ஆன்மிகம்
பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி யானை மீது கொடி ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா தொடங்கியது

Published On 2018-12-10 04:20 GMT   |   Update On 2018-12-10 04:20 GMT
பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கீழுர் ஜமாஅத்தில் இருந்து நிறைபிறை கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பள்ளிவாசல் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு பச்சைக்களை ஊர்வலம் நடக்கிறது. 18-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு ஓதும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத்தில் இருந்து 10-ம் இரவு கொடி ஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.

வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலையில் ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா, கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News