ஆன்மிகம்

கீழ்ப்படிதல் என்னும் சிறந்த பண்பு

Published On 2019-04-05 04:57 GMT   |   Update On 2019-04-05 04:57 GMT
இன்ஷாஅல்லாஹ், இறைவனிடம் கலப்படமில்லாத அன்பும், உண்மையான கீழ்ப்படிதல் குணமும் கொண்டு நம் வாழ்வு செம்மையாக, அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
நாம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தெள்ளத்தெளிவாக திருக்குர்ஆனில் சொல்லிக்காட்டியுள்ளான். இன்னும் முகம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்துள்ளார்கள்.

இறைவனின் அன்பைப் பெற்றவர் களுள் ஒருவராக நாம் இருக்க வேண்டுமென்றால் இறைவனுக்குப் பிரியமான வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கின்றனவா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இறைவனின் திருப்பொருத்தத்தை பெறும் முயற்சியில் வணக்க வழிபாடுகளை செம்மையாகச் செய்யும் ஒருவர் தன் உறவினர்களிடமும், பார்க்கும், பழகும் மனிதர்களிடமும் நல்ல விதமாக நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால், அவரின் வணக்க வழிபாடுகள் இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தராது.

மாறாக ஒருவர் இறைவனுக்குப் பிடித்தமானவற்றை செய்யும் அதே வேளையில் மற்ற மனிதர்களிடமும் அன்பாகவும், இணக்கமாகவும் நடந்து கொண்டால், அவருக்கு ஈருலக நன்மைகளையும் அல்லாஹ் வாரி, வாரி வழங்குவான். இன்ஷாஅல்லாஹ், கீழ்ப்படிதல் என்னும் ஒரேயொரு பண்பு நம்மிடம் இருக்குமானால், மற்ற நற்பண்புகளும் நம்மிடம் குடி கொள்ளும். அதனால், இறைவனுக்கு நெருக்கமானவர்களின் நாமும் ஒருவராகி விடுவோம்.

இறைவனின் அன்பைப்பெற்ற நபிமார்களில் இப்ராகிம் (அலை) அவர்கள் முக்கியமானவர்கள். அல்லாஹ் தன் திருமறையில் அவர்களை தன் ‘மெய்யன்பர்’ என்று பொருள் படக்கூடிய ‘கலீல்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறான்.

‘மேலும், இப்ராகிம் (அலை) அவர்களை மக்களுக்கு இமாமாக (தலைவராக) ஆக்குகிறேன்’ என்று இறைவன் திருமறையில் (2:124) கூறியுள்ளான்.

அந்த அளவுக்கு அல்லாஹ்வின் பிரியத்தைப் பெறுவதற்கு முக்கியமான காரணம், இப்ராகிம் (அலை) நபியவர்கள் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத அளவிற்கு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். அத்துடன், அல்லாஹ்வின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படியக்கூடியவர்களாக இருந்ததும் ஒரு காரணமாகும்.

சிதிலமடைந்திருந்த இறையில்லத்தை இறைவனின் கட்டளைப்படி தன் மகனார் இஸ்மாயில் (அலை) அவர்களுடன் சேர்ந்து இப்ராகிம் (அலை) அவர்கள் சீரமைத்தார்கள். அன்னாரின் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ், மக்காவில் வசிக்கும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு உணவை அளித்து, அதனை பாதுகாப்பான இடமாகவும் ஆக்குவதற்கு வாக்குறுதி கொடுத்தான்.

அல்லாஹ், ‘இப்ராகிம் (அலை) அவர்களை மக்களுக்கு தலைவராக ஆக்குகிறேன்’ என்று வாக்களித்ததும், இப்ராகிம் (அலை) அவர்கள், ‘தங்கள் சந்ததியரிலும் அப்படிப்பட்டவர்களை ஆக்குவாயா?’ என்று இறைவனிடம் கேட்டார்கள்.

இந்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவர்களின் சந்ததியில் இருந்து இறுதித்தூதரான முகம்மது நபி (ஸல்) அவர்களை, மக்களுக்கு இமாமாக, வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்தருளினான்.

