ஆன்மிகம்

நோன்பை பேணுதல்

Published On 2019-05-11 05:16 GMT   |   Update On 2019-05-11 05:16 GMT
ரமலான் நோன்பு காலம் முழுவதும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் பேணிக்காக்கப்பட வேண்டும். அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம் தேவை.
நோன்பின் மூலம் உள்ளம் தூய்மை அடையும், உடல் ஆரோக்கியம் பெறும், இறைவனின் அருளையும் பெற முடியும். ஆனால் காலை முதல் மாலை வரை உண்ணாமல், பருகாமல் இருப்பது மட்டும் நோன்பு அல்ல.

ரமலான் நோன்பு காலம் முழுவதும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் பேணிக்காக்கப்பட வேண்டும். அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம் தேவை.

அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய உடல் உறுப்பிகளில் முதல் நிலையில் இருப்பது கண்கள். அதன் பார்வை விசாலமானது. நல்லது- கெட்டது என்று அனைத்தையும் எந்த பாகுபாடும் இன்றி பார்க்கக்கூடியது கண்கள்.

எனவே தன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘பார்வை என்பது சைத்தானின் விஷம் கலந்த அம்புகளில் ஒன்று. அல்லாஹ்வின் தண்டனைக்கு பயந்து தன் பார்வையை எவர் பாதுகாத்து கொள்வாரே அவருக்கு உள்ளத்தில் ஈமான் பாதுகாக்கப்படும்’ (நூல்: ஹாகிம்).

அடுத்தது நாக்கு. இதன் மூலம் ஏராளமான நன்மைகளும் கிடைக்கும், தீமைகளும் உண்டாகும். எனவே இந்த ரமலான் காலங்களில் நன்மைகள் மட்டுமே செய்யும் வகையில் நாக்கின் செயல்கள் அமைய வேண்டும். பொய் சொல்வது, கோள் மூட்டுவது, பொய்யான சத்தியம் செய்வது, தகாத வார்த்தைகளை பேசுவது போன்ற தீய செயல்களை செய்யக்கூடாது. இதனால் தான் நோன்பு காலத்தில் யாராவது வீண்தாக்கம் செய்யவோ, சண்டைக்கோ வந்தால் பதிலுக்கு நாம் அது போல செய்யக்கூடாது. ‘நான் நோன்பாளி’ என்று கூறிவிட்டு அங்கிருந்து ஒதுங்கி விட வேண்டும்.

இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) இவ்வாறு அறித்தார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கொட்ட பேச்சுகளை பேச வேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று  இருமுறை கூறட்டும்.

இதுபோலவே நம் உடல் உறுப்புகளான கை, கால்கள், வாய், வயிறு போன்ற உடல் உறுப்புகளை தவறான செயல்களில் இருந்து விலக்கி பாதுகாக்க வேண்டும். அப்போது தான் நோன்பை சரியாக நிறைவேற்றிய பலன் கிடைக்கும். நோன்பு வைத்துக்கொண்டு தீய செயல்களை செய்தல், தீயவற்றை பார்த்தல், தீயவற்றை பேசுதல் தடுக்கப்பட்டவற்றை உண்ணுதல் போன்றவற்றை செய்தால் நோன்பினால் எந்த பலனும் கிடைக்காது.

எனவே தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது ‘எத்தனையோ நோன்பாளிகள் வெறும் தாகம், பசியோடு மட்டும் உள்ளனர். அவர்கள் நோன்பின் நன்மையை அடைந்து கொள்வதில்லை’ என்றார்கள். ( அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: நஸயி).

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News