ஆன்மிகம்

இறைவனே, மனிதனுக்கு கற்றுக்கொடுத்தான்

Published On 2019-02-15 04:15 GMT   |   Update On 2019-02-15 04:15 GMT
திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5)
உலகில் பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தன்மை வாய்ந்ததாகவே வாழ்ந்து மறைகின்றன. இதில் மனிதன் மட்டும் நிகரில்லாத தனித்துவம் பெற்றவனாக விளங்குகிறான்.

வானவர்கள் என்ற மலக்குகள் தன்னிச்சையாக எதுவும் செயல்பட முடியாதவர்களாய் இருக்கின்றார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட இறை ஏவலை மட்டுமே அவர்களால் செயல்படுத்த முடியும்.

ஜின் இனத்தை சார்ந்த எதிர்மறை சிந்தனையாளன் ஆன சைத்தான், பாவம் செய்வதற்கான தன்மை மட்டுமே கொடுக்கப்பட்டவனாக இருக்கின்றான்.

ஆனால். மனிதனுக்கோ நல்லதையும் கெட்டதையும் அறிந்து, அவ்விரண்டையும் செயல்படுத்திடும் ஆற்றலை மனிதனுக்கு இறைவன் தந்துள்ளான் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

‘(மனித) ஆத்மாவின் மீதும் அதனை செவ்வையாக (ஒழுங்குப்படுத்தி) அமைத்த இறைவன் மீதும் சத்தியமாக, அதற்கு (மனித ஆத்மாவிற்கு அதன்) தீமையையும், அதனுடைய நன்மையையும் இறைவன் உணர்த்தினான். (91:7-8)

‘(முதல் மனிதனான) ஆதமுக்கு (ஒவ்வொன்றின்) பெயர்களையும் அவன் கற்றுக்கொடுத்தான்’. (2:31)

இறைவனிடம் கற்றுக்கொண்ட ஆதி மனிதனான ஆதம் (அலை) அவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் உலகில் தோன்றியுள்ள ஒவ்வொரு பொருட்களையும் அதன் குணத்திற்கு ஏற்ப பெயர் வைத்து அழைக்க இறைவனின் அருளாலேயே தெரிந்து கொண்டார்கள்.

தனது மானத்தை (பிறப்பிடத்தை) மறைத்துக்கொள்ளும் பண்பு என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமான குணமாகும். ஆடைகள் இல்லாத அந்த ஆரம்ப காலத்தில் கூட மனிதர்கள் இலை தழைகளை இடுப்பில் ஆடையாக கட்டிக்கொண்டார்கள். இதுபோன்று மானத்தை மறைத்துக்கொள்ளும் பண்பாடு என்பது வேறு எந்த ஒரு உயிரினங்களிடமும் காணப்படவில்லை.

அதைப்போல நெருப்பை கண்டு உயிரினங்கள் அனைத்தும் பயந்து ஓடின. ஆனால் மனிதன் மட்டுமே அந்த நெருப்பை பக்குவமாக தன்வசப்படுத்திக் கொண்டான். நெருப்பின் பயன்பாடு மனிதனின் அன்றாட வாழ்வில் புழக்கத்திற்கு வந்த பிறகு தான், மனிதனின் வாழ்வு மற்றவைகளை விட மிக உச்சத்திற்கு சென்றது.

இதுபோன்ற நுட்பமான அறிவை இறைவன் மனிதனுக்கு உணர்த்தியதால் தான் எல்லாக் கலைகளிலும் அவன் தேர்ச்சி பெற்றவனாகத் திகழ்கின்றான். மனிதன் தனது வாழ்வியல் நெறிமுறைகளை செழுமைப்படுத்தி சீராக வாழ்ந்திட, நபிமார்களின் வாயிலாக இறைவன் வேதங்களை மனிதர்களுக்கு பரிசாக அளித்தான்.

