ஆன்மிகம்

பொறுமையின் கூலி சொர்க்கம்

Published On 2019-05-20 05:00 GMT   |   Update On 2019-05-20 05:00 GMT
“இறை நம்பிக்கை கொண்டவர்களே, பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்: நிச்சயம் அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான்”.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதம் குறித்து கூறும் போது, ‘ இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி சொர்க்கம்’ என்றார்கள்.

பொறுமை குறித்து இறைவன், திருக்குர்ஆனில் (2:153) இவ்வாறு கூறுகிறான்: “இறை நம்பிக்கை கொண்டவர்களே, பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்: நிச்சயம் அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான்”.

பொறுமையை மேற்கொள்வது என்பது 3 நிலைகளில் அமையும். இதில் முதலிடம் பிடிப்பது, ‘அல்லாஹ்வை வணங்குவதன் மூலம் பொறுமை ஏற்படுவது’.

இறைவனை தினமும் 5 நேரம் வணங்குவது என்பது அனைவருக்கும் எளிதான செயலாக அமைவதில்லை. உலக வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சிரமங்கள், அதிக குளிர், அதிக வெப்பம், மழை, தூக்கம், சோம்பல் போன்ற தடைகள், உடல்நிலையில் பின்னடைவு, தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்ற நெருக்கடிகள் இறைவணக்கத்திற்கு தடையை ஏற்படுத்தலாம். அது போன்ற நேரங்களில் இறைவணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

பொறுமை என்பது சோதனை ஏற்பட்ட உடனே வரவேண்டும். எல்லா நிலைகளையும் கடந்து தன்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை வரும் போது இனி இறைவன் விட்டவழி என்று கூறுவது பொறுமை அல்ல, இயலாமை.

இரண்டாவது நிலை, இறைவனுக்கு மாறு செய்வதில் இருந்து விலகி இருத்தல். பாவமான காரியங்கள் அனைத்தும் இன்பமானவை. இருப்பினும் அதைவிட்டு விலகி பொறுமையுடன் இருப்பது அவசியம். ஏன் என்றால் இறைவனால் தடுக்கப்பட்டவற்றில் இருந்து எவ்வளவு இன்பம் வந்தாலும் அது ஷைத்தானின் செயலாகவே இருக்கும். எனவே அதில் இருந்து விலகி பொறுமையுடன் இருப்பதே இறைவழியில் நடப்பதாகும்.

மூன்றாவது நிலை: சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது அதற்கு தீயவழியில்தீர்வு தேடுவது கூடாது. பொறுமையுடன் இருந்து இறைவனின் துணையுடன் அதை வெற்றிகொள்ள முன்வர வேண்டும்.

இதுகுறித்து திருக்குர்ஆன்(2:155) குறிப்பிடும் போது, ‘(நம்பிக்கையாளர்களே) பயம், பசி மேலும் பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே இச்சோதனைகயால் ஏற்படும் கஷ்டங்களை) சகித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள நற்செய்தி கூறுங்கள்’ என்று தெரிவிக்கிறது.

மேலும் பொறுமையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எது என்பது குறித்தும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.

‘அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள்‘( திருக்குர்ஆன் 2:156, 157)

இந்த புனித ரமலானில் நாம் பொறுமையாளர்களாய் இருந்து இறைவனின் அருளைப்பெற முயற்சி செய்வோம். ஆமீன்.

வடகரை, ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News