இப்ராகிம் (அலை) அவர்கள், இறைவனின் கட்டளையை ஏற்று மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் கொதிக்கும் பாலைநிலத்தில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்கள். இறைவன் ஏவிய போதெல்லாம், காரண, காரியங் களைப் பற்றி ஒரு முறை கூட சிந்தித்தார்களில்லை. அருமை மகனைப் பலியிட உடனே தயாரானது கூட இறைவனிடம் அவர்களுக்கு இருந்த கீழ்ப்படியும் குணத்தினால் தான்.

இதனாலேயே இறைவனின் அன்பையும், நெருக்கத்தையும் பெற்றார்கள். இன்னும் அவர்கள் ஒருபோதும் தங்களைப் பற்றி எந்தக்கவலையும் கொண்டிருக்கவில்லை. எப்பொழுதும் தங்களின் சந்ததியினருக்காகப் பிரார்த்தனை புரிபவர்களாக இருந்தது அவர்களின் சிறப்பான குணமாக இருந்தது. இப்படி, இப்ராகிம் (அலை) அவர்களின் வரலாற்றில் இருந்து பல சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

எனவே, இறைவனுக்கு கீழ்ப்படிதல் என்பது மிக முக்கியமான விஷயமாகும். கீழ்ப்படிதல் என்னும் ஒரு குணம் ஒருவரிடம் இருக்குமானால், அவரிடம் மற்ற நல்ல குணங்கள் நிச்சயமாக இருக்கும்.

இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இறைவனுக்கு மாற்றமான விஷயங்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.

கீழ்ப்படிதல் என்றாலே, என்ன செய்ய வேண்டும் என்று ஏவப்படுகிறோமோ அவற்றை மறுபேச்சின்றி செய்வதாகும்.

தொழுகை முதலான வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, நாம் எப்படி இருக்க வேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டுள்ளானோ, அவற்றை எல்லாம் பின்பற்றவேண்டும் என்பதாகும்.

கீழ்ப்படிதல் என்னும் மேலான குணம் உள்ள மனிதர்கள் தங்கள் பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் தங்கள் மேலதிகாரி களுக்கு கட்டுப்படுவார்கள். இதனால் அவர்களைப் பார்த்து அவர்களின் பிள்ளைகளும் அவர்களின் சொல் கேட்டு நடப்பார்கள்.

கீழ்ப்படிதல் என்னும் குணத்தின் அடிப்படையில் மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

இறைவன் சொல்லிக்காட்டியுள்ள கீழ்ப்படிதல் குணமுடையவர்கள் ஒரு வகையினர். இவர்கள் இறையச்சம் உடையவர்களாக இருப்பார்கள். இறையச்சத்தின் காரணமாக எல்லா ஒழுக்கங்களையும் பேணக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இன்னொரு வகையினர், இறை வனுக்கு கீழ்ப்படியாதவர்கள். இவர்கள் வாழ்க்கையிலும் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கமாட்டார்கள். இறையச்சமின்றி பொய், களவு, புறம், அவதூறு, பிறன்மனை நோக்கல் என எல்லா கெட்ட பழக்கங்களையும் கொண்டிருப்பர். எல்லா பலன்களையும் அனுபவித்து விட்டு இனி ஒன்றும் கிடைக்காது என்ற நிலை ஏற்படும்பொழுது நெருக்கமாகப் பழகியவர்களையே காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்கள்.

இவர்கள் இறைவனின் வெறுப்பிற்கும், கோபத்திற்கும் ஆளாவார்கள். இறைவனின் தண்டனைக்குப் பயந்து இறைவனிடமும், தங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்டு திருந்தி வாழ்வதற்கு இவர்கள் முயற்சி செய்தால் அவர்களின் வாழ்வு சீர் படும்.

இன்னும் ஒரு வகையினர், இறைவனுக்கு மட்டும் கீழ்ப்படிந்து விட்டு மனிதர்களிடம் உறவினை முறித்து வாழ்பவர்கள். இவர்களுக்கும் இறைவனின் அன்பு கிடைக்காது.

இன்ஷாஅல்லாஹ், இறைவனிடம் கலப்படமில்லாத அன்பும், உண்மையான கீழ்ப்படிதல் குணமும் கொண்டு நம் வாழ்வு செம்மையாக, அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக. 

ம. அஹமது நவ்ரோஸ் பேகம்
Tags:    

Similar News