ஆன்மிகம்

சிறப்புகள் நிறைந்த நபித்தோழர்

Published On 2018-11-27 03:49 GMT   |   Update On 2018-11-27 03:49 GMT
ஸாத் (ரலி) அவர்களின் சிறப்பு மிகு போர்த்தந்திரமும், குறிபார்த்து அம்பு எய்யும் தனித்திறமையும், நுணுக்கமாக திட்டமிடும் நுண் அறிவும் பல போர்களில் இஸ்லாமியருக்குப் பெரும் வெற்றியை ஈட்டுத்தந்திருக்கிறது.
இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸாத் (ரலி). இவர் போர் தந்திரங்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற வீரர். குறிபார்த்து அம்பெய்துவதில் மிக வல்லமை பெற்றவர்.

உஹது போரில் அண்ணல் எம்பெருமானாரை பாதுகாக்கும் பொறுப்பு ஸாத் (ரலி) மற்றும் அபுதர் (ரலி) ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

நபி (ஸல்) அவர்களை பாதுகாக்கின்ற அந்தப் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டே எதிரிகளையும் எதிர்த்துப் போரிட்டு வெட்டி வீழ்த்தினார் ஸாத் (ரலி). முடிவில் வெற்றிக்கனியையும் பறித்து அண்ணலாரின் கரங்களில் பரிசாய் அளித்தார்கள்.

அதுமட்டுமல்ல, நபி (ஸல்) அவர்களால் சுவனத்துப்பூக்கள் என்று சுபச்செய்தி சொல்லப்பட்ட பத்து பேர்களில் ஸாத் (ரலி) அவர்களும் ஒருவர். அந்த பெருமை மிகு சிறப்பு கொண்டிருந்தும் இஸ்லாம் விதித்த வழிமுறைகளில் சிறிதும் மாற்றம் இன்றி வாழ்ந்து வந்தார்.

‘இறைவா, ஸாத் (ரலி) அவர்களின் நியாயமான பிரார்த்தனைகளை நீ ஏற்றுக்கொள்வாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இதன்காரணமாக ஸாத் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் பல கட்டங்களில் அவர் செய்த பிரார்த்தனைகள் இறைவனால் உடனே ஒப்புக்கொள்ளப்பட்டு அத்தாட்சிகள் வெளியானதை அன்றைய காலத்தில் வாழ்ந்த அத்தனை நபித்தோழர்களும் அறிந்திருந்தனர்.

அதனால்தான் ஸாத் (ரலி) அவர்களின் துஆவிற்குப் பயந்து கொண்டிருந்தனர். இஸ்லாமிய கொள்கைகளுக்கோ, கோட்பாடுகளுக்கோ முரண்பாடாக நடக்க முயன்றால் அது ஸாத் (ரலி) அவர்களுக்கு தெரியும் பட்சத்தில் நம்மை சபித்து விடுவாரோ என்று அஞ்சி அதனை விட்டும் தவிர்த்து வாழ்ந்தனர். இந்த சிறப்பும் இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட மாபெரும் அருட்கொடையாகும்.

இஸ்லாமிய படையினர் மாபெரும் வெற்றி பெற்ற கன்தக் போரின் மூலம் கிடைத்த பொருட்களை நபிகளாரிடம் கொண்டு வந்திருந்தனர். அதில் ஒரு வாளும் இருந்தது. போரில் கிடைத்த பொருட்கள் பங்களித்து கொடுப்பதற்கு முன்பாகவே அதனை நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு பெற்றுவிட வேண்டும் என்று ஸாத் (ரலி) விரும்பினார். இதுபோல மற்ற நபித்தோழர்களும் தனக்கென தான் விரும்பிய பொருட்களை தருமாறு நபிகளாரிடம் வேண்டி நின்றார்கள்.

அப்போது ஸாத் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம், “யா! ரஸூலுல்லாஹ், நான் அம்பெய்வதில் வல்லவன். இருந்தும் வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்க நாடுகிறேன். போரில் கிடைத்த பொருளில் இந்த வாளை எனக்கு அன்பளிப்பாக தருவீர்களா?” என்று வினவினார்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து, “ஸாதே அந்த வாளை இருந்த இடத்திலேயே வைத்துவிடுவீராக” என்றார்கள்.

