ஆன்மிகம்

நவலூர் புனித அடைக்கல அன்னை ஆலய தேர் பவனி

Published On 2019-05-13 04:00 GMT   |   Update On 2019-05-13 04:00 GMT
மணிகண்டம் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டில் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடந்தது.
மணிகண்டம் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டில் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டின் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை ஆலயத்தின் அருகே உள்ள கொடிமரத்தில், திருச்சி சலேசிய மாநில தலைவர் அருட்தந்தை அந்தோணி ஜோசப், அன்னையின் திருக்கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நடத்தினார்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் ஆலயத்தில் பல்வேறு அருட்தந்தையர்கள் மறையுரை மற்றும் திருப்பலி நடத்தினார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏசுவின் திருப்பாடுகளின் நிகழ்ச்சியான பாஸ்கா நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் வண்ண மின் விளக்குகள், தோரணங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட 4 தேர்கள் பவனி நடந்தது.

இதில் முதல் தேரில் செபஸ்தியாரும், 2-வது தேரில் ஆரோக்கிய அன்னையும், 3-வது தேரில் அடைக்கல அன்னையும், 4-வது தேரில் உயிர்த்த ஏசு ஆண்டவரும் எழுந்தருளினர். தொடர்ந்து 4 தேர்களும் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தன. இதைதொடர்ந்து நேற்று காலை தேரடி திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்கும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

இதில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், கருமண்டபம், அம்மாபேட்டை, மணப்பாறை, திருச்சி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் மணியக்காரர்கள் தேவராஜ், சகாயராஜ் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதர, சகோதரிகள், கொத்து மணியக்காரர்கள், இளையோர் இயக்கம் மற்றும் அம்சம்பங்கு இறைமக்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News