ஆன்மிகம்
மைக்கேல்பட்டியில் இருந்து பூண்டி மாதா பேராலயத்துக்கு தவக்கால நடையணம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பூண்டிமாதா பேராலயத்துக்கு சிலுவையுடன் தவக்கால நடைபயணம்

Published On 2019-04-13 03:31 GMT   |   Update On 2019-04-13 03:31 GMT
தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் இருந்து பூண்டி மாதா பேராலயத்துக்கு சிலுவையுடன் கிறிஸ்தவர்கள் தவக்கால நடைபயணத்தை தொடங்கினர். நடை பயணத்தை பிஷப் அந்தோணிசாமி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதில் இருந்து பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால சிறப்பு திருப்பலிகள் தினமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தவக்காலத்தில் முதல் வெள்ளியன்று ஏசுநாதரின் பாடுகளை விளக்கும் சிலுவைப்பாதை நடைபெற்றது. நேற்று மாலை பூண்டி மாதாபேராலயத்தில் ஏசுநாதர் சுமந்த சிலுவையி்ன் ஒரு பகுதி உள்ள சிலுவை மைக்கேல்பட்டி புனித மைக்கேல் ஆலய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து மைக்கேல்பட்டியில் இருந்து சிலுவையுடன் தவக்கால நடைபயணம் தொடங்கியது. கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி சிலுவையை புனிதம்செய்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மைக்கேல்பட்டியில் தொடங்கிய தவக்கால நடைபயணம் ஒன்பத்துவேலி, திருக்காட்டுப்பள்ளி, புதுச்சத்திரம் வழியாக பூண்டி மாதா பேராலயத்தை அடைந்தது. நடைபயணத்தின் போது எடுத்து வரப்பட்ட சிலுவையுடன் சிறப்புதிருப்பலி பேராலயத்தில் குடந்தை பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது. நடைபயணம் மற்றும் திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.. 
Tags:    

Similar News