ஆன்மிகம்

ராகு, கேது தோஷம் நீக்கும் திரும்பாம்புரம்

Published On 2019-03-12 09:24 GMT   |   Update On 2019-03-12 09:24 GMT
ராகு, கேது தோஷத்தை போக்கிக் கொள்வதற்கு திரும்பாம்புரத்தில் உள்ள பாம்புர ஈசுவரர் கோவில் சக்தி வாய்ந்தது என்கிறார்கள்.
ராகு, கேது தோஷத்தை போக்கிக் கொள்வதற்கு திரும்பாம்புரத்தில் உள்ள பாம்புர ஈசுவரர் கோவில் சக்தி வாய்ந்தது என்கிறார்கள். பாம்(பு)புரம் ஈசுவரன் கோவிலில் ராகு, கேது குடியிருக்கிறார்கள். இது நல்ல பரிகாரத்தலமாக விளங்குகிறது.

இக்கோவில் ‘தென் காளத்தி’ என அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் மீது சுந்தரர், சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோர் பாடல் பாடியுள்ளனர்.

இந்த ஆலயம் பற்றி இரு புராணக்கதைகள் உள்ளன. முதல் தல புராண கதை வருமாறு:-

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீசினார். ஆதிசேஷன் அதை தனது வலிமையால் காத்து நின்றார். இருவரும் சமபலம் காட்டி நின்றனர். திடீரென்று வாயு பகவான் உயிர் களுக்கு வழங்கும் பிராண வாயுவை நிறுத்தி விட உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் மற்றும் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார். வாயு பகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளை புரட்டி வீசினார்.

இதனால் கோபமுற்ற சிவபெருமான், வாயு பகவானையும், ஆதிசேஷனையும் பேயுருவாக போகும் படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றங்களை பொறுத்தருளும்படி வேண்டி நின்றனர். வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்து வரவும், ஆதி சேஷனை திருப் பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தம்மை பூஜை செய்து வரவ உத்தரவிட்டார். அதன்படி ஆதி சேஷன் திருப்பாம்புரம் வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

மற்றொரு தலபுராணம் வருமாறு:-

கயிலாயத்தில் ஒரு முறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னை வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த சிவன், நாக இனம் முழுவதும் தேவசக்தியை இழக்கும் படி செய்தார். அதனால் உலகைத்தாங்கும் ஆதி சேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தியை இழந்து துன்பப்பட்டன.

நாக இனங்கள் சாப விமோசனம் வேண்டி ஈசனை துதிக்க இறைவனும் மனம் இரங்கி பூவுலகில் சேஷபுரி என்ற திருப்பாம்புரத்தில் சிவராத்திரி அன்று தன்னை வழிபட்டால் சாப விமோசனம் அடையலாம் என அருளினார். அதன்படி ராகு, கேது மற்றும் ஆதிசேஷன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்க பாலன், குளிகன் பத்மன், மகாபத்மன் ஆகிய அஷ்டமாநாகங்கள் திருப்பாம்புரம் வந்தன. அங்கு ஆலமர விழுதை நாராக கொண்டு அத்திப்பூவை அதில் தொடுத்து பூஜை செய்து வந்தன.

மகா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன.
Tags:    

Similar News