ஆன்மிகம்

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்

Published On 2018-09-04 04:50 GMT   |   Update On 2018-09-04 04:50 GMT
எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதர்கள் காலக்கணக்கை அறிந்து கொள்வதற்காக மாதங்களைப் பற்றிய விவரங்களை திருக்குர்ஆனில் விவரித்து சொல்லப்பட்டுள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதர்கள் காலக்கணக்கை அறிந்து கொள்வதற்காக மாதங்களைப் பற்றிய விவரங்களை திருக்குர்ஆனில் விவரித்து சொல்லப்பட்டுள்ளது.

மாதங்களின் எண்ணிக்கையைப் பனிரெண்டாகச் சொன்னான், அதன் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தைச் சொல்கின்றான். அந்த முஹர்ரம் மாதம், அல்லாஹ்விடத்தில் சிறப்புள்ள மாதங்கள் நான்கில் ஒன்றென சொல்கின்றான்.

‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பனிரெண்டு தான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புற்றவை’. (திருக்குர்ஆன் 9:36)

அல்லாஹ் காலக்கணக்கை வானங்கள், பூமி படைக்கப்பட்ட நாளிலேயே நிர்ணயம் செய்ததாக சொல்கின்றான். சூரிய சந்திர ஓடு பாதைகளையும் இரவு, பகல் மாறி மாறி வருவதைக் கொண்டு அதனை நிர்ணயம் செய்து அப்போதே பதிவு செய்துள்ளான் என்று அருள்மறை சொல்வது அறிவியலின் முன்னோடியாகத் தன்னை நிரூபித்துள்ளது. சிறப்புற்ற மாதங்கள் நான்கு என்று சொன்னவன், அம்மாதங்களில் போர் செய்வதையும் தடை செய்துள்ளான்.

‘போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள, ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ஆகிய சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும்’ (2:194)

சிறப்புற்ற இந்த நான்கு மாதங்களிலும் சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதையும் பற்றி பரவலாக பல இடங்களில் வான்மறையில் குறிப்பிடுகின்றான். அதிலும் குறிப்பாக முஹர்ரம் மாதத்தில் நபிமார்கள் வாழ்வில் நிகழ்ந்த பல வரலாற்று சரிதைகளை அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கின்றான்.

இறைவனால் தடுக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டதால் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம்-ஹவ்வா ஆகியோர் தங்கள் செயலுக்கு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். அல்லாஹ், அவர்களை மன்னித்து தூய்மைப்படுத்தியது இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாக அமைந்துள்ளது.

‘பின்னர் ஆதம் சில வாக்கியங்களை தன் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார். அவ்வாக்கியங்களை கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார். அதனால் அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன் ஆவான்’ (திருக்குர்ஆன் 2 :37)

அடுத்து சொல்லும் போது, நூஹ் நபிகளின் கூட்டத்தாரைப் பற்றி விவரித்து கூறுகிறான் அல்லாஹ். கிட்டத்தட்ட 990 ஆண்டுகள் ‘அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரிய இறைவன்’ என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தும், அந்த மக்களில் சிலரைத் தவிர பெரும் பான்மையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, நூஹ் நபிகள் அல்லாஹ்விடம், ‘இறைவா, நீண்ட நெடுங்காலம் இந்த மக்களிடம் உன் ஏகத்துவத்தை எடுத்தியம்பி விட்டேன். ஆனால் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். உனக்கு மாறு செய்கிறார்கள். எனவே இந்த மக்களை நீ அழித்துவிடு’ என்று கேட்டுக்கொண்டார்கள்.

அல்லாஹ்வும் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் சொன்னான். ‘நீங்கள் என் கட்டளைப்படி ஒரு கப்பலைச் செய்து, அதில் எல்லா உயிரினங்களிலும் ஒரு ஜோடியை ஏற்றிக்கொள்ளுங்கள். என் கட்டளைப்படி வான்மழை பொழிந்து இந்த உலகத்தை அழித்துவிடும், என்றான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘பின்னர் பூமியை! நீ உன் தண்ணீரை விழுங்கிவிடு. வானமே மழை பொழிவதை நிறுத்திக்கொள் என்று கட்டளை பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றிவிட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய காரியம் முடிந்துவிட்டது. அக்கப்பலும் ஜூதி என்ற மலையில் தங்கியது’. (திருக்குர்ஆன் 11.44)

இந்த சிறப்பான திருப்பம் நிகழ்ந்த நாளும் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது இரவில் தான்.