இறைவன் மனிதனை மனிதனாகவே தான் படைத்துள்ளான். இன்னும் அம்மனிதர்களிடமிருந்தே அவனது சந்ததிகளையும் இறைவன் பெருகச் செய்துள்ளான். மனிதப் பிறப்பின் உண்மை நிலை குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்திக்கூறுகிறது:

‘இறைவன் வானவர்களை நோக்கி, எனது பிரதிநிதியை (ஆதம் என்ற மனிதரை) பூமியில் நான் உண்டாக்கப் போகிறேன் (என்றான்)’. (2:30)

இங்கே ஆதம் என்ற மனிதரே மனித இனத்தின் தொடக்கமானவராக உள்ளார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.

மனித அறிவு என்பது அவன் தோன்றிய காலம் முதற்கொண்டே சேகரமாகி தொடர்ந்து பயணப்பட்டு வரும் ஒன்றாகும். அவ்வாறு கிடைத்த அறிவை பாதுகாக்கவும் அதை மற்றவர்களுக்கு கற்றுத்தரவும், அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வந்து ஏட்டு வடிவில் நிலைபெறச் செய்யவும் மனிதனால் மட்டுமே முடியும் என்பதை திருமறை வசனம் இவ்வாறு கூறுகின்றது:

‘அவன் (இறைவன்) எத்தகையவன் என்றால் எழுதுகோலைக் கொண்டு (மனிதனுக்கு) அவன் கற்றுக்கொடுத்தான். மனிதன் அவன் அறியாதவற்றையும் (எல்லாம்) இறைவன் (அவனுக்கு) கற்றுக்கொடுத்தான்’. (96:4-5)

இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இந்த தொடர்பு தான் அவனை மற்ற எல்லா உயிர்களையும் விட மிக மேலானவனாக மாற்றியுள்ளது என்றால் அது மறுக்க முடியாத உண்மையாகும்.

மேற்கண்ட இறைவசனத்தில் எழுதுகோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இங்கு எழுதுகோல் என்பது மனித மனங்களில் இறையருளால் உண்டாகும் எண்ண உதிப்பையே குறிப்பதாக உள்ளது.

அந்த உதிப்பை கொண்டு தான் மனிதன் உலகில் எழுதுகோலை கண்டுபிடித்தான். அந்த எழுதுகோல் தான் மெஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் தொடர்ந்து உலகில் எழுதிக்கொண்டே இருக்கிறது.

அறிவை சேமித்து வைக்கும் சாதனமாக எழுதுகோல் உள்ளது. அவ்வாறு மனிதன் தான் உணர்ந்ததை பிறருக்கு கற்றுத்தரவும், பிறர் கற்றுத்தருவதை புரிந்து கொள்ளவும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்.

எனவே மனிதனின் அறிவுக்களஞ்சியத்தில் மாபெரும் ஆயுதமாய் விளங்குவது எழுதுகோலே ஆகும். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தனக்கு கிடைத்த அனுபவ அறிவை மற்றவைகளோடு பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவைகள் அல்ல.

எல்லா உயிரினங்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திட ஒரு வகையான சப்தங்களையோ அல்லது சமிக்ைஞகளையோ வேண்டுமானால் பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமே தவிர மனிதனை போன்று பேசவோ, எழுதவோ, சிரிக்கவோ, அழவோ, ரசிக்கவோ, ஒருபோதும் முடியாது.

மனிதன் அழகிய முறையில். படைக்கப்பட்டுள்ளதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5)

இறைவன் தந்த அறிவை கொண்டு மனிதன் நல்லதை நாடும் போது அவன் உயர்வுக்கு மேல் உயர்வை பெற்றுவிடுகிறான். அதனை வீணடித்து கீழான சுகபோகத்தில் மூழ்கி கிடப்பவர்கள் மனிதர்களில் கீழானவர்களிலும் கீழானவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் நமக்குசொல்லிக் காட்டுகிறது.

எனவே மனித குலம் அவர்கள் அறியாததை எல்லாம் கற்றுத்தந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடன் வாழ்வதே சிறந்த நன்றிக்கடனாக அமையும்.

மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி.
Tags:    

Similar News