ஆன்மிகம்

இணைச்சட்டம்

Published On 2019-02-07 04:55 GMT   |   Update On 2019-02-07 04:55 GMT
சட்டங்களின் நாயகன் மோசேயும், இறைவாக்குகளின் நாயகன் ஏசாயாவும், இறைவனின் மகனாகிய இயேசுவோடு கலந்துரையாடிய பிரமிப்பு நிகழ்வு அது.
இந்த நூலின் ஒரிஜினல் எரேபியப் பெயர் ‘எல்லே ஹாடேபாரிம்’ என்பதாகும். ‘இவை தான் அந்த வார்த்தைகள்’ என்பது அதன் பொருள்.

இதை கிரேக்கத்தில் மொழிபெயர்த்த எழுபதின்மர் இதற்கு ‘டியூட்ரோனோமி’ என பெயர் கொடுத்தனர். அதற்கு ‘மீண்டும் கொடுக்கப்படும் சட்டங்கள்’ என்பது பொருள்.

கடவுள், மோசே வழியாக ‘விடுதலைப் பயணம்’ நூலில் கொடுத்த சட்டங்களை இந்த நூலில் மீண்டும் ஒரு முறை மோசே மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நூலை மோசே எழுதியிருக்கிறார். ஆனால் முழுவதும் மோசே எழுதியிருக்க வாய்ப்பில்லை. காரணம் அவருடைய மரணம் சார்ந்த விஷயங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் கடவுளின் சட்டங்களும், பத்து கட்டளைகளும் இரண்டாம் முறை வருவதற்கு ஒரு காரணம் உண்டு.

தொடக்கத்தில் கடவுள், மோசே வழியாக சட்டங்களைக் கொடுக்கிறார். ஆனால் வாக்களிக்கப்பட்ட நாடான கானானுக்குள் இஸ்ரயேல் மக்கள் அச்சத்தினால் நுழையவில்லை. இதனால் கடவுள் இஸ்ரயேல் மக்களை சபித்தார். ‘இந்தத் தலைமுறையிலுள்ள யாருமே அந்த நாட்டுக்குள் நுழையமாட்டீர்கள்’ என்றார். அது நடந்து இப்போது ஒரு தலைமுறை கடந்து விட்டது.

இதோ கானானுக்குள் நுழையும் காலம் நெருங்கிவிட்டது. பழைய தலை முறையில் உள்ளவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். எஞ்சியிருப்போரும் இறக்கும் காலம் நெருங்கிவிட்டது.

மோசே இறக்கப் போகிறார். தலைமைப் பொறுப்பு யோசுவாவுக்கு அளிக்கப்படப் போகிறது. இப்போது இருப்பது புதிய தலைமுறை.

புதிய தலைமுறை நேரடியாக கடவுளின் கட்டளைகளை மோசேயிடம் இருந்து கேட்டதில்லை. இந்தத் தலைமுறைக்கு தன் வாயால் அனைத்து கட்டளைகளையும் ஒரு முறை முழுமையாய் சொல்லி விடுவது உசிதம் என யோசிக்கிறார் மோசே.

மோவாப் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் வந்து விட்டனர். கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது வாக்களிக்கப்பட்ட நாடு. விடுதலை நாயகன் மோசே, விடை பெறும் கணம் இது.

அவர் நாற்பது நாட்கள் அங்கே அமர்ந்து அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை கடவுளின் இயல்பை விளக்குகிறார். கடவுள் கொடுத்த கட்டளைகளை விளக்குகிறார். கானான் நாட்டிற்குள் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.

தொடக்க நூலில் மனிதன் படைக்கப்படுகிறான், இறைவனுக்குப் பிரியமான ஒரு இனத்தைக் கடவுள் பிரித்தெடுக்கிறார். விடுதலைப்பயணத்தில் எகிப்தில் அடிமையாயிருக்கும் தனது மக்களை விடுவிக்கிறார்.

லேவியர் நூலில் மக்களின் புனிதமும் அவர்கள் கடவுளோடு கொண்டிருக்க வேண்டிய உறவும் விளக்கப்படுகிறது. எண்ணிக்கை நூல் மக்களின் பாலைநில வாழ்க்கையைப் பேசுகிறது.

இப்போது இணைச்சட்டம் எல்லா சட்டங்களையும் வாழ்க்கை முறைகளையும் மீண்டும் ஒரு முறை மக்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறது. இந்த ஐந்து நூல்களையுமே மோசே எழுதுகிறார்.

பாலை நிலத்தில் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த மக்கள் இனிமேல் தான் நிலப்பரப்பில் நிம்மதியாக வாழப் போகின்றனர். அங்கே எப்படி வாழவேண்டும், எப்படி இறைவனைப் பற்றிக் கொள்ளவேண்டும், எப்படி பிற மதங்களினால் தூய்மை இழந்துவிடக் கூடாது என்பதெல்லாம் இந்த போதனைகளில் வலியுறுத்தப்படுகின்றன.

“ஆகையால் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள்” என மோசே திரும்பத் திரும்ப இந்த நூலில் கூறுவதை, இயேசுவும் தனது போதனைகளின் முதன்மையாகக் கொண்டிருந்தார். “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து” என இயேசு போதித்தார்.

நாற்பது ஆண்டுகள் பாலை நிலத்தில் உணவும், நீரும், பாதுகாப்பும் வழங்கிய இறைவனை நம்பி இனிவரும் வாழ்க்கையையும் நடத்தவேண்டும். பிற தெய்வங்களை நாடுவதோ, மற்ற இனத்தோடு கலந்து தங்களை கறைபடுத்திக் கொள்வதோ கூடாது, எதிர்ப்பவர்களை கடவுள் அழிப்பார் போன்ற சிந்தனைகள் மோசேயின் உரையின் மையமாக இருந்தன.

போதனைகளை எல்லாம் முடித்தபின் தனது நூற்று இருபதாவது வயதில் மோசே பிஸ்கா மலையில் ஏறினார். வலிமையும், கூர்மையும், தெளிவும் உடைய மனிதராக மலையேறினார். அங்கிருந்து வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டைப் பார்த்தார். அதற்குள் போகமுடியவில்லையே எனும் ஏக்கம் அவரிடம் இருந்தது.

இறைவன் அவரை எடுத்துக்கொண்டார். அவரது உடலை இறைவன் அடக்கம் செய்கிறார். அதனால் அவருடைய உடலைக் கூட யாரும் அதன் பின் கண்டுபிடிக்க முடியவில்லை.

பல நூற்றாண்டுகளுக்குப் பின் இயேசுவின் காலத்தில் கானான் நாட்டு எர்மோன் மலையின்மேல் மோசேயும், எலியாவும் இயேசுவின் முன்னால் தோன்றினர். இயேசுவின் சீடர்கள் மூன்று பேர் அவர்களோடு இருந்தனர்.

இயேசு உருமாறிய நிகழ்வாக அது விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டங்களின் நாயகன் மோசேயும், இறைவாக்குகளின் நாயகன் ஏசாயாவும், இறைவனின் மகனாகிய இயேசுவோடு கலந்துரையாடிய பிரமிப்பு நிகழ்வு அது.

வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் விடுதலை வீரர் மோசே நுழைந்த முதல் நிகழ்வாகவும் அது அமைந்தது.

சேவியர்
Tags:    

Similar News