பிரவுன் என்ற கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மூஸா நபிகள் போராடினார்கள். ‘நான் தான் கடவுள்’ என்று இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்தான், பிரவுன். பெரும் போராட்டத்திற்குப்பின் மூஸா நபிகள் இஸ்ரவேலர்களை காப்பாற்றி அழைத்துச் சென்றார்கள். பிரவுன் படையும் அவர்களைப்பின் தொடர்ந்து விரட்டியது.

இடையே கடல் குறுக்கிடவே அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா நபியும், இஸ்ரவேலர்களும் கடலில் இறங்கினார்கள். கடலும் பிளந்து அவர்களுக்கு வழி அமைத்து கொடுத்தது. பின்தொடர்ந்து வந்த பிரவுனும் அவனது படையும் கடலில் இறங்கின. மூஸா நபியின் கூட்டம் கரையேறியதும், பிரவுனும் அவன் படையும் அல்லாஹ்வின் கட்டளைப்படி கடலில் மூழ்கி அழிந்து போயினர்.

மூஸா நபியையும், இஸ்ரவேலர்களையும் கடலைப் பிளந்து காப்பாற்றிய அந்த நிகழ்வும் முஹர்ரம் மாதம் 10-ம் இரவில் நடந்ததாக குறிப்புகள் உள்ளன.

ஒருமுறை நபிகள் நாயகம் மதினத்து நகரத்து வீதியில் உலா வரும்போது, யூதர்கள் அனைவரும் அன்று நோன்பு இருப்பதை அறிந்தார்கள். ஏன் எல்லோரும் நோன்பு இருக்கிறீர்கள் என்று வினவிய போது, ‘மூஸா நபியவர்களும் எங்களது முன்னோர்களும் அல்லாஹ்வால் கடலை பிளந்து காப்பாற்றப்பட்ட முஹர்ரம் 10-ம் நாளை அவர்கள் நினைவு கொண்டு நன்றி செலுத்துவதற்காக நாங்கள் நோன்பு இருக்கிறோம்’ என்றார்கள்.

உடனே பெருமானார் (ஸல்) அவர்கள், ‘உங்களை விட மூஸா நபியை உரிமை கொண்டாட முஸ்லிம்களுக் குத்தான் அதிக முன் னுரிமை உண்டு. எனவே இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) வரும் ஆண்டு நான் உயிரோடிருந்தால் உங்களை விட அதிகமான 2 நாட்கள் நோன்பு இருப்பேன்’ என்றார்கள்.

ஆனால் அடுத்த ஆண்டு அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அண்ணலார் சொன்னதை நினைவு கொண்டு எல்லா இஸ்லாமியரும் முஹர்ரம் மாதத்தில் இரு நாட்கள் நோன்பிருந்து வருகிறார்கள்.

ஐயூப் நபியவர்கள் இவ்வுலகத்திற்கு நபியாக அனுப்பப்பட்டிருந்தாலும் அவர்களும் சோதனையை சந்தித்தார்கள். தனது ே்நாயை தீர்க்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் நோயிலிருந்து முழு நிவாரணம் அளித்தான். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘நாம், உமது காலை பூமியில் தட்டுவீராக’, என்று கூறினோம். அவர் தட்டவே, ஓர் ஊற்று வழிந்தோடியது. அவரை நோக்கி ‘இதோ குளிப்பதற்கான குளிர்ந்த நீர். இதுவே உமது பானமும் ஆகும்’ என்று கூறினோம். அதனால் அவருடைய நோய்கள் குணமாகிவிட்டன. (திருக்குர்ஆன் 38:42)

ஐயூப் நபியின் நோய் நீங்கிய அந்த நல்ல நாளும் முஹர்ரம் 10-ம் நாள் தான்.

மீன் வயிற்றில் குடியிருந்த யூனூஸ் நபியவர்கள் மீண்டும் உலகில் வந்து அவதரித்த நாளும் முஹர்ரம் 10-ம் நாள் தான். இதுபோன்று இன்னும் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இந்த நாளில் நிகழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் உண்டு.

இத்தகைய மிகவும் சிறப்பு வாய்ந்த முஹர்ரம் மாதத்தின் 10-ம் நாட்களை நினைவு கொண்டு போற்றுவதற்கு நபிகள் சொல்லித் தந்த வழிமுறையை பின்பற்றுவோம். யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில், 9, 10 அல்லது 10,11 ஆகிய இரு தினங்கள் நோன்பு இருப்போம். அதனால் நமக்கு வரவிருக்கின்ற இடர்களிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம். 

மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
Tags:    

Similar News