சினிமா

நீயா 2-வில் கருநாகத்தை தேர்ந்தெடுத்த காரணம் குறித்து இயக்குனர் விளக்கம்

Published On 2019-05-05 08:27 GMT   |   Update On 2019-05-05 08:27 GMT
ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2-வில் கருநாகம் தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். #Neeya2
ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம் 'நீயா2'. இவர்களைத் தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கருநாகம். பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் கிராபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் வைத்திருக்கிறார்கள். 

இதுகுறித்து இயக்குனர் எல்.சுரேஷ் கூறும்போது, ‘பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.

முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.



இப்படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும். மேலும், 'நீயா' படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இப்படத்தில் கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

அதேபோல், 'நீயா' படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. 'பெயர்', 'பாம்பு' மற்றும் 'ஒரே ஜீவன்' பாடல் இவை மூன்று தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது.

இவ்வாறு இயக்குனர் எல்.சுரேஷ் கூறினார்.
Tags:    

Similar News