ஆன்மிகம்

ஆட்சி அதிகாரம் எதற்கு...?

Published On 2018-12-14 03:31 GMT   |   Update On 2018-12-14 03:31 GMT
நியாயமாக ஆட்சி செய்வதும், தனக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொறுப்பை நியாயமாக நடத்துவதும் மனித நேயம் வளரவும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.
‘அதிகாரம்’ என்பதை ‘ஆள்வது’ என்ற பொருளில் மட்டுமே மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அதிகாரம் என்பது ‘சேவை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு’ என்பதுதான் உண்மை.

மக்களுக்காக சேவை செய்ய இறைவன் தேர்ந் தெடுத்துள்ளவரே தலைவராவார். அவர் ‘தலைவர்’ என்பதையும் தாண்டி ‘பொறுப்பாளர்’ என்பதே சரியானதாகும்.

இவர்கள் மட்டுமல்ல, யார் யாரெல்லாம் யார் யாருக்கு சேவகம் செய்ய விதிக்கப்பட்டு இருக் கிறார்களோ அவரவர்கள் தங்கள் கடமையை பொறுப்பாக செய்ய வேண்டும்.

இறையச்சம் கொண்ட ஒருவர், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அதிகாரத்திற்காக பயன் படுத்த மாட்டார். மாறாக, சேவையாகவே அந்த வாய்ப்பை பயன்படுத்துவார்.

‘அதிகாரம்’ என்ற சொல் நாட்டை ஆள்பவர்களை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, குடும்ப தலைவர் களையும் குறிக்கும்.

‘நாடோ, வீடோ, எங்கு ஆள்பவராக இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்று மறுமை நாளில் கேள்வி கேட்கப்படும்’ என்று இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித்தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளர் ஆவார். அவர் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவார். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவார். அவள் அது குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு பணியாள் தன் எஜமானனின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான், அவன் அதுகுறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க. உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்’. (புகாரி)

அதிகாரம் என்பது பொறுப்பை நிறைவேற்ற கொடுக்கப்பட்டுள்ள அமானிதமாகும். அதை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்தக் கூடாது.

ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து மறுமைநாளில் விசாரிக்கப்படும் என்பதால், பொறுப்பை எடுத்துக்கொள்ள யார் ஆசைப்படுகிறார்களோ அவர் களுக்கு முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறும் அறிவுரை என்னவெனில், ‘நீங்கள் ஆட்சிப்பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை(தரும் சுகங்)களிலேயே பதவி(ப்பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது தான்) மோசமானது’ (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), புகாரி).

ஆட்சிப்பொறுப்பை நாமாக விரும்பி கேட்பதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாக அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) குறிப்பிட்டு இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

‘நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) அப்துர் ரஹ்மானே, ஆட்சிப்பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில் நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப் படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களது சத்தியத்(தை முறித்துவிட்டு, முறித்த)திற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள் என்று சொன்னார்கள்’. (புகாரி)

நியாயமாக ஆட்சி செய்வதும், தனக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொறுப்பை நியாயமாக நடத்துவதும் மனித நேயம் வளரவும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.

வி.களத்தூர் கமால் பாஷா.
Tags:    

Similar News