுத்தவன், ஆகிய மூன்று பேர்களை இந்த மிருகம் தன் வாயால் பிடித்து நரகத்திற்குள் வீசி எறியும். அந்த மிருகம் எப்போது தன் முன்பு தோன்றுமோ என்ற பயத்தில் இருக்கும் போதும் யாருடைய நினைவும் ஒரு மனிதனுக்கு வராது.

இவ்வாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.

மறுமை நாளில் நமக்கு துணையாக இருப்பது அந்த ஏக இறைவன் மட்டுமே. அந்த இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும் என்றால் அந்த வல்லவன் வகுத்த வழியில் நமது வாழ்க்கை அமைய வேண்டும். இதையே திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறது:

நிச்சயமாக  எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பிறகு அதிலேயே நிலைத்து நிற்கின்றார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்: அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்(திருக்குர்ஆன 46:13-14)

இந்த உலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனின் ஏட்டில் பதிவு செய்யப்படும். நமது செயல்களில் தன்மைக்கு ஏற்ப நன்மைகளும், தீமைகளும் நமக்கு வழங்கப்படும். இதில் எந்த மாறுபாடும் கிடையாது என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

அன்றியும் ஒவ்வொருவருக்கும் அவரவர்  செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை பூரணமாக பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்(திருக்குர்ஆன் 46:19)

இறைநம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்:(எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீராக்கி வைப்பான்: உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்: அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். (திருக்குர்ஆன் 33:70-71)

இந்த புனிதமான ரமலான் காலத்தில் நாம் அல்லாஹ்வை வணங்கி அவன் அருளைப்பெறுவோம். ஆமீன்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.  
Tags:    

Similar News