ஆன்மிகம்

உபத்திரவங்கள் உங்களை மேற்கொள்ளாது

Published On 2019-02-22 04:23 GMT   |   Update On 2019-02-22 04:23 GMT
உங்களுக்குள் இருக்கும் எந்த பிரச்சினைக்காகவும் உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாமல், உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு ஆவியில் நிறைந்து கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்.
‘அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. எரே.1:19

பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்கு இச்செய்தியின் மூலம் பலத்த ஆசீர்வாதங்களை தருவார்.

ஒருவர் கப்பலில் பயணம் செய்ய பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்து பயணத்தைத் ெதாடங்கினார். ஒவ்வொரு உணவு உட்கொள்ள வேண்டிய வேளை வந்தபோது அனைத்துப் பயணிகளும் உணவு பரிமாறுகிற இடத்திற்கு சென்று தங்களுக்கு விருப்பமான உணவை உட்கொண்டார்கள்.

இந்த மனிதரோ காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவு அந்நாள் முழுவதும் ஒன்றும் உட்கொள்ளாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார்.

இவர் ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறதை அறிந்து கப்பல் பணியாளர் ‘ஏன் ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?’ என வினவியபோது, ‘பயணச்சீட்டிற்கு மட்டும் தான் கையில் பணம் இருந்ததே தவிர உணவிற்கு என்னிடம் பணம் இல்லாததினால் நான் ஒன்றும் சாப்பிடவில்லை’ என்றார்.

‘நீங்கள் கொடுத்த பணம் பயணச்சீட்டிற்கு மட்டுமல்ல உணவிற்கும் சேர்த்து தான்’ என விளக்கி கூறினார் அந்தப் பணியாளர். அதுவரை இந்த தகவல் அந்த மனிதருக்குத் தெரியாமலேயே கப்பலில் பயணம் செய்தார்.

கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது, ‘உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்’ (1 யோவான் 4:4), மட்டுமல்ல ‘ஆவியானவர் தமது சித்தத்தின்படியே வரங்களை பகிர்ந்து கொடுக்கிறார்’ என 1 கொரி. 12:11 கூறுகிறது.

கிறிஸ்தவ மார்க்கத்தில் இணைந்திருக்கிற ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் யுத்தங்கள் உண்டு, போராட்டங்கள் உண்டு, பிரச்சினைகள் உண்டு. ஆனால் அவைகள் ஒருபோதும் உங்களை பாதிக்காது.

ஏனெனில், எப்போது ஆண்டவராகிய இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களோ, அப்போதே பிசாசின் சகல வல்லமைகளை மேற்கொள்ளுகிற அதிகாரத்தை கர்த்தர் உங்களுக்குக் கொடுத்துவிட்டார்.

அதே நேரத்தில் சாத்தானை மேற்கொள்ளவும், முறியடிக்கவும் வேதம் நமக்கு சொல்லுகிற வல்லமையான ஆலோசனைகளை நீங்கள் கவனித்துப் பாருங்கள்.

கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்

‘மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள், அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்’. (யாத்.17:11)

பொதுவாக ஜெபம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் வேதாகமத்திலுள்ள தேவனுடைய மனிதர்கள் ஒவ்வொரு விதமான போராட்டங்களின் மத்தியிலும் எப்படி ஜெபம் பண்ணி சத்துருவை ஜெயித்தார்கள் என்று நாம் கவனிக்க வேண்டும்.

அன்றைக்கு 430 ஆண்டுகள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவர் விடுவித்து, மோசேயின் மூலமாக வனாந்தர வழியாக வழிநடத்திக் கொண்டு வரும்போது, ரெவிதீம் என்ற இடத்தில் இஸ்ரவேலரோடு அமலேக்கியர் யுத்தம் பண்ணினார்கள்.

அந்த யுத்தத்திற்கு மோசே, யோசுவாவையும் மற்ற மனிதரையும் அனுப்பிவிட்டு மலை உச்சியிலே ஏறி தன் இரண்டு கைகளையும் வானத்திற்கு நேரே ஏறெடுத்தான் என வாசிக்கிறோம்.

மோசேயின் கரம் உயர்த்தப்படும்போது யோசுவா ஜெயமெடுத்தான். அதே வேளையில் மோசேயின் கரம் தாழ விழுகையில் அமலேக்கியர் ஜெயமெடுத்தார்கள். அந்நாட்களில் மோசே வயது முதிர்ந்த நிலையில் இருந்ததால், ஆரோனும், ஊரும் நிரந்தரமாய் மோசேயின் கையை உயர்த்திப் பிடித்தார்கள். அப்போது அமலேக்கியர் முற்றிலும் சங்கரிக்கப்பட்டார்கள்.

தற்போது நீங்கள் சந்தித்து வருகிற பிரச்சினை என்ன? ஒருவேளை அது நீண்டகால போராட்டமாக இருக்கலாம் அல்லது வியாதி, வறுமையாக இருக்கலாம்.

எதுவானாலும் சரி இவைகள் உங்களை மேற்கொள்ள முடியாது. நீங்கள் கர்த்தருடைய சமூகத்தில் முழங்கால்படியிட்டு உங்கள் கைகளை உயர்த்தி ஆவியில் நிறைந்து ஜெபித்துப் பாருங்கள்.

‘பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலும் ஜெபம் பண்ணுங்கள்’. (1 தீமோ.2:8)

‘இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருக்கிறது’. (சங்.77:2)

‘உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறேடு’. (புலம்.2:19)

மேற்கண்ட வசனங்கள் எல்லாம் நாம் கைகளை உயர்த்தி ஜெபம் பண்ணி போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்துகிறது.

ஆகவே, உங்களுக்குள் இருக்கும் எந்த பிரச்சினைக்காகவும் உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாமல், உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு ஆவியில் நிறைந்து கைகளை உயர்த்தி ஜெபியுங்கள். எந்த போராட்டங்களும் உங்களை மேற்கொள்ளாது. உங்களை இரட்சிக்கும்படி கர்த்தர் உங்களோடு கூட இருப்பார். அல்லேலூயா.

சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
Tags:    

Similar News