ஆன்மிகம்

ஏன் அவசரம்..? என்ன அவசரம்..?

Published On 2018-09-07 04:32 GMT   |   Update On 2018-09-07 04:32 GMT
ஒருசிலருக்கு எல்லாவற்றிலும் அவசரம். ஒருவரைத் திருத்துவதிலும் அவசரம். ஒரே உபதேசத்தின் மூலம் தவறு செய்பவர் திருந்திவிட வேண்டும், மனிதப் புனிதராக மாறிவிடவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.
ஒருசிலருக்கு எப்போதும் அவசரம். எல்லாவற்றிலும் அவசரம். பொருள் சம்பாதிப்பதில் அவசரம். வாழ்வாதாரங்களையும் வசதி வாய்ப்புகளையும் உருவாக்குவதில் அவசரம். பதவிகளைப் பெறுவதில் அவசரம். வணக்க வழிபாடுகளிலும்கூட அவசரம்.

அவ்வளவு ஏன் இறைவனிடம் வேண்டும் பிரார்த்தனையிலும் அவசரப்படுகின்றான் மனிதன். ஆம், கேட்டவை அனைத்தும் உடனே கிடைத்துவிட வேண்டும், அனைத்தையும் உடனே இறைவன் அங்கீகரித்துவிட வேண்டும் என்று அவசரப்படுகின்றான் மனிதன்.

“மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்” (17:11) என்ற திருக்குர் ஆனின் கூற்று எவ்வளவு உண்மை என்பதைச் சிலருடைய செயல்களில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

ஒரு சிலர் தொழுகையைக்கூட அவசர அவசரமாகத் தொழுகின்றனர். ஏன் இந்த அவசரம்? உணவுத் துகள்களைக் கோழி கொத்துவதைப் போன்று அவசர அவசரமாக குனிந்து நிமிர்ந்துவிட்டு பள்ளிவாசலை விட்டு ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவிடுகின்றனர். யாரைத் திருப்திப்படுத்த இந்தத் தொழுகை?, யாரை ஏமாற்ற இந்தத் தொழுகை?

‘நிதானமே பிரதானம்’ என்பது பொதுவிதி. அவசரம் சைத்தானுடைய பண்பு. எதில் அவசரப்பட வேண்டும், எதில் அவசரப்படக்கூடாது என்று யோசித்து செயல்படுவதே புத்திசாலித்தனம். நல்ல விஷயங்களில் அவசரப்படுவதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. அதேநேரம் தீய விஷயங்களில் அவசரப்படுவதை இஸ்லாம் கண்டிக்கிறது.

மனிதனோ தலைகீழாக இருக்கின்றான். நல்லவற்றில் நத்தை போன்று மெதுவாகவும், அல்லாதவற்றில் எலியைப் போன்று அவசரமாகவும் செயல்படுகின்றான்.

‘படிமுறை விதி’ என்பது பிரபஞ்சத்தின் மாறாத நியதிகளில் ஒன்றாகும். கருவில் மனிதனின் உருவாக்கம் ஒரே இரவில் நடப்பதில்லை. பத்து மாதம் என்ற படிமுறையில் தான் அமைந்துள்ளது. இந்த உலகத்தையும் இறைவன் படிமுறை அமைப்பிலேயே படைத்துள்ளான். வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்துள்ளதாக இறைவன் குறிப்பிடுகின்றான்.

‘ஆகுக’ என்ற ஒற்றைச்சொல் மூலம் அனைத்தையும் படைக்க சக்தி பெற்ற ஆண்டவன் எதற்கு ஆறு நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்? அவசரமின்மையே காரணம்.

இஸ்லாமியச் சட்ட விதிகளான; ஹலால் (அனுமதிக்கப்பட்டவை), ஹராம் (தடை செய்யப்பட்டவை), வணக்க வழிபாடுகள் அனைத்தும் படிமுறை அமைப்பிலேயே சட்ட முறைமையாக்கப்பட்டன எனும் உண்மையை திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

உதாரணமாக, நோன்பு குறித்து பேசிய ஆரம்ப வசனம் இப்படிக் கூறுகிறது: “நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது ‘பித்யா’ (பரி காரம்) கடமையாகின்றது. அது (ஒரு நோன்புக்குரிய பரிகாரம்) ஓர் ஏழைக்கு உணவளிப்பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிக நன்மை செய்தால், அது அவருக்கே சிறந்ததாகும்” (2:184)

இதற்குப்பின்னரே நோன்பு கடமையாக்கப்பட்டுவிட்டது எனும் பின்வரும் வசனம் இறங்கியது: “எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்”. (2:185)

கடமைகள் இவ்வாறு படிமுறை ஒழுங்கில் விதிக்கப்பட்டதுபோன்று, தடை செய்யப்பட்டவையும் படிமுறை ஒழுங்கிலேயே விதிக்கப்பட்டன. மதுபானத் தடைச்சட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும். மதுபானத்தைத் தடை செய்யும் வசனங்கள் குர்ஆனில் மூன்று கட்டங்களாக இறங்கியுள்ளன. மூன்றாம் கட்டமாக இறங்கிய பின்வரும் வசனமே ‘மதுவை நெருங்க வேண்டாம்’ என்று அறிவித்தது.

“மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே சைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?” (திருக்குர்ஆன் 5:91)

இறைவனின் இந்த வேண்டுகோளுக்கு இறைநம்பிக்கையாளர்களின் பதில் இவ்வாறு இருந்தது: “இறைவா! நாங்கள் தவிர்ந்துகொண்டோம். இறைவா! நாங்கள் தவிர்ந்துகொண்டோம்”.

இந்த இறைவசனம் இறங்கிய பின்னர் இறைநம்பிக்கையாளர் நடந்துகொண்ட விதம் உண்மையில் ஆச்சரியமானது. கையில் மதுக் கோப்பையுடன் இருக்கும் ஒருவர், பாதி அருந்திய நிலையில் இந்த வசனத்தைச் செவியுறுகின்றார், உடனடியாக அவருடைய கையில் இருக்கும் அந்தக் கோப்பையை மண்ணில் கொட்டிவிடுகின்றார். வீட்டில் இருக்கும் மதுக் கோப்பைகளை வீதிக்குக் கொண்டுவந்து கொட்டிவிடுகின்றனர்.

ஒருசிலருக்கு எல்லாவற்றிலும் அவசரம். ஒருவரைத் திருத்துவதிலும் அவசரம். ஒரே உபதேசத்தின் மூலம் தவறு செய்பவர் திருந்திவிட வேண்டும், மனிதப் புனிதராக மாறிவிடவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.

மனிதர்கள் அவசரப்படு வதைப் போன்று ஆண்ட வனும் அவசரப்பட்டால் விளைவு என்னவாகும்? தவறு செய்பவர் களுக்கு உலகிலேயே உடனடித் தண்டனை எனும் செயல்திட்டத்தை இறைவன் செயல் படுத்தியிருந்தால் ஒருவருமே மிஞ்சமாட்டார்கள். ஆயினும் ஆண்டவன் விட்டுப்பிடிக்கின்றான். இதுவும் அவனது கருணையே.

இது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

“மனிதர்கள் (உலகின்) நன்மைகளைக் கோருவதில் எந்த அளவு அவசரப்படுகின்றார்களோ, அந்த அளவு மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதில் அல்லாஹ்வும் அவசரங்காட்டினால், அவர்களின் செயல்பாட்டிற்கான அவகாசம் என்றைக்கோ முடிக்கப்பட்டு விட்டிருக்கும். (ஆனால் இது நமது நியதி அல்ல)” (திருக்குர்ஆன் 10:11)

உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் பெரும் அரசியல் குழப்பங்கள், ஊழல் மோசடிகள், பிரச்சினைகள் நிறைந்த சூழலிலேயே கலீபா பதவியை ஏற்றார்கள். எனினும் அப்பிரச்சினைகளையும் மோசடிகளையும் உடனடியாக முற்றுமுழுதாக மாற்றும் முயற்சியில் அல்லது தடுக்கும் செயல்பாட்டில் அவர் இறங்கவில்லை. படிப்படியாகவே அவற்றை ஒழித்தார்கள்.

ஒருமுறை உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களிடம் அவருடைய மகன் கேட்டார்: “தந்தையே எதற்காக நீங்கள் தயங்குகின்றீர்கள்? பிரச்சினைகளை உடனடியாக முடிக்க வேண்டியதுதானே. உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் என்ன தயக்கம்?”.

தந்தை கூறினார்: “அருமை மகனே! நீ அவசரப்படுகின்றாய். மதுபானத்தை அல்லாஹ் இருமுறை இழிவுபடுத்தினான். பின்னர் மூன்றாம் முறையே அதனைத் தடை செய்தான். ஒரு விஷயம் உண்மையாகவே இருந்தாலும் மக்களின் மீது திணிப்பதை நான் பயப்படுகின்றேன். அவ்வாறு திணித்தால் மக்கள் ஒரேயடியாக மறுத்துவிடலாம் என்று நான் அஞ்சுகிறேன்”.

உண்மைதான்... அவசரம் அவசரமாக அடுத்தவர் மீது அனைத்தையும் நாம் திணிக்கின்றோம். திணிப்பு தீர்வாகாது என்பதை மறந்துவிடுகின்றோம்.

-மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
Tags:    

Similar News