ஆன்மிகம்

சொர்க்கத்திற்கு வழிகாட்டும் நற்செயல்கள்

Published On 2019-05-25 04:46 GMT   |   Update On 2019-05-25 04:46 GMT
நாமும் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழியில் நடந்து நற்செயல்கள் செய்து இறைவனின் நல்லடியார்களில் ஒருவராக மாற வேண்டும். இதன் மூலம் சொர்க்கத்தையும் பரிசாக பெற வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகா, ஆமீன்.
ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சந்தித்து, ‘நபியே நான் சுவனம் செல்ல விரும்புகிறேன். இதற்கு உதவும் வகையில் நான் கடைபிடிக்க வேண்டியநற்செயல்களை எனக்கு சொல்லித்தாருங்கள்’ என்ற கேட்டார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட 4 நற்செயல்கள் குறித்து கூறினார்கள்.

உணவு வழங்குதல்: பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு வயிறார உணவு கொடுக்க வேண்டும். அதுபோல தன் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு முகம் சுளிக்காமல், சளைக்காமல் உணவு அளித்து உபசரிக்க வேண்டும். ‘எவர் அல்லாஹ் மீதும், மறுமை மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் விருந்தாளிகளை மகிழ்வித்து கண்ணியப்படுத்த வேண்டும்’.

ஸலாம் கூறுதல் : மனிதர்கள் வாழ்வில் சாந்தியையும், சமாதானத்தையும் அளிக்கும் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற சொற்களை அதிகம் பரப்ப வேண்டும். எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எதிரில் இருப்பவர் எந்த மனநிலையில் இருந்தாலும் ஸலாம் கூற வேண்டும். மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், அரவணைப்பும் பரவ ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற  சொல் உதவும். சுவனம் செல்லவும் இது வழிகாட்டும். மேலும் ஸலாம் கூற முந்திக்கொள்ள வேண்டும். ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எந்த பாகுபாடும் இன்றி ஸலாம் கூறப்பட வேண்டும். இதன் மூலம் அவரது மனதில் பெருமையும், அகங்காரமும் அழியும். எவரிடம் பெருமை இல்லையோ அவர் நிச்சயம் சொர்க்கம் செல்வார்.

சொந்தங்களுடன் சேர்ந்து வாழுங்கள் : எவர் அல்லாஹ் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தனது சொந்தங்களுடன் சேர்ந்து வாழட்டும். எவர் தனது ஆயுளிலும், உணவிலும் இறைஅருள் வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் சொந்தங்களுடன் சேர்ந்து வாழட்டும்.

இரவு வணக்கம் : மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கும் இரவு நேரத்தில் இறைவனை நினைத்து தொழுகை நடத்த வேண்டும். இதன் மூலம் இறைவனின் நல்லடியார்களின் ஒருவராக நாம் ஆக முடியும். இதன் மூலம் சொர்க்கத்தையும் நாம் இறைவனிடம் இருந்து பரிசாக பெறமுடியும்.

நபிகளார் குறிப்பிட்ட இந்த 4 நற்செயல்களை செய்வதன் மூலம் எளிதில் சுவனம் செல்ல முடியும்.  

முன்பின் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு சொர்க்கவாதியாக அறிவிக்கப்பட்ட பிறகும் இரவில் நீண்ட நேரம் நின்று தொழுகையில் ஈடுபடும் வழக்கம் நபிகளிடம் இருந்தது. இறைவனின் நல்லடியானாகவே இவ்வாறு நபிகள் நற்செயல்கள் செய்தார்கள்.

நாமும் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழியில் நடந்து நற்செயல்கள் செய்து இறைவனின் நல்லடியார்களில் ஒருவராக மாற வேண்டும். இதன் மூலம் சொர்க்கத்தையும் பரிசாக பெற வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகா, ஆமீன்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில், காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News