ஆன்மிகம்

இறைநம்பிக்கையை பலப்படுத்துவது எப்படி?

Published On 2019-02-26 04:56 GMT   |   Update On 2019-02-26 04:56 GMT
இறைநம்பிக்கை வாழ்வை வளமாக்கும், ஆன்மாவை தூய்மையாக்கும், மனதுக்கு அமைதியை தரும். அந்த நம்பிக்கையை நாளும் வளர்ப்போம், இறையருள் பெறுவோம்.
இஸ்லாமிய இறைநம்பிக்கைகள் குறித்த இந்த தொடரில் கடந்த வாரம் இறைநம்பிக்கையின் 70-க்கும் அதிகமான கிளைகள் குறித்தும், அவை எவை என்பது குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக முதல் நம்பிக்கையான இறைவனை நம்புவது குறித்து இந்த வாரம் பார்க்கலாம்.

இறைநம்பிக்கையின் வேர் என்பது, முதலில் படைத்த இறைவனை நம்புவது, அவனை உளமாற ஏற்பது.

இறைவன் தனித்தவன், அவனுக்கு ஈடு-இணை எதுவும் கிடையாது. அவன் தனது பண்பு களிலும், செயல்களிலும் பிறரைச் சாராதவன். அவனுக்கு தாய்-தந்தை, மனைவி-மக்கள், உற்றார்-உறவினர், பங்காளி-கூட்டாளி போன்ற எந்த உறவுமுறைகளும் கிடையாது.

இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங் களையும் படைத்து இயக்கும் சக்தி பெற்றவன் இறைவன். உணவு, குடிநீர், உறக்கம், மறதி, அழுகை, சிரிப்பு, நோய், பலவீனம், இயலாமை, சந்தேகம் போன்ற எந்த அம்சங்களும் அவனுக்குக் கிடையாது.

அனைத்தும் அறிந்தவன்

இறைவன் தனக்கே உரித்தான பாணியில் பார்த்தல், கேட்டல், அறிதல், பேசுதல், ஆக்கல், அழித்தல், கொடுத்தல், எடுத்தல், உதவுதல், ஆளுமை செய்தல், அடக்கி ஆளுதல், சீராக இயக்குதல் போன்ற பண்புகளைக் கொண்டு, படைப்பினங்களை தன் சுய விருப்பப்படி ஆளுமை செலுத்துகின்றான்.

அவன் படைப்பினங்களின் நிறை-குறைகளை அறிந்தவன். அவற்றின் அசைவுகளை உன்னிப்பாக உற்று நோக்குபவன். அவற்றின் சப்தங்களையும், உள் உணர்வு களையும் நுண்ணறிபவன்.

அவன் இறையாண்மை மிக்கவன்; உயர்ந்தபட்சத் தன்னிறைவு கொண்டவன். இத்தகைய இறைவனின் பண்பிலக்கணங்களை திருக்குர்ஆன் நான்கே வரிகளில் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“நபியே, (அல்லாஹ்) ‘இறைவன் ஒருவன்’ என கூறுவீராக. அவன் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவுமில்லை, (யாருக்கும்) அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமே இல்லை.” (திருக்குர்ஆன் 112:1-4)

இறைவனை நம்பி வழிபடுவதற்கு இடைத்தரகர் அவசியமில்லை. கட்டணங்களும், காணிக்கைகளும் தேவையில்லை.

இறைவன் தேவையற்றவனாக இருப்பதால் அவனை ஏன் தொழவேண்டும்? அவனுக்காக ஏன் நோன்பிருக்க வேண்டும்? என்ற நியாயமான கேள்வி தோன்றலாம்.

தொழுகை, நோன்பு உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளை யிடுவது, அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல, அதை நிறைவேற்றுவதால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைக்காகவே.

சிறந்த நிர்வாகி

‘இறைவன் அவனையன்றி வேறு இறைவன் இல்லை. அவனோ நித்திய ஜீவன்; (அனைத்தையும்) நிர்வகிக்கும் நிலையானவன்.’ (திருக்குர்ஆன் 3:2)

இறைவன் தனது வாழ்வில் எவரையும் சார்ந்திராதவன்; இறப்பு என்பதே இல்லாதவன்; இல்லாமை என்பது முன்னும், பின்னும் இல்லாதவன். அவன் ஒரு நிலையான நிர்வாகி. மற்ற எவருக்கும் இத்தகைய பண்புகள் பொருந்தாது. இப்படிப்பட்ட இறைவனை மக்கள் அனைவரும் நம்புவது அவசியம்.

மேற்கூறப்பட்ட பண்பிலக்கணங்களை குறைக்காமல், சிதைக்காமல் இறைவனை நம்புபவர்கள் இறை விசுவாசிகளாக கருதப்படுவர். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை நம்புங்கள்’. (திருக்குர்ஆன் 4:136)

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முகம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ரமலானில் நோன்பு நோற்றல், ஜக்காத் வழங்குதல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), புகாரி)

இறைநம்பிக்கையை பலப்படுத்தும் பத்து அம்ச திட்டங்கள் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் வருகிறது. அவை வருமாறு:-

1) இறைவனின் திருநாமங்களை அறிவது: ‘இறைவனுக்கு தொண்ணூற்றொன்பது திருப் பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன்மீது நம்பிக்கை வைத்து, அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

2) இறை வசனங்களை ஆராய்வது: ‘நம்பிக்கை கொண்டோர் யாரெனில், இறைவனைப் பற்றி கூறப்பட்டால், அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால், அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (திருக்குர்ஆன் 8:2)

3) முகம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்வது.

4) முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டின் உயிர் நாடியான இறை தியானத்தை அதிகப்படுத்துவதும், இறைவனிடம் பிரார்த்தனையை அதிகப்படுத்துவதும் ஆகும்.

5) படைப்பை சிந்திப்பதும், ஆன்மாவை அகக்கண் கொண்டு நோக்குவதும் இறை நம்பிக்கையை பலப்படுத்தும்.

6) மார்க்கத்தின் அழகிய செயல்களை அறிந்து செயல்படுவது.

7) இறைவணக்கத்தில் நல்ல நிலையை அடைந்து, படைப்பினங்களுக்கு உபகாரம் செய்வது.

8) இறைவனை நோக்கி அழைப்பது.

9) இறைநம்பிக்கைக்கு எதிரானவற்றை செய்வதிலிருந்து மனதை கட்டுப்படுத்துவது.

10) உலகின் உண்மையான அந்தரங்கத்தை உணர்ந்து, மறு உலக வாழ்வை தேர்வு செய்வது.

இப்படிப்பட்ட அம்சங்களை முஸ்லிம்கள் கடைப்பிடித்து வாழ்ந்தால், அவர்களின் இறை நம்பிக்கை மென்மேலும் விரிவடையும், பலப்படும்.

இறைநம்பிக்கை வாழ்வை வளமாக்கும், ஆன்மாவை தூய்மையாக்கும், மனதுக்கு அமைதியை தரும்.

இறைநம்பிக்கை வாழ்க்கையின் இன்றியமையாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நாளும் வளர்ப்போம், இறையருள் பெறுவோம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Tags:    

Similar News