ஆன்மிகம்

வேளாங்கண்ணியில் அன்னை மரியாவுக்கு முடிசூட்டு விழா

Published On 2019-06-01 02:52 GMT   |   Update On 2019-06-01 02:52 GMT
வேளாங்கண்ணியில் அன்னை மரியாவுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என அழைக்கப்படும் இந்த தலத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர். கிறிஸ்துவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமை இந்த தலத்திற்கு உண்டு.

மே மாதம் மாதாவின் வணக்க நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வணக்க நாள் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விண்ணக அரசியாக முடி சூட்டப்பட்டதை நினைவூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி மாதா கோவிலில் நடைபெற்றது.

விழா நாட்களில் மாதாவின் கருணையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு சிந்தனை நிகழ்ச்சியும், தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னை மரியாவுக்கு முடி சூட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

திருப்பலியின் முடிவில் மாதாவின் மணிமுடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தேருக்கு எழுந்தருளிய அன்னை மரியாவுக்கு முடி சூட்டப்பட்டது. பின்னர் தேர் பவனி நடைபெற்றது.

தேர் பவனி மாதாக்குளத்தில் இருந்து சிலுவை பாதை வழியாக சென்று கீழக்கோவிலை வந்தடைந்தது. விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் ஆண்டோ ஜேசுராஜ், டேவிட் தன்ராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News