அந்த வாளை இழக்க தயாரில்லாத தன் மனதின் தூண்டுதலால் மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் தன் ஆசையை வலியுறுத்தினார். அப்போது நபி (ஸல்) அவர்களின் குரலில் கடுமையை உணர்ந்தார் ஸாத் (ரலி).

நபித்தோழர்களின் ஆசையையும் பிடிவாதத்தையும் விரும்பாத இறைவனும் ‘வஹி’ எனப்படும் இறைச்செய்தியை இறக்கினான்.

“(நபியே!) ‘அன்ஃபால்’ (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ‘அன்ஃபால்’ அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் யாதொன்றையும் மறைத்துக்கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்”. (திருக்குர்ஆன் 8:1).

இந்த இறைச்செய்தியை அறிந்த ஸாத் (ரலி) பயந்து நடுங்கியது மட்டுமில்லாமல் தன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு, ஷைத்தானுடன் கை கோர்த்துக் கொண்ட நிலையை எண்ணியும் வருந்தினார்கள்.

இது, நபித்தோழர்களுக்கு பொதுவாக இறக்கப்பட்ட வசனமாக இருந்தாலும் ஸாத் (ரலி) தனக்காக அது இறக்கப்பட்டதாக எண்ணி பயந்தார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஸாத் (ரலி) அவர்கள் மிகவும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நோயின் கடுமையைக் கருதி தனக்கு மரணம் நெருங்கி விட்டதோ என்று கவலை கொண்டார். மேலும் அப்போது தனக்கு ஆறுதல் சொல்ல வந்த நபி (ஸல்) அவர்களிடம் “நபியே! ரசூலே! எனக்கு மரணம் நெருங்கிவிட்டதோ என சந்தேகிக்கிறேன். அதற்கு முன்னால் என் செல்வம் முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்து விடுகிறேன்” என்றார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

ஆனால் ஸாத் (ரலி) அவர்கள் விடவில்லை, “என் செல்வத்தில் பாதியையாவது அல்லாஹ்வின் பாதையில் செலவிடலாமா?” என்று மீண்டும் வினவிய போது அதையும் அண்ணலார் மறுத்து விட்டார்கள்.

“அப்படியானால் என் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியையாவது இறைவனுக்கு பொருத்தமான காரியத்தில் செலவிடலாமா?” என்று அடுத்து கேட்டபோது அண்ணலார் அவர்கள் அமைதி காத்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்திற்குப் பிறகு தான், ‘ஒருவன் தன் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியை தான தர்மங்களில் செலவிடலாம். தன் தேவைக்குப் போக மீதியை குடும்பத்தினருக்காக விட்டுச் செல்லலாம்’ என்ற நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டது.

அண்ணலாரின் மறைவிற்கு பின்பும் கூட அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்திலும் அதன் பின்னால் உமர் கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் ஸாத் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் கொள்கையில் உறுதி கொண்டு கலீபாக்களுக்கு உறுதியான துணையாக இருந்தார்கள்.

ஸாத் (ரலி) அவர்களின் சிறப்பு மிகு போர்த்தந்திரமும், குறிபார்த்து அம்பு எய்யும் தனித்திறமையும், நுணுக்கமாக திட்டமிடும் நுண் அறிவும் பல போர்களில் இஸ்லாமியருக்குப் பெரும் வெற்றியை ஈட்டுத்தந்திருக்கிறது. அந்த வரிசையில் காதிஹிய்யா ஜலூலஸ் போர்களின் வெற்றியும் அடங்கும்.

வீரம், வேகம், விவேகம், துடிப்பு, ஆர்வம், துணிவு, தியாகம், திட்டமிடும் நுண்ணறிவு போன்ற அருங்குணங்களைக் கொண்டவர் ஸாத் (ரலி). இஸ்லாத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அந்த பெருமகனார் தனது 82 வது வயதில் மரணம் அடைந்தார்.

ஸாத் (ரலி) அவர்கள் மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிரீன்களில் இறுதியாக மரணம் எய்தியவர், நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்த நபித்தோழரும் ஆவார். அவரைப்போன்ற நபித்தோழர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி வாழும் நல்லறிவை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள் புரிவானாக, ஆமின். 
Tags:    

Similar News