ஆன்மிகம்

உயிரின் மகத்துவம்

Published On 2018-11-16 05:23 GMT   |   Update On 2018-11-16 05:23 GMT
உடலும் உயிருமாய் இருக்கும் போதே இறைவனிடம் சரண் அடைய கற்றுக்கொள்வோம், இறையருளால் சாகா வரம் பெற்ற நல்லோர்களுடன் நாமும் இணைவோம்.
உயிர் நம் உடலில் எங்கே இருக்கிறது? அது எப்படி தான் இருக்கும்? என்பதை அறிய நாமெல்லாம் மிக ஆவல் கொண்டவர்களாகவே இருக்கின்றோம்.

உயிரைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் உயிர் இப்படித் தான் இருக்கும் என்று விஞ்ஞானத்தால் கூற இயலவில்லை.

கண்ணுக்கு தெரிகின்ற நம் உடலுக்கு கண்ணுக்கு தெரியாத உயிரே ஆதாரமாக நின்று செயல்படுகிறது.

‘உயிர் (ரூஹ்) என்றால் என்ன?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவிய போது அண்ணலாருக்கு இறைவசனம் இவ்வாறு அருளப்பட்டது.

‘நபியே, ரூஹை (உயிரைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (நீர் கூறும்) ரூஹ் (உயிர்) என்பது என்னுடைய இறைவனின் கட்டளையாகும். அதைப்பற்றிய அறிவுத்திறன் சிறிதளவே அன்றி, (மிகுதியாக) நீங்கள் வழங்கப்பட்டவர்களாக இல்லை (என்று)’. (திருக்குர்ஆன் 17:85)

உயிரைப் பற்றிய திருக்குர் ஆன் கூறும் ரகசியம் இது தான், ‘உயிர் என்பது இறைவனின் கட்டளை என்பதேயாகும், அதை உணர்ந்து கொள்ளும் ஞானம் பொதுவாக மனிதர் களுக்கு மிகக்குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அறிவை கொண்டு இறையருளால் யார் அதனை உணர்ந்து கொள்கிறார்களோ அவர்களே பாக்கியம் பெற்றவர் களாக ஆகிவிடுகிறார்கள்’.

அரசு இடும் ஒரு கட்டளை உடனே ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கிவிடுகின்றது. காசோலையில் ஒரு கையொப்பம் தான் அக்காசோலை மதிப்பு மிக்கதாக மாற்றுகின்றது.

கட்டளைகளைக் கொண்டுதான் உலகில் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அதைப்போல இறைவனின் கட்டளைதான் உடலோடு உயிரை பிணைத்து வைக்கிறது. அக்கட்டளை அவனால் வாபஸ் பெறப்படும் போது உடலை விட்டும் உயிர் விலகி, அது உடலை செயல் இழக்கச்செய்து விடுகிறது.

இறைகட்டளையால் உயிர் வருவதைப் போன்றே, அது விலகிச்செல்வதும் அவனது கட்டளையால் தான் நடைபெறுகிறது. இவ்வாறு இறைக்கட்டளையை கொண்டு உடலில் சில காலம் தங்கியிருக்கும் அம்சமே உயிர் என்பதாகும்.

உயிர், இறைவன் அவகாசம் கொடுக்கும் காலம் வரை அது உலகில் நம்மோடு தங்கி செய்கின்றது. அவனது கட்டளை வாபஸ் ஆகும் போது, அது மீண்டும் அவனிடமே சென்று அடைந்துவிடுகிறது என்பதை அருள் மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

‘அவன் (இறைவன் தான்) உயிரூட்டக் கூடியவன். இன்னும் அவனே மரிக்க செய்கின்றான். இன்னும் அவனிடமே நீங்கள் (மீண்டும்) மீட்டப்படுவீர்கள்’ (திருக்குர்ஆன் 10:56)

உயிர் என்ற அம்சம் இறைவனின் கட்டளையால் வாபஸ் ஆகும் போது உயிரினங்கள் பல்வேறு விதமாக மரணத்தை தொட்டுவிடுகின்றது.

எனவே உலகில் உயிருடன் வாழும் காலத்திலேயே உடலோடு ஒன்றி இருக்கும் உயிரையும் அதன் மகத்துவத்தையும் உணர்ந்து அதனை பரிசுத்த செயல்களால் மேன்மைப் படுத்தியவர்கள் வெற்றியடைந்து விடுகிறார்கள்.

இதை உணராது உடலின் சுகபோகங்களுக்கு இரையாகி, தனது உயிரின் உன்னத நிலையை மறந்தவர்கள், தோல்வியில் விழுந்து விடுகிறார்கள்.

நுட்பமான அறிவைக் கொண்டு கவனிக்கும் போது, என்றும் மாறாததும், மறையாததும், பிறவாததும், இறவாததும், ஆன தனித்துவம் பெற்றது இறையாற்றல். அந்த இறையாற்றல் இப்பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள எல்லாவற்றையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் படியாக செய்திருக்கின்றது. ஒன்றில் ஒன்று ஊடுருவி இருப்பதும், ஒன்று மற்றொன்றோடு பிணைக்கப்பட்டிருப்பதும் அவ்வாற்றலின் பேரருளாள் தான்.

உயிர் குறித்து நபிகளார் கூறும் அற்புதமான வார்த்தை இது: ‘என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக’ என்பார்கள்.

எல்லா உயிர்களின் பிடியும் இறைவன் கைவசம் உள்ளது என்பதைதான் இது நமக்கு உணர்த்துகின்றது.

உடலும் உயிருமாய் இருக்கும் போதே இறைவனிடம் சரண் அடைய கற்றுக்கொள்வோம், இறையருளால் சாகா வரம் பெற்ற நல்லோர்களுடன் நாமும் இணைவோம்.

-முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை.

Tags:    

Similar News