சினிமா

நடிகர் சங்க தேர்தல் - விஷாலை எதிர்த்து களமிறங்கும் புதிய அணி

Published On 2019-05-13 04:47 GMT   |   Update On 2019-05-13 04:47 GMT
நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது பதவியில் இருக்கும் விஷால், நாசருக்கு எதிராக புதிய அணி களம் காண இருக்கிறது.
நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.

தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை (14-ந்தேதி) சென்னையில் நடக்க உள்ளது. அதன்பிறகு தேர்தல் அதிகாரி தேர்தல் நடத்துவதற்கான தேதி, மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.



தேர்தலில் விஷால் அணியினர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நாசரும், விஷாலும் தற்போது வகிக்கும் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் பலர் அதே பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

எதிர் அணியினர் ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக நடிகர் உதயா ஏற்கனவே அறிவித்து உள்ளார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News