ஆன்மிகம்

இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது அல்லது வெறுப்பது...

Published On 2019-04-23 05:02 GMT   |   Update On 2019-04-23 05:02 GMT
இறைவிசுவாசியின் அன்பு, நேசம், பாசம் அனைத்தும் சுயநலமில்லாமல், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான சகோதரத்துவ அடிப்படையில் இறைவனுக்காக அமையவேண்டும்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது அல்லது வெறுப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.

அபூ உமாமா (ரலி) கூறுகிறார்:

‘யார் ஒருவரை இறைவனுக்காக நேசிக்கிறாரோ, இறைவனுக்காக வெறுக்கிறாரோ, இறைவனுக்காக கொடுக்கிறாரோ, இறைவனுக்காக தடுக்கிறாரோ அவர் இறை நம்பிக்கையை பரிபூரணமாக்கிவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அபூதாவூத்)

ஒருவர் மற்றவரை நேசிப் பதும், வெறுப்பதும் இறை வனுக்காக வேண்டி இருந்தால் இதுவும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக தகுதி பெற்று விடுகிறது.

இறைவனுக்காக நேசிப்பதும், வெறுப்பதும் உள்ளம் சார்ந்த செயல். கொடுப்பதும், தடுப்பதும் உடல் சார்ந்த செயல்.

ஒட்டுமொத்தத்தில் இறைநம்பிக்கை பரிபூரணம் அடைய நமது செயல்கள் அனைத்தும் மார்க்கத்தின் அடிப்படையிலும், இறைநேசத்தின் அடிப்படையிலும் வெளிப்பட வேண்டும்.

‘இறைநம்பிக்கையின் சுவையை ஒருவர் அடைய ஆசைப்பட்டால் அவர் ஒருவரை நேசிக்கட்டும். அவர் அவரை இறைவனுக்காக அன்றி வேறெந்த காரணத்திற்கும் நேசிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)

பராஉ பின் ஆஸிப் (ரலி) தெரிவிக்கிறார்:

“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் ‘இறைநம்பிக்கையின் பலமான பகுதி எதுவென்று தெரியுமா?’ என்று கேட்டார்கள்.

நாங்கள் ‘தொழுகை’ என்றோம்.

‘தொழுகை அல்ல, அது ஒரு அழகு சாதனம்’ என நபி (ஸல்) விளக்கமளித்தார்கள்.

பிறகு ‘நோன்பு’ என்றோம்.

‘அதுவும் இல்லை’ என நபி (ஸல்) தெரிவித்தார்கள்.

பிறகு ‘அறப்போர்’ என்றோம்.

‘அதுவும் கிடையாது’ என பதில் கூறினார்கள்.

பிறகு நபியவர்கள் ‘இறைநம்பிக்கையின் பலமான பகுதி இறைவன் விஷயத்தில் நேசிப்பதும், இறைவன் விஷயத்தில் வெறுப்பதும் ஆகும்’ என தெரிவித்தார்கள். (நூல்: அஹ்மது)

தனிப்பட்ட முறையில் ஒருவர் ஒருவரை நேசிப்பதும், வெறுப்பதும் கூடாது. ஒருவரின் அழகுக்காக, அவரின் அறிவுக்காக, அவரின் செல்வாக்குக்காக, செல்வத்திற்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக என குறிப்பிட்ட குண நலன்களை பார்த்து நேசிப்பதாக அமைந்தால், அந்த நேசம் நிரந்தரமானது அல்ல. அது இருக்கும் வரைக்கும் நேசம் இருக்கும். அது இல்லாதபோது நேசமும் காணாமல் போய்விடும்.

ஒருவரை வெறுப்பதும், அவரின் தனிப்பட்ட தீய செயல்களுக்காக மட்டுமே இருந்துவிடக்கூடாது. தீயவர்களை வெறுக்க வேண்டும். தீய செயல்களை புரிபவர்களை அல்ல, தீய செயல்களை மட்டுமே.

இறைநம்பிக்கையாளர் மீது நமக்கு நேசம் இயற்கையாகவே வரவேண்டும். அது அவரின் இறைநம்பிக்கையை வைத்து மட்டுமே. அவர் ஏழை-பணக்காரர், சிறியவர்-பெரியவர், படித்தவர்-பாமரர் என்ற அளவுகோலை வைத்து அல்ல.

