ஆன்மிகம்

திருமண வரம் தரும் கேரளத்து திருமணஞ்சேரி

Published On 2019-04-05 10:20 GMT   |   Update On 2019-04-05 10:20 GMT
திருமணத் தடைக்கான தோஷங்களை நீக்கி, உடனடியாகத் திருமணத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநில உமா மகேசுவர சுவாமி ஆலயம் திகழ்கிறது.
திருமணத் தடைக்கான தோஷங்களை நீக்கி, உடனடியாகத் திருமணத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், கொல்லம் நகரில் அமைந்திருக்கும் உமா மகேசுவர சுவாமி ஆலயம் திகழ்கிறது.

இந்த கோவிலில் தினசரி வழிபாடாக, கணபதி வேள்வி, உமாமகேசுவர பூஜை, ஐஸ்வர்ய பூஜை நடைபெறுகிறது. அதோடு ஞாயிற்றுக்கிழமை - பாக்யசூக்திர பூஜை, திங்கட்கிழமை சுமங்கலி பூஜை, சுயம்வர பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை, செவ்வாய்க்கிழமை முருகன் மற்றும் மாடன் தம்புரான் ஆகியோருக்குச் சிறப்புப் பூஜை, புதன்கிழமை சரஸ்வதி பூஜை, வியாழக்கிழமை மாங்கல்ய பூஜை, சுயம்வர அர்ச்சனை, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ராகு கால பூஜை, சனிக்கிழமை நீராஞ்சனம் என்று ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இந்தக் கோவிலில் ஜாதக வழியாக சில தோஷங்களால் தடைபட்டிருக்கும் திருமணத் தடையை நீக்குவதற்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு சிறப்பு வழிபாடு செய்பவர்களுக்கு உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமண வாய்ப்பு அமையப்பெற்றவர்கள், தங்கள் திருமண அழைப்பிதழை கோவிலில் வைத்திருக்கும் சிறப்பு அறிவிப்புப் பலகையில் பார்வைக்காக வைத்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தை கேரளாவின் திருமணஞ்சேரி என்றும் அழைக்கிறார்கள்.

கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்கள் சேர்வதற்காக, ‘சம்வத சூக்த மந்திர புஷ்பாஞ்சலி’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

கேரள மாநிலம், கொல்லம் நகரில் இக்கோவில் அமைந்திருக்கும் பகுதி ‘உமாமகேசுவரம் சந்திப்பு’ என்றே அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
Tags:    

Similar News