ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தபோது எடுத்த படம்.

பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா தொடங்கியது

Published On 2019-05-07 03:31 GMT   |   Update On 2019-05-07 03:31 GMT
பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நேற்று தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பேராலய முகப்பில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. இதில் பக்தர்கள் பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியை எடுத்து சென்றனர். சிறிய பல்லக்கில் மாதாவின் சிறிய சொரூபம் வைக்கப்பட்டு கொடி ஊர்வலத்தின் பின்னால் பக்தர்கள் சுமந்து வந்தனர்.

கொடி ஊர்வலம் ஜெபமாலை பாடல்களுடன் கோவிலை சுற்றி வந்து கொடிமேடையை அடைந்தது. இதை தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி, கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார். பின்னர் மரியா-எளிய வாழ்வால் ஏற்றம் பெற்றவர் என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குதந்தையர்கள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மிக தந்தையர்கள் அருளானந்தம், இருதயம், அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சிறு சப்பர பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறும். 14-ந்தேதி தேர்பவனியும், 15-ந் தேதி சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News