ஆன்மிகம்

இறைவனை நினைவுகூர்தல்

Published On 2019-05-14 07:44 GMT   |   Update On 2019-05-14 07:44 GMT
இந்த ரமலானில் அதிகமாக இறைவனை ‘திக்ர்’ செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கவாதிகளாக நாம் அனைவரும் மாற பிரார்த்திப்போம், ஆமீன்.
புனித மிகு ரமலான் காலத்தில் எந்த நேரமும் இறைவனின் நினைவிலேயே இருக்க வேண்டும். அதிகமாக ‘திக்ர்’ செய்ய வேண்டும். குறிப்பாக ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை அதிகம் சொல்ல வேண்டும். இறைவனை நினைவு கூற இது தான் சிறந்த சொல் ஆகும், இதை சொல்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

நபி மூஸா (அலை) அவர்கள், அல்லாஹ்விடம் ‘இறைவா, உயர்ந்த ஒரு கலிமாவை எனக்கு கற்றுக்கொடு’ என்று கேட்டார்கள். அப்போது இறைவன், ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுங்கள் என்றான்.

இதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘இறைவா, இந்தக்கலிமாவைத்தான் எல்லாரும் சொல்கிறார்களே’ என்ற போது, இறைவன் இவ்வாறு கூறினான்:

‘மூஸாவே, இந்தக்கலிமாவை ஒரு தட்டிலும், இந்த உலகில் உள்ள அனைத்தையும் மறு தட்டிலும் வைத்துப்பார். அப்போது கலிமா இருக்கும் தட்டு மட்டுமே கனமுள்ளதாக இருக்கும்’.

அந்த அளவுக்கு இந்த கலிமா சிறப்புமிக்கதாகும். இதை வலியுறுத்தும் வகையில் இந்தக்கலிமாவை அதிகமாக சொல்லிவருமாறு நபிகளாரும் கூடியிருக்கிறார்கள்.

ஒருமுறை, அபூ ஷுரைரா(ரலி) அவர்கள் இறைத்தூதல் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ‘மறுமையில் உங்கள் பரிந்துரை மூலம் நற்பாக்கியம் பெறுபவர் யார்?’ எனக்கேட்டார்கள்.

அதற்கு நபியவர்கள், ‘என் பரிந்துரையின் மூலம் நற்பாக்கியங்கள் பெறுபவர் யார் என்றால் எவர் உள்ளத்தூய்மையுடன் மனதாலும், உள்ளத்தாலும் ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுவாரோ அவர் தான்’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

பொதுவாகவே காலையிலும், மாலையிலும் இறைவனை அதிகமாக நினைவுகூர வேண்டும். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

ஈமான் கொண்டவர்களே, அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத்துதி செய்யுங்கள்(33:41-42)

குறிப்பாக ரமலான் மாதம் இறையருள் பொழியும் மாதமாகும். இறைவன் கீழ்வானம் இறங்கிவந்து தம் அடியாருக்கு அருள்புரியும் மாதமாகும். இந்த காலங்களில் நாம் அதிகமாக தொழுகையிலும், இறைவனை திக்ர் செய்து நினைவு கூர்வதிலும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் பாவமன்னிப்பு பெற்று இறைவனின் அருளுக்கு நாம் பாத்திரமாகலாம்.

அல்லாஹ் செய்யக்கூடிய அருளில் மிகப்பெரிய அருள் என்னவென்றால், நமது பாவங்களை மன்னிப்பது தான். அந்த மன்னிப்பு நமக்கு கிடைத்துவிட்டால் அதைவிட வேறு பெரிய பாக்கியம் எதுவாக இருக்க முடியும்.

எனவே இந்த ரமலானில் அதிகமாக இறைவனை ‘திக்ர்’ செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கவாதிகளாக நாம் அனைவரும் மாற பிரார்த்திப்போம், ஆமீன்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News