ஆன்மிகம்

இஸ்லாம் கூறும் வாக்குறுதியை நிறைவேற்றுதல்

Published On 2018-09-28 05:35 GMT   |   Update On 2018-09-28 05:35 GMT
தனக்களித்த வாக்குறுதிகளைப்பற்றி கேட்பவர்களை, தமது உடல் பலம், ஆள் பலம், பண பலம், படை பலம், செல்வாக்கு உள்ளிட்டவை களைக்கொண்டு மிரட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது.
இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்களின் முக்கியமானது வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்.

‘இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், அமானிதங்களையும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளையும் பேணுவார்கள்’ (திருக்குர்ஆன் 23:2).

மனிதர்களிடையே நிலவும் சண்டை சச்சரவுகளில் முதன்மை காரணமாக விளங்குவது வாக்குத்தவறுதல்.

ஒருவருக்கு அளிக்கப்படும் வாக் குறுதியில் வாக்கு அளிப்பவரின் கவுரவமும், வாக்கு அளிக்கப்படுப வரின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது.

வாக்கு தவறுதல் என்பது நம்பிக்கை மோசடி வகையைச் சார்ந்தாகும். ஒருவரிடம் ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக அந்த நேரத்தில் வாக்குறுதியை அளித்துவிட்டு, தனது வேலை முடிந்துவிட்டால், தான் அளித்த வாக்குறுதியை சவகாசமாக மறந்துவிடுகிறார்கள். அதைப்பற்றி கேட்கும்போது பிரச்சினை வெடிக்கிறது.

மனிதர்கள் மரணித்த பின்பு கேட்கப்படும் கேள்விகளில் வாக்குறுதி நிறைவேற்றாததும் அடங்கியிருக்கும்.

வாக்குறுதியும் ஒரு கடனே

கடன் வாங்கியவர் திருப்பித்தரவேண்டியது எந்த அளவு கடமையோ அதே போன்றுதான் பிறருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது, ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு அலா இப்னுஹள்ரமீ (ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அப்போது ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அங்கிருந்தவர்களைப் பார்த்து, ‘யாருக்காவது நபி (ஸல்) அவர்கள் கடன் பாக்கி தரவேண்டியிருந்தால், அல்லது யாருக்காவது வாக்கு ஏதும் தரப்பட்டு இருந்தால், அவர் நம்மிடம் வரட்டும். (அவரது உரிமையை நாம் நிறைவேற்றுவோம்) என்று கூறினார்கள்’. அறிவிப்பவர் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), (நூல்: புகாரி)

‘வாக்குறுதியை நிறைவேற்றாதது நம்பிக்கை மோசடியாகும். இவர்களை நயவஞ்சகர்கள்’ என இஸ்லாம் கூறுகிறது.

நயவஞ்சகர்களைப்பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது ‘பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், நம்பினால் மோசம் செய்வான்’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

போரில் கலந்துகொள்வதைவிட வாக்குறுதி முக்கியம் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து நபிகள் கூறியதாக ஹுதைபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். ‘நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கு எதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்” என்று (பேச்சை மாற்றிச்)சொன்னோம். அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக்கூடாது” என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக் குறுதி பெற்றுக்கொண்டனர்.

நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச்செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்” என்று சொன்னார்கள். (நூல்: முஸ்லிம்).

போரில் கலந்து கொள்ளாதவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு தோழர் கொடுத்த வாக்குறுதியின் காரணமாக அவரை போருக்கு வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள் என்றால், வாக்குறுதியின் முக்கியத்தை நாம் உணர வேண்டும்.

தொழிலாளிகளிடம் வேலைவாங்குவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும் முதலாளிகள் முதல், அரசியல்வாதிகள் வரை பலரும் வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

தனக்களித்த வாக்குறுதிகளைப்பற்றி கேட்பவர்களை, தமது உடல் பலம், ஆள் பலம், பண பலம், படை பலம், செல்வாக்கு உள்ளிட்டவை களைக்கொண்டு மிரட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

நிறுவனங்களில் பங்குதாரராக சேர்த்து, பின் அவர்களுக்கே தெரியாமல் பங்குதாரர்களை ஏமாற்றும் நம்பிக்கை துரோகங்களும் நடக்கத்தான் செய்கின்றன. வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புபவர்கள் தவறான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். இவர்களின் தவறான வாக்குறுதிகள் பலரின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுவதுடன், குடும்பமே சிரமத்தில் ஆழ்ந்துவிடுகிறது. ஒரு குடும்ப நாசத்திற்கு காரணம் தவறான வாக்குறுதிதான் என்பதை சிந்திக்க மறந்துவிடுகின்றனர்.

பணம் சம்பாதிப்பது மட்டும்தான் வாழ்க்கை என்று பலரும் எண்ணுகின்றனர். நமக்கு என்ன விதிக்கப்பட்டு இருக்கிறதோ அதுதான் கிடைக்கும்.

இறைவனை நம்புகிறவர்கள், தமது வாக்குறுதியை நிறைவேற்றுவது மிகவும் அவசியம்.

மதம் கடந்து மனித நேயம் வளர ‘வாக்குறுதி நிறைவேற்றுதல்’ முக்கிய பங்காற்றுகிறது.

வி.களத்தூர் கமால் பாஷா.
Tags:    

Similar News