இறைமறுப்பாளர்கள் மீது வெறுப்பு இருக்கவேண்டும். அதன் அளவுகோல் இறைமறுப்பு என்ற தன்மையில் மட்டுமே, மற்ற செயல்பாடுகளில் அல்ல.

இறைவனுக்காக விருப்பு, வெறுப்பு கொள்ளும்போது அதனால் பிறருக்கு நன்மைகள் மட்டுமே கிடைக்கும். தனிப்பட்ட காரணங்களுக்காக அது வரும்போது அதனால் பிறருக்கு தீங்குகள் மட்டுமே விளையும்.

“நிச்சயமாக இறைவன் நாளை மறுமைநாளில் ‘எனது வல்லமையைக் கொண்டு நேசம் கொண்டவர்கள் எங்கே?’ என்று கேட்பான். பிறகு, ‘எனது நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத இன்றைய தினத்தில் நான் அவர்களுக்கு நிழல் தருவேன்’ என இவ்வாறு இறைவன் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள்”. (நூல்: முஸ்லிம்)

‘எனக்காக ஒருவருக்கொருவர் பிரியமாக நடந்துகொண்ட இருவருக்கும், எனக்காக சபையில் அமர்ந்து கொண்ட இருவருக்கும், எனக்காக தரிசித்துக் கொண்ட இருவருக்கும், எனக்காக செலவளித்த இருவருக்கும் எனது நேசம் அவசியமாகிவிட்டதாக இறைவன் கூறியதை நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: அஹ்மது)

“இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமைநாளில் இறைவன் ஏழு பேர்களுக்கு நிழலை அளிக்கிறான். அவர்களில் ஒருவர் இறைவனுக்காகவே பிரியம் கொண்டு இணைந்து, இறைவனுக்காகவே பிரிந்து செல்கின்ற இரண்டு நண்பர்கள் ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

“இறைவனுக்காக நேசிக்கும் இரு சகோதரர்களில் மிகச்சிறந்தவர் யாரெனில், ‘அவர்களில் மற்றவரை மிக அதிகமாக நேசிப்பவரே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (நூல்: அதபுல் முப்ரத்)

ஒரு மனிதர் மற்றொரு ஊரில் உள்ள சகோதரரை சந்திக்கச் சென்றபோது, அவரது பாதையில் இறைவன் ஒரு வானவரை எதிர்பார்த்திருக்க வைத்தான்.

அம்மனிதர் அந்த வானவரைக் கடந்தபோது, அவர் ‘எங்கே செல்கிறாய்?’ என்று கேட்டார்.

அந்த மனிதர் ‘இந்த ஊரிலுள்ள எனது சகோதரரை சந்திக்கச் செல்கிறேன்’ என்றார்.

அந்த வானவர், ‘அவர் உமக்கு ஏதேனும் உபகாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவா செல்கிறாய்?’ என்று கேட்டார்.

அவர், ‘இல்லை, எனினும், நான் இறைவனுக்காக அவரை நேசிக்கிறேன்’ என்று பதில் கூறினார்.

‘நான் இறைவனால் அனுப்பப்பட்ட வானதூதர், நீ இறைவனுக்காக உமது சகோதரரை நேசித்தது போல் நிச்சயமாக இறைவனும் உம்மை நேசிக்கிறான்’ என்று கூறினார். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

‘என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்களுக்கு ஒளியினால் தயார் செய்யப்பட்ட மேடைகள் உண்டு. அதில் அவரைக் கண்டு நபிமார்களும், வீரமரணம் அடைந்தவர்களும் ஆசை கொள்வார்கள்’ என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: முஆத்பின் ஜபல் (ரலி), திர்மிதி)

இறைவன் தமக்காக நேசிக்கும் தனது அடியார்களுக்கு மிகஉயரிய அருட் கொடைகளை வழங்கி கவுரவப்படுத்துகின்றான்.

இறைவிசுவாசியின் அன்பு, நேசம், பாசம் அனைத்தும் சுயநலமில்லாமல், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான சகோதரத்துவ அடிப்படையில் இறைவனுக்காக அமையவேண்டும். இதில்தான் அவர் இறைவிசுவாசத்தின் சுவையையும், இன்பத்தையும் பெறவேண்டும்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை
Tags:    

Similar News