ஆன்மிகம்

உன் நம்பிக்கை உன்னை குணமாக்கும்

Published On 2019-01-07 03:25 GMT   |   Update On 2019-01-07 03:25 GMT
நம் ஆண்டவர் இயேசுவால் உங்களை எப்பெரிய நோயினின்றும் நலம்பெறச்செய்ய முடியுமென்று விசுவாசியுங்கள். நிச்சயமாகவே நலம் பெறுவீர்கள்.
இறைமைந்தன் இயேசு கிறிஸ்து தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கு விடுதலை அளித்து வந்தார். இத்தகைய வல்லசெயல்கள் மூலமாகவும் அநேக மக்கள் கடவுள் மீதும், தன் வார்த்தைகளிலும் நம்பிக்கைக் கொள்ளச் செய்தார்.

குணமாக்கப்படுதலை குறிக்கின்ற ஆண்டவர் இயேசுவின் அற்புதங்களில் ஒன்று ‘ரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுகின்ற நிகழ்வு’ ஆகும்.

இயேசுவின் வல்லமை

மரணத்திலிருந்து மீட்கும் இயேசுவின் இரு வல்ல செயல்கள் தொடர்ச்சியாக தூய மாற்கு நற்செய்தி நூலில் (5:21-43) காணலாம். இந்த இரண்டு வல்லசெயல்களும் தொட்டு குணமாக்கப்படுதலைக் குறிக்கின்றது.

இங்கு ஒரு பெண்ணின் நம்பிக்கை ‘ஆண்டவரைத் தொட்டால் நலம் கிடைக்கும்’. மற்றொரு ஆணின் நம்பிக்கை ‘ஆண்டவர் தொட்டால் நலம் கிடைக்கும்’. இந்த இரு நிகழ்வுகளும் நம் குறைவிசுவாசத்தை நிறைவாக்குகிறது.

ஆண்டவர் இயேசு தம் சீடர்களுடன் சென்று கொண்டிருக்கின்ற பொழுது அவர் போதனை களைக் கேட்பதற்காக, பெருந்திரளான மக்கள் இயேசுவை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தபடி சென்றனர். அத்திரள் கூட்டத்தில் பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண்ணும் இருந்தார்.

தனக்கிருந்த செல்வங்களையெல்லாம் செலவழித்துப் பார்த்தும், எந்த மருத்துவராலும் நலம் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். இயேசு ஆண்டவரைக் குறித்துக் கேள்விப்பட்டு, “அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்”; என்று எண்ணி, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையைத் தொட்டார். தொட்டதும், அவருடைய ரத்தப்போக்கும் நின்றது. தாம் நலமானதை அப்பெண் உணர்ந்தார்.

உடனே இயேசு வல்லமை வெளியேறியதை உணர்ந்து, மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.

அதற்கு அவருடைய சீடர்கள், “இம்மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும் என்னைத் தொட்டவர் யார்? என்கிறீரே” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்ட வரைச் சுற்றிலும் தேடினார்.

அப்போது அப்பெண் அஞ்சி நடுங்கியபடி, ஆண்டவர் இயேசுவின் முன் வந்து விழுந்து, நிகழ்ந்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார்.

அவர் அப்பெண்ணிடம் “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.

பழங்கால முறை

இடைவிடாத ரத்தப்போக்கு நோயை இது குறிக்கிறது. இது கடவுளின் சாபம் என்றும், இதைக் குணப்படுத்துதல் என்பது மனித தன்மைக்கு அப்பாற்பட்டது என்றும் யூதர்கள் கருதினர். லேவியர் நூலில் (15:19-33) ரத்தப்போக்குக் குறித்த சட்டங்களைக் காணலாம். ரத்தப்போக்கு ஏற்படுகிற பெண் தீட்டானவள். அவளைத் தொடுகிறவள் தீட்டானவன். அவள் படுக்கைத் தீட்டு. அவள் படுக்கையைத் தொடுகிறவன் தீட்டானவன். அவள் உட்காருமிடம் தீட்டு. அவள் வாழும் வீடு தீட்டு. இது பாவ நிவிர்த்தி செய்யப்படவேண்டியப் பாவமாகும்.

‘ஆடையின் ஓரத்தைத் தொடுதல்’ என்பது பழங்கால குணப்படுத்தல் முறைகளில் ஒன்றாகும். பொதுவாக, வல்லமைப் பெறுவோருக்கே அதன் உணர்வு தெரியும். ஆனால் இங்கு வல்லமை தன்னிடமிருந்து சென்றதை ஆண்டவர் உணர்கிறார். இப்பெண்மணிக்கு நலம் அளித்ததோடு, அவர் இப்பெண்ணின் மாபெரும் நம்பிக்கையைக் கண்டு வியப்படைகின்றார்.

‘குணமாக்கிற்று’ என்று ஆண்டவர் கூறிய வார்த்தையின் கிரேக்க மூல வார்த்தை “செஸோகன்” என்பதாகும். இது ‘நலம் பெறுதல், மீட்பு பெறுதல்’ என்ற இரு பொருள்களைத் தருகிறது. அப்படியானால், ஆண்டவர் இப்பெண்ணுக்கு உடலளவிலும், மனதளவிலும் விடுதலை அளித்ததாகக் கூறுகிறார்.

உண்மையான இறைநம்பிக்கை இருந்தால், எப்பெரிய நோயுற்ற மனிதனாலும் நலம் பெற முடியும் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. இப்பெண்ணுக்கு ஆண்டவர் இயேசுவைக் குறித்த அனுபவம் சார்ந்த அறிவு குறைவு. ஆனால் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையோ மிகவும் பெரிது.

உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கும்

பன்னிரு வருடங்களாக நோயினால் தன் செல்வங்கள் அனைத்தையும் தொலைத்தவர். பிறரால் தீட்டானவராக கருதப்பட்டு, வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட நிலையில் மிகவும் வருத்தத்தோடே வாழ்ந்து வந்தவர். ஆண்டவர் இயேசுவை தன் இறுதி நம்பிக்கையாகக் கருதி, அவரை நாடி வந்தார். “மகளே தைரியமாயிரு” என்று தைரியப்படுத்துகிறார். முழுமையான விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்.

நீங்களும் நெடுநாள் நோயினால் மிகுந்த வருத்தத்தோடே, பிறரால் ஒதுக்கப்பட்டவர்களாக, நேசத்துக்குரியவர்களின் வெறுப்புக்கு உள்ளானவர்களாக வாழ்ந்து வரலாம். உங்கள் நோயினிமித்தம் உங்கள் செல்வங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கலாம், கலங்காதீர்கள்! அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார் (விப 23:25) என்று நமக்கு வாக்களித்திருக்கிறார்.

ஆதலால் நம் ஆண்டவர் இயேசுவால் உங்களை எப்பெரிய நோயினின்றும் நலம்பெறச்செய்ய முடியுமென்று விசுவாசியுங்கள். நிச்சயமாகவே நலம் பெறுவீர்கள்.

ஆண்டவர் இயேசுவையே உங்கள் இறுதி நம்பிக்கையாக உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் எகிப்தியருக்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன் மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் (விப 15:26).

அருட்பணி. ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம்,

உண்ணாமலைக்கடை.
Tags:    

Similar News