ஆன்மிகம்

பாவ மன்னிப்புக்கான நிபந்தனைகள்

Published On 2019-05-17 06:18 GMT   |   Update On 2019-05-17 06:18 GMT
‘எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களே, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்’ என்று திருக்குர்ஆன் (3:57) குறிப்பிடுகிறது.
ரமலான் மாதத்தில் முதல் 10 நாட்கள் இறைவனின் அருளைப்பெறும் நாட்களாகும். நடுப்பகுதி 10 நாட்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் நாட்களாகும். முதல் 10 நாட்கள் மூலம் எவர் அல்லாஹ்வின் அருளைப்பெற்றுக்கொள்கிறாரோ அவருக்கு நடுப்பத்தில் ‘மக்பிரத்’ எனும் பாவமன்னிப்பு இறைவன் வழங்குகிறான்.

இது குறித்து திருக்குர்ஆன்(66:8) இவ்வாறு கூறுகிறது:

‘ஈமான் கொண்டவர்களே, கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்பு பெறுங்கள், உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி உங்களை கவனச்சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் கீழே ஆறுகள் (சதா) ஓடிக்கொண்டே இருக்கும்; (தன்)நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக, எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, நிச்சயமாக நீ எல்லாப்பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறிப் (பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

ஒருவர் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்றால் 4 முக்கிய நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை

1. தான் செய்த பாவத்திற்கான, பாவச்செயலுக்காக வருந்த வேண்டும்.

2. மீண்டும் அந்த பாவத்தை செய்ய மாட்டேன் என்று உறுதிகொள்ள வேண்டும். அந்த உறுதியின் படி நடக்கவும் வேண்டும். இதன்படி மீண்டும் அந்த பாவத்தை செய்யலாமல் இருந்தால் இறைவன் நமது பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டான் என்பது அடையாளமாகும். ஆனால் மீண்டும் அந்த பாவத்தை செய்தால், இறைவனின் பாவமன்னிப்பு கிடைக்கவில்லை என்பது பொருளாகும்.

3. இறைவன் விதித்த கடமைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும். மனிதர்களில் யாரிடமாவது, ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு பெற வேண்டும். ஏன் என்றால் அவர் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்க மாட்டான்.

4. பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனை உண்டு என்பதை உணர்ந்து அறிந்து பயம் கொள்ள வேண்டும். அந்த பய உணர்வுடன் நடந்து கொண்டு பாவங்களில் இருந்து விலகிட வேண்டும்.

‘எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களே, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்’ என்று திருக்குர்ஆன் (3:57) குறிப்பிடுகிறது.

இறைவனின் திருப்பொருத்தத்தை பெறக்கூடியவர்களாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நம் அனைவரின் கடமையாகும்.